Friday, 30 April 2021

என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா..?


தாய் தகப்பன் தெரியாத...,

அனாதைப் பெண் நான்...!


எப்படியோ வளர்ந்து...

இன்னைக்கு வயசுக்கும் வந்துவிட்டேன்...!!


இதுவரை துணையின்றி

தனியாகச் சுற்றித் திரிந்தாலும்...,


இனிவரும் காலங்களில்...,

இணை சேரும் நேரத்தில் மட்டும்...

எவனாவது ஒருவன் 

என்னுடன் வந்து ஒட்டிக்கொள்வான்...!


அதற்கு சாட்சியாய்...

எனக்குள் அவனது குழந்தையை  

உருவாக்குவான்...!


எனைப்போன்ற அனாதைகளின் 

அதிகபட்ச ஆசையே...

“தனக்கென்று ஒரு தனி வீடு”


இந்த உலகத்தில்.,

அது நடக்காத காரியம்..!!


நிச்சயமாக 

என்னைக் கட்டிக்க போறவனுக்கு...

எனக்காக அத கட்டிக்கொடுக்கணும்னு 

எண்ணமும் இருக்காது...! 

கட்டுறதுக்கு துப்புமிருக்காது...!! 


நிச்சயம் ஒரு நாள்... 

யாரென்றே தெரியாத உன் வீட்டில்...,

உன் சம்மதம் இல்லாமல்...!

உனக்கே தெரியாமல்...!!

என் குழந்தை பிறக்கும்...!!! 


அதற்கு நான் தான் முழுப்பொறுப்பு...!


ஆரம்பத்தில்....

உன் குழந்தைகளுடன்..., 

என் குழந்தையையும் 

பாசத்துடன் வளர்ப்பாய்...!


சிறிது நாளில் உண்மை தெரிந்து 

துரத்தி அடிப்பாய்...!!


எதற்கு நமக்குள் வீண் வம்பு...?!?!


என் தாய்... என்னைப் பெற்றதுபோல்...

நான் என் குழந்தையை 

"அநாதையாக்க" விரும்பவில்லை...!


என் குழந்தை... 

உன் சூட்டில் பிறப்பதை விட...,

உனக்கே பிறந்தால் மகிழ்ச்சியடைவேன்...!!! 


இந்த அனாதைக் குயிலின் காதலை...

உன் காக்கை இனம் ஏற்றுக்கொண்டால்...

நான் உன்னையே திருமணம் 

செய்துகொள்ள விரும்புகிறேன்...!!


நான்... உன்னிடம்

"குக்கூ" என்று கேட்கும்பொழுது...

நீ... என்னிடம்

"கா...கா..." என்று சம்மதம் தெரிவிப்பாய் 

என்ற  நம்பிக்கையில் நான்...!


இப்படிக்கு 

பெண் குயில்


இப்படி ஒரு நிகழ்வு நடந்தால்.. இனிவரும் காலங்களில்... எந்தக்குயிலும் கூடு கட்டத்தெரியாததால்... காக்கையின் கூட்டில் திருட்டுத்தனமா முட்டையிடாது என்று நினைக்கிறேன்.

Written by MURALI K