ரெண்டு வெட்டி பசங்க...ஊர் ஒதுக்குப்புறமா இருக்குற
வாய்க்கால் பாலத்துல உக்காந்து...
வெட்டியா...
உலகத்துல நடக்குற
ஆச்சர்யமான விஷயத்தை பத்தி
ரொம்ப நேரமா பேசிக்கிட்டு இருக்காங்க...!
ஒருத்தன் சொல்றான்...
நேத்து ஒரு வீடியோ பார்த்தேன்...
ஒருத்தனுக்கு
ரெண்டு காலும் கையும் இல்ல...
ஆனா அவன் நம்மள மாதிரியே
எல்லா வேலையையும் பண்ணுறார்...
அதுக்கு அவன் சொல்றான்...
செம... கிரேட்ல...
எனக்குலாம் ஒரு கை உடைஞ்சாலும்
சரியாகுற வரைக்கும் வீட்டுல
பேசாம படுத்துக்குவேன்....
உடனே அவன்
இன்னொருத்தர்...
பத்து பதினைஞ்சி விசப்பாம்பை
கூண்டுல அடைச்சி வச்சி...
அதுக்குள்ளே தைரியமா இருக்காருடா...
பயப்படாம..!!
என்றதும் இவன் சொல்றான்...
உண்மையிலேயே அவரலாம் பாராட்டனும்...!
ஏன்னா...
பாம்ப கண்ட படையே நடுங்க்கும்னு சொல்லுவாங்க...!!
நம்மாலலாம் இத செய்ய முடியாதுப்பா..!!!
உடனே அவன்...
இது பரவாயில்ல...
ஒருத்தன் ஹெலிக்காப்டர்ல இருந்து
அப்படியே ஜாலியா குதிக்கிறான்...
கீழ தண்ணி பளபளன்னு இருக்கு...
அவன் குதிச்சி
தரையில போய் முட்டுற வரைக்கும்
தெளிவா தெரியுது...
என்றதும்... அது வெளிநாடுடா...
அப்படித்தான் தண்ணி இருக்கும்...
நா கோடி ரூபாய் கொடுத்தாலும்
நம்ம ஊர் தண்ணீல குதிக்க மாட்டேம்பா...
தண்ணியா இது சாக்கடை...
இத சுத்தம்பண்ண சொன்ன
நல்ல சரக்க போட்டு ஓப்பி அடிக்காங்க...
இந்தியாவே நாறிப்போய் கிடக்குது...!
என்று இவர்கள் பேசிக்கொண்டிருக்க...
இவர்கள் வீட்டு சாக்கடைத்தண்ணி
பாலத்துக்கு கீழ ஓடிக்கிட்டு இருக்கு...!!
எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்...!
நம்மால் முடியாத ஒரு காரியத்தை
ஒருத்தன் துணிந்து பண்ணுனா...
அவன கிரேட்டுன்னு சொல்றோம்...!!
ஆனா சாக்கடையில இறங்கி
சுத்தம் பண்றவரை ச்சீன்னு சொல்றோம்...!!
ஏன்...
நம்மால்...
சாக்கடையில் இறங்க முடியுமா...?
written by க.முரளி (spark MRL K)
எழுவதாம் கல்யாணம் முடிஞ்ச கைய்யோடஅன்று இரவு..
அந்த கிழவனும் கிழவியும்
தனியா தங்களுடைய அறையில
இதுவரை வாழ்ந்த வாழ்க்கையை
மெல்ல அசைபோட்டுப் பேசுறாங்க...
இருவரும் பேச பேச
நேரம் ஆகிக்கிட்டே போகுது...
இரவு நேரம்
ஊரே சத்தமில்லாம தூங்கிக்கிட்டு இருக்கு...
இவங்க ரெண்டு பேர் மட்டும்
சத்தம் போட்டு பேசிக்கிட்டு இருக்காங்க...
அந்த கிழவி தம்புருஷன்ட்ட சொல்ற..
ஏய்யா...
அதுக்குள்ளே இத்தன வருஷம் ஓடிப் போச்சில்ல..
என்றதும் கிழவன் ம்ம்ம் என்று சொல்ல...
ஆமா... என்ன மொதமொதல்ல பார்த்தது
எப்பன்னு நியாபகம் இருக்கா...!
என்றதும்... அது கிழவனுக்கு நியாபகம் இருந்தும்,
நினைவில்லாதது போல் மெல்ல யோசிக்க...!
உடனே கிழவி
எங்க ஆயா கடைக்கு
உங்க அய்யாவுக்கு மூக்குப்பொடி வாங்க
வருவீங்களே...
என்று சொல்லி முடிப்பதற்குள்..
கிழவனுக்கு எல்லாம் நினைவில் வந்துவிட்டதுபோல்
ஆமா... ஆமா...
அப்பக்கூட உன் ரெண்டு மூக்கையும்
ஒழுக விட்டுக்கிட்டே ஓரமா நின்னுட்டு இருப்பியே...
நீங்க மட்டும் என்னவாம்
ஓட்ட டவுசர் போட்டுக்கிட்டு
அங்கிட்டு இங்கிட்டும் சுத்திக்கிட்டு
இருக்கல..!!
அதலாம் இன்னமுமா நியாபகம் வச்சிருக்க...?
பின்ன எங்க அக்காவ
பொண்ணு பாக்க வந்துட்டு...
என்னத்தான் கட்டுவேன்னு அடம் பிடிச்சவராச்சே...
எப்படி மறக்க முடியும்...!!
உனக்கு ஒன்னு தெரியுமா...?
என்ன...?
அன்னைக்கு
நா உன்னத்தான் பொண்ணு பார்க்க வந்தேன்...!
எங்க வீட்டுலதான்
உங்க அக்காவ பார்க்க வந்தாங்க..!!
என்றதும் ஆச்சர்யத்தில்...
அந்த பாட்டி தாத்தாவின் கண்ணை பார்த்து
மெல்லிய குரலில்
உண்மையாவா....?
என்றதும் தாத்தா மெல்லியதாக சிரிக்க...
பாட்டி...
அப்புறம் என்னாச்சி..! என்று கேட்க...
ம்ம்ம்...அப்புறம் என்னென்னமோ ஆச்சி..
ஆனா உன்ன கட்டிக்கிட்ட
நாள்லருந்து இப்ப வரைக்கு
ஒன்னு சொல்லனும்னு தோணுது...
சொல்லவா...?
என்றதும்
பாட்டி தாத்தாவின் அருகில் வந்து
சரி.. சொல்லுங்க...
என்று சொல்ல
அந்த தாத்தா
மெல்ல வாய திறந்து மெதுவா சொல்றார்...
உனக்கு பதிலா உங்கக்காவைய்யே
கட்டிருக்கலாம்னு தோணுது...!!
அப்புறம் என்ன...
மெல்ல திறந்த தாத்தா வாய்...
இப்ப அய்யயோன்னு வேகமா திறக்க ஆரம்பிச்சிடுச்சி...!!!
written by க.முரளி (spark MRL K)
ஒரு முட்டாளும் புத்திசாலியும் தொலைதூர பயணத்துக்கு தயாராகுராங்க...
திரும்பி வர எத்தன நாள் ஆகும்னு
அவங்களுக்கே தெரியாது
வழிச்செலவுக்கு தேவையான
பணத்தையும் பொருளையும்
ஒரு மூட்டையில கட்டி
தயார் பண்ணிக்கிட்டாங்க...
புத்திசாலிய பொருத்தவரைக்கும்
இந்த முட்டாள் எப்பவும் தன்கூடவே
இருக்கணும்னு நினைப்பான்...!
காரணம் அவன் பண்ணுற முட்டாள்தனத்தால
மத்தவங்ககிட்ட எளிதில் புத்திசாளிங்கிற பெற எடுத்திடலாம்னு...!!
அந்த முட்டாள் எது செஞ்சாலும்
செய்யுறதுக்கு முன்னாடி
அந்த புத்திசாளிட்ட கேட்டுட்டுதான் பண்ணுவான்...!
காரணம்
நாமளும் ஒரு புத்திசாலியா மாறணும்னு...!!
பயணம் ஆரம்பம் ஆகுது..
புத்திசாலி புத்திசாலித்தனமா செய்யுறதா நினைச்சி...
அந்த முட்டாள்கிட்ட சொல்றான்...
இந்த பணமும் பொருளுள் இருக்குற மூட்டைய
என்ன விட உன்னாலதான் பத்திரமா பாத்துக்க முடியும்
அதுனால நீயே வச்சிக்கொன்னு...
அந்த முட்டாளும் சரின்னு தலையாட்டிட்டு
மூட்டைய தூக்கிட்டு நடக்க ஆரம்பிச்சிட்டான்...
போகுற வழியில
ஒரு சின்ன ஆற்றை கடக்க வேண்டிய
சூழ்நிலை வருது...
எப்படியும் இந்த ஆத்த கடக்குறதுக்குள்ள
இந்த மூட்டைய ஆத்துல விட்டாலும் விட்டுடுவானு
அந்த புத்திசாலி முட்டாள் கிட்ட சொல்றான்...
“இவ்வளவு நேரம் நீ தூக்கிட்ட...
உனக்கு உடம்பு வலிக்கும்ல
கொஞ்ச நேரம் நா சுமக்குறேன்...”
இவனும் சரின்னு கொடுத்துடுறான்...
அவனும் வாங்கிக்கிறான்...
ஆற்றை கடக்குற வரைக்கும்...
இன்னும் கொஞ்ச தூரம்
நடந்து போறாங்க...
அங்க ஒரு பெரிய ஆறு வருது...
தண்ணி அதுல வேகமா போகுது...
அத பார்த்த உடனே புத்திசாலிக்கு
கொஞ்சம் பயம் வந்துடுச்சி...
இதுல மூட்டைய தூக்கிட்டுப் போனா
ஆத்துல நாமளும் அடிச்சிட்டு போனாலும் போய்டுவோம்னு
முட்டாள் கிட்ட சொல்றான்..
இதுக்கு முன்னாடி நா எப்படி
ஆத்த கடந்து போனேனோ...
அதே மாதிரி இப்ப நீ போ...
இது உனக்கு ஒரு பயிற்சின்னு...
இதுல அந்த முட்டாள் ஆத்துல
இறங்குனானா இல்ல இறங்கலையான்னு தெரியல...!
ஆனா பலநேரம் நாம
அந்த ஆத்துல இறங்கிக்கிட்டுத் தான் இருக்கோம்...!!
ஒருத்தன் சொல்றான்றதுக்காக அத நாம செய்யக்கூடது...
நமக்கு என்ன தோணுதோ... அத செய்யணும்..
அப்பத்தான் வெற்றியும், தோல்வியும்
நம்மளையே சேரும்....!!
written by ✒க.முரளி (spark MRL K)