Saturday, 20 May 2017

சுயநலம்




நாம்பாட்டுக்கு சிவனேன்னு நடந்துபோனவன 
ஒரு கிழவி... 
ரொம்ப நேரமா உத்துப்பார்க்க வச்சிடுச்சி...

காரணம் அந்த கிழவி ஒரு கடைய
வெறிக்க வெறிக்க பாத்துக்கிட்டே இருந்தது..!.

அப்ப நேரம் இரவு பத்து மணிக்கு மேல இருக்கும்...
சாலையோர வாகனத்தின் எண்ணிக்கை கூட
குறைஞ்சிடுச்சி...

அந்த கிழவிய பார்த்தா
அப்படி ஒன்னும் பெருசா தெரியல...

அழுக்கு சட்டையும்.. பாவாடையுமா
கையில ஒரு துணிப்பையுடன் நிக்குது...
எப்படியும் பிச்சையெடுத்துதான்
தன்னோட வாழ்க்கைய ஓட்டுதுன்னு நல்லா புரியுது...

சரி... ,மணி இப்ப பத்துக்கு மேல ஆச்சி..
அந்த கிழவிக்கு இப்ப கண்டிப்பா பசிக்கும்...
அதுனால தான்...
சாப்பாட்டுக்கு ஏதாவது தருவாங்கன்னு
அந்த கடைய பாக்குதுன்னு நினைச்சா
அது ஒரு மெடிக்கல் சாப்...

கொஞ்ச நேரத்துல அந்த கடையையும் பூட்டி..
கடைக்காரர் வாசல்ல சூடம் ஏத்த
ஆரம்பிச்சிட்டார்...

அந்த கிழவி இப்ப கடைய பாக்குறத விட்டுட்டு
அந்த சூடத்த பார்க்க ஆரம்பிச்சிடுச்சி...
அது எப்ப அனையும்னு...

எனக்கு பொறுமை தாங்கல..
என்னதா பண்ண போறேன்னு...
அந்த கிழவிட்டேயே போய் கேட்டுடலாம்னு
இருந்துச்சி...

அதுக்குள்ளே அந்த சூடம் அணைஞ்சிடுச்சி..!

அணைந்த வேகத்துல அந்த கிழவி
கடைக்கிட்ட போய் வாசல்ல உக்காந்து...
தன்னோட பையில்... எதையோ தேடி
கடைசில மூடியில்லாத ஒரு பேனாவ எடுத்துச்சி...

எனக்கு இப்ப ஆர்வம்... இன்னும் அதிகமாச்சி...
என்ன செய்யப்போறாலோ அந்த கிழவின்னு..!

கொஞ்ச நேரம் அமைதியா எதியோ யோசிச்சவ
மறுபடியும் பையில எதையோ தேட ஆரம்பிச்சிட்டா...!!

எனக்கு அங்க நின்னு நின்னு
கால் வலியே வர ஆரம்பிச்சிடுச்சி...

கடைசீல கையில் சின்னதா ஒரு
விக்ஸ் டப்பாவ எடுத்து..
அந்த டப்பாவின் இடுக்குல இருக்குற
கொஞ்ச விக்ஸ்சையும் பேனாவின் முனையால்
நோண்டி எடுத்து...
தன்னோட காலுல தேச்சிட்டு...
நிம்மதியா படுத்து... ரெண்டு நிமிசத்துல குறட்டை விட்டு தூங்கிடுச்சி...

சரி... இனிமே இங்க நின்னு
என்ன புரோஜனம்...  கிளம்பலாம்னு 

நினைக்கும் போது... என்னோட கால் வலிக்கு
மருந்து வாங்கலாம்னு தோணுச்சி...

திரும்பி பார்த்தா
இருந்த ஒரு கடையும் பூட்டியாச்சி....!

வேற வழியில்லாமல்
எப்பொழுதும்போல் ஒரு சுயநலவாதியாக
நடந்துபோய் படுத்து தூங்கிட்டேன்
என்னோட அறையில..!!!


written by க.முரளி (spark MRL K)

No comments:

Post a Comment