Sunday, 8 October 2017

அதே இடம்

ரெண்டு பேர் டூர் போகணும்னு
பிளான் பண்ணுறாங்க...

அவங்க இருக்கிற இடத்துல
ஒரே வெயில் அடிக்குதாம்...
அதுனால ஒரு மலைப்பகுதியில்
ஒரு நாலு நாள் இருந்துட்டு வரலாம்னு...

பிளான் பண்ணுன மாதிரியே
சொன்ன நேரத்துக்கு ரெண்டு பேரும் 
ஒன்னுகூடி...
தேவையான பொருட்களை எடுத்துக்கிட்டு கிளம்பிட்டாங்க...

அதுல ஒருத்தன்
வளவளன்னு பேசிக்கிட்டே இருப்பான்...!
இன்னொருத்தன்
தேவைப்பட்டா மட்டும் பேசுவான்..!!

அவங்க இருக்குற இடத்துல இருந்து
அஞ்சு மணிநேரம் பயணம் பண்ணுனா
மலையடிவாரத்தை அடைஞ்சிடலாம்...

நேரம் ஆகிக்கிட்டே போகுது
மலையடிவாரமும் வந்துடிச்சி...
வண்டி மெல்ல மெல்ல
மலைமேல ஏற ஆரம்பிக்குது...

குறிப்பிட்ட ஒரு இடம் வந்ததும்
அதுல வளவளன்னு பேசுறவன் சொல்றான்..

“அடடா குளிர் காற்று
சும்மா சில்லுன்னு அடிக்குதுல”
என்று...

மலைப்பகுதின்னா அப்படித்தான் டா இருக்கும்...
இயற்கை தந்த வரம்னு

இன்னும் சிறுது நேர பயணத்தில்
மலை உச்சியை அடைந்த அவர்கள்
சொன்ன மாதிரியே அங்க தங்குராங்க...

இரண்டாவது நாள் முடியிற நேரத்துல
அவன் சொல்றான்

“மச்சான் இதுக்கு மேல இங்க இருந்தா ஜன்னி வந்து செத்துடுவேன்..
நாம நம்ம ஊருக்கு கிளம்புறது தான் நல்லதுன்னு...

சரி... உன் இஷ்டம்னு
ரெண்டு பேரும் கிளம்புறாங்க...

வண்டியும் இப்ப
மலையில் இருந்து மெல்ல இறங்கி வருது...
ரெண்டு நாளைக்கு முன்னாடி வந்த அதே இடம்...
இப்ப அதே வாய் சொல்லுது..

“மலைய விட்டு இறங்க இறங்க
வெக்க காத்து அடிக்க ஆரம்பிச்சிடுச்சில...”
என்று

ஏன் டா.. ரெண்டு நாளைக்கு முன்னாடி
இதே இடம்,
இதே நேரம்,
இதே அளவு காற்றுதான் அடிச்சது...

அன்னைக்கு குளிர நோக்கி போகும் போது
இங்க குளிர் அடிக்க ஆரம்பிச்சது..
இன்னைக்கு வெயிலை நோக்கி போகும் போது
வெக்க அடிக்குதா..?

***********
உண்மையில் நாம் எதை நோக்கி போகின்றோமோ...

அதைப்பொருத்து தான் நம் மனதும் செயல்படும்..!!

written by க.முரளி (spark MRL K)
--------------------------------------------------------

Sunday, 1 October 2017

எமலோகம்



ஒருத்தன் தன்னோட கார்ல வேகமா போறான்..

அடுத்த அரைமணி நேரத்துல,
ஒரு குறிப்பிட்ட இடத்துல
அவன் இருந்தே ஆகணும்...!

இரவு நேரம்... போகும் போது..
எதிர்பார்க்காத விதமா...
ஒருத்தன் குறுக்க வர... இவனும்...
தெரியாத்தனமா வந்தவன் மேல ஏத்திடுறான்...!

ஏத்துன வேகத்துல
பயந்து போய் நிக்காம போறான்...

அடிபட்டவன காப்பாத்தனும்னு தோணுச்சோ இல்லையே...
வண்டிய நிறுத்தினா சிக்கிருவோம்னு தோணுச்சி..!!

அவனுக்குள்ள ஒரே பயம்...!

யாராவது இத பாத்திருந்தா...?
வண்டி நம்பர நோட் பண்ணியிருந்தா...?
ஒருவேளை அவன் செத்துப்போயிட்டா...?
நம்ம நிலைமை என்ன ஆகுறது..?
இல்லை இல்லை லேசா தான இடிச்சிருக்கோம்னு

குழப்பத்துலேயே வண்டி ஓட்டி
எதுக்க இருந்த மரத்துல தெரியாம மோதி
ஸ்பார்ட்டுலேயே செத்துப்போய்டுறான்.

மறுநாள், ரெண்டு பேரும் செத்துப்போய்
எமலோகத்துல மீட் பண்றாங்க...

அவனுக்கு இவன் தான்
கார் ஏத்திக்கொன்னதுன்னு தெரியாது...!
இவனும் இருட்டுல அவன் முகத்த பார்க்கல..!!
ரெண்டுபேரும் சகஜமா பேசிக்கிறாங்க

அப்ப கார்ல வந்தவன் கேட்குறான்...
ஆமா நீங்க எப்படி செத்தீங்க சார்..?

அதுவா... நாம்பாட்டுக்கு போய்ட்டு இருந்தேன்
எங்கிருந்தோ வந்த ஒருத்தன்
என் வாழ்க்கையில விளையாண்டுட்டான்...!
ஒருமணி நேரம் துடிதுடிச்சி செத்தேன்...!!
பத்தடி தள்ளி தான் ஆஸ்பத்திரி,
எல்லாம் என் நேரம்...!

என்றவாறே
ஆமா நீங்க எப்படி செத்தீங்க சார்...?
என்று கேட்க

அது பெரிய கதை சார்....
நானும்... நாம்பாட்டுக்கு போய்க்கிட்டு தான் இருந்தேன்...
எவன்னே தெரியல
திடீர்னு ஒருத்தன் என்வாழ்க்கையில
குறுக்க வந்துட்டான்..
நான் ஸ்பார்ட்லேயே காலி...
என்று சொல்ல

உடனே, கார்ல அடிபட்டவன் சொல்றான்
மனித வாழ்க்கையில...
எது எப்ப நடக்குன்னே சொல்லமுடியாது சார்..!
எல்லாம் விதி...!! என்றதும்

என்ன சார் பண்றது...
விதி இப்படியா விளையாடனும்...!

என்று பேசிக்கொண்டே சித்திரகுப்தன் முன்னாடி
ரெண்டு பேரும் வரிசைல நிற்க...
வரிசை மெல்ல நகருது...

இவனுங்க பேசுறத பார்த்த எமனுக்கு
ஒரே ஆச்சர்யம்...!!
முன்ன பின்ன பழக்கம் இல்லைனாலும்
செத்ததுக்கு அப்புறம்
இவ்வளவு ஒற்றுமையா இருக்காங்களேன்னு..

அதுனால...
இவங்களுக்குன்னு ஏதாவது ஆசையிருந்தா
அத நாம எப்படியாவது...
நிறைவேத்தியாகனும்னு நினைக்கார்...

இப்ப இவனுங்க ரெண்டு பேரும்
வரிசையில் வந்து நிற்கிறாங்க...

அப்ப எமதர்மராஜா சொல்றார்...

நீங்க ரெண்டு பேரும்
எதிர்பார்க்காத விதமா செத்து
இங்க வந்துட்டீங்க...
உங்களுக்குன்னு கடைசி ஆசை
எதாவது இருந்தா சொல்லுங்கன்னு
கேட்கர்

அதுக்கு அவனுங்க ரெண்டு பேரும்
சொன்ன பதில்...

என் சாவுக்கு மட்டும் காரணமானவன்
என் கையில கிடைச்சா
அவன அடிச்சே கொல்லனும் சொல்ல...

அப்பத்தான்
எமதர்மராஜாவுக்கே ஒரு விஷயம் புரிஞ்சது

மனிதர்களின்
லட்சியங்களை கூட நிறைவேற்றிடலாம்..!
ஆசைகளை நிறைவேற்றுவது கடினம்னு..!!

********************

இப்படித்தான் ஊருக்குள்ள பாதிப்பேர்
நிறைவேறாத ஆசையோட,
நடைபிணமாக சுத்திக்கிட்டு இருக்கானுங்க...!

written by க.முரளி (sprak MRL K)