Monday, 28 August 2017

நா சாகப்போறேன்

ஒருத்தனுக்கு வாழ்க்கையே வெறுத்துப்போய் 
சோகமா இருக்கான்...!
சொல்லப்போனா அவனுக்கு வாழ்வே பிடிக்கல...!!

எப்பப்பார்த்தாலும்
அவனோட உள்மனசு
அவன்கிட்ட சொல்லிக்கிட்டே இருக்கும்

“பேசாம செத்துட்டா... நமக்கு 
எந்த பிரச்சினையும் இருக்காதுலேன்னு...!”

இப்படித்தான் ஒருநாள்
அவனோட உள்மனசு சொல்லுச்சின்னு
தற்கொலை பண்ணிக்க கிளம்பிட்டான்...!!

உச்சு மலை...!
அங்க இருந்து கீழ விழுந்தா,
ஒரு எலும்பும் மிஞ்சாது..!!

இப்ப அந்த இடத்துல நின்னு
குதிக்கிறதுக்காக நிக்கிறான்..!!

அப்ப...
அந்த வழியா வந்த ஒரு பெரியவர் 
அவன்கிட்ட கேட்கார்...

இங்க என்னப்பா பண்ணிக்கிட்டு இருக்க..?

ம்ம்ம்... சாகப்போறேன்...!!

எதுக்கு..?

வாழப்பிடிக்கால..!!

ஏன்..?

என்னைய  யாருக்குமே பிடிக்கல...!!
என்றதும்

ஓ... இதுதான் உன் பிரச்சசினையா...?

ஆமா...!!

அப்ப தாராளமா குதிச்சி செத்துடு..! 
என்று அவர் சொல்ல

இவனுக்கு ஒன்னும் புரியல..!
அப்படியே ஒரு நிமிஷம்
அந்த பெரியவர பார்த்தபடி இருக்கான்...!!

சரி... உனக்கு யாரெல்லாம் பிடிக்கும்..?
என்று கேட்க
அவன் வாயில் இருந்து பதில் வரல...

சரி.. உனக்கு என்னலாம் பிடிக்கும்..?
அதுக்கும் பதில் வரல...
யோசிக்கிறான்..!!

பிடிக்காத விசயத்த
டக்கு... டக்கு... சொல்லிட்டு
பிடிச்ச விஷயத்தை கேட்டா இப்படி யோசிக்கிற...!!
இது தான் உன் பிரச்சினையே...

முதல்ல இத போய் சரிபண்ணிட்டு..
அப்புறமா வந்து சாகு...!!!

என்று சொல்லிட்டு மெல்ல நடந்து போக ஆரம்பிச்சிட்டார்...
அந்த பெரியவர்...!!

Written by க.முரளி (spark MRL K)

Sunday, 6 August 2017

மரணப்படுக்கை

இன்று அந்த  வீட்டுல ஒரே கூட்டம்...
சாஸ்திர சம்பிரதாயமெல்லாம் முடிஞ்சி
எல்லோரும் காத்திருக்காங்க...!

ஒரு இரண்டு வாரத்துக்கு முன்னாடி...

இதுவரைக்கும் எட்டிக்கூட பார்க்காத
சில சொந்தங்கள்... அந்த வீட்ட
வந்து ஒரு எட்டு பார்த்துட்டு போகுது...

வந்து போகுற சொந்தங்கள் அனைத்தும்
போகும் போது...
சொல்லிட்டு போகும் ஒரு வார்த்தை

“இப்படியே எத்தன நாளைக்குத்தான் 
வச்சிருக்க போறீங்க..
இதுக்கப்புறம் வாழ்ந்து என்ன பண்ண போகுதுன்னு...

அடிக்கடி அந்த வீட்டு பெண்களிடமிருந்து
ஒரு வார்த்தை வரும்...

“எப்ப பாரு ஒரே இருமல் சத்தம்...
நிம்மதியா ஒரு டிவி பார்க்க முடியிதான்னு...”

இந்த பேச்சையெல்லாம் கேட்டுக்கிட்டு
அந்த வீட்டின் ஒரு தனி அறையில 
ஒரு பழைய பாய்விருச்சி படுத்திருக்கு
அந்த உசுரு
இப்பவோ அப்பவோன்னு

எந்திருச்சி நடக்க அதுக்கு துப்பில்ல...!
பெத்து வளர்த்தவன்னு அத பார்க்க வக்கில்ல...!!

தவிச்ச வாயிக்கு...
தண்ணீன்னு உள்ள இருந்து சத்தம் கேட்ட...

ஏய் கிழவி பேசாம இருக்க மாட்ட...
சும்மா சும்மா தண்ணி குடிச்சி
பாயெல்லாம் மோண்டு வச்சிருக்க...
உனக்கு பீ.. மூத்திரம் அள்ளியே
எங்களால ஒரு வாய்
சோறு திங்க முடியலன்னு
வெளியில இருந்து சத்தம் உள்ள போகும்...

பெத்த பிள்ளைங்களே இப்படி பேசுதுன்னு
ஒவ்வொரு நாளும்
யோசிச்சி யோசிச்சி ஒருநாள்
அந்த கிழவி செத்துப்போச்சி...

அது செத்து இன்னைய்யோட
ரெண்டு வாரம் ஆச்சி...
இன்று பதினாறாம் நாள் காரியம்...

உயிரோட இருக்கும் போது
தண்ணி தர யோசிச்ச குடும்பம்
செத்ததுக்கு அப்புறம்
அதுக்குபிடிச்சதெல்லாம் வாங்கிவச்சி
சாமி கும்பிட்டு காத்திருக்கு...

காக்கா வந்து அத சாப்படனுமாம்...!
அப்பத்தான் கிழவியே வந்து சாப்பிட்ட மாதிரியாம்..!!

சாகுறதுக்கு முன்னாடி...
ஓட்டு மேல காயவச்ச வத்தல திங்கவந்த
காக்காவ விரட்டுற மாதிரி விரட்டிட்டு...
செத்ததுக்கு அப்புறம்...
அதே காக்காவுக்கு சோறு போட்டா...
அந்த ஆத்மா சாந்தி அடைஞ்சிடுமா...?

Written by க.முரளி (spark MRL K)