கற்பனையில் ஒரு சிறிய சிறுகதை
கிட்டத்தட்ட ஒரு 60 வருஷத்துக்கு முன்னாடி...
கருப்பாய்யிங்கற இளம்பெண்ணின் சாபத்தால்
இன்றும் வறட்சியின் உட்சத்துல இருக்குற
ஒரு குக்கிராமம்...!
சரியா நடுச்சாமம் ஒரு மணி இருக்கும்...
அந்த ஊரே கண் அசந்து...
நிம்மதியா தூங்கிட்டு இருக்கு...!!
விடிஞ்சா கல்யாணம்...
மாப்ள யோகராஜாவுக்கு கல்யாணத்துல
துளி கூட விருப்பம் இல்ல...
வீட்டுல எவ்வளவோ சொல்லிப்பார்த்தான்
ஆனா யாரும் கேட்கல..!!!
காரணம்....
இது அவங்க வீட்டுல ஏற்பாடு பண்ணுன
கல்யாணம் இல்ல..!.
ஊரே ஒன்னு கூடி முடிவெடுத்து
ஊரோட நன்மைக்காக நடத்துற
கட்டாய கல்யாணமாம்...!!!
இப்பக்கூட,
மாப்ள..., எங்கயும் ஓடிப்போயிடக்கூடாதுன்னு
தனியா ஒரு அறையில அடைச்சி வச்சிருக்காங்க...!
யாருமே அவன் பேச்ச கேட்காததுனால
செத்துப்போன தன்னோட தாத்தாவுக்கு
ஒரு லெட்டர் எழுதி வச்சிட்டு...
தானும் சாகலாம்னு முடிவெடுக்குறான்...!
அன்புள்ள தாத்தா மாடசாமிக்கு..,
உன் அருமை பேரன் யோகராஜா எழுதிக் கொள்வது.
அன்னைக்கு நீ மட்டும்...
காதலிச்ச கருப்பாயி பாட்டிய
கல்யாணம் பண்ணியிருந்திருந்தா...!!
எனக்கு இந்த நிலைமை வந்திருக்குமா..?
இப்ப ஒன்னும் கெட்டுப்போகல
விடிஞ்சா கல்யாணம்..!!
மாப்ள நா...
உயிரோட இருந்தாத்தான அது நடக்கும்னு
சாகப்போகும் போது
டக்குன்னு செத்துப்போன தாத்தா...
இவன் கண்ணு முன்னாடி வந்து....
இப்படி சாகுறது நம்ம வம்சத்துக்கே
அசிங்கம்டா.....!
இந்தக் கல்யாணம்லா ஒருநாள் கூத்து...!!
பேசாமா ஊர்க்காரங்க பேச்சக்கேட்டு
கல்யாணம் பண்ணிக்கோ...!!!
என்று கூற
அதைக்கேட்டு கடுப்பான யோகராஜா...
தாத்தா மாடசாமியை பார்த்து...
யோவ் தாத்தா...
உனக்கு மனசாட்சியே இல்லையா..?
எனக்கு உன்கிட்டப் பேசப் பிடிக்கல...!
முதல்ல... கருப்பாயி பாட்டிய வரச்சொல்லு...
நா பேசணும்..!! என்று சொல்ல
அதற்கு மாடசாமி...
அதுமட்டும் முடியாது... வேற எதுனாலும் கேளு..
என்று கூற
உடனே யோகராஜா... மாடசாமியிடம்
ஏன் முடியாது..? என்று கேட்க
அதான்... முடியாதுன்னு சொல்லிட்டேன்ல..!!
என்று மாடசாமி மறுப்புத் தெரிவிக்க....
அதா... ஏன் முடியாதுன்னு கேட்குறேன்ல..?
என்று கொஞ்சம் கோபமாக யோகராஜா கேட்க
ஒரு நிமிடம் அமைதியாக இருந்த மாடசாமி
யோகராஜாவிடம்
அதுக்கு... அவ புருஷன் சம்மதிக்கனும்டா...
நடுச்சாமத்துல அடுத்தவன் பொண்டாட்டி
கூட்டிட்டு வர சொல்றியே...
ஊர் உலகம் எங்கள தப்பா பேசாது..?
என்று கூற...
ஏவ் பெருசு...
உனக்கு செத்ததுக்கு அப்புறமும் குசும்பு அடங்கலைல..?
என்றதும்....
மாடசாமி சொல்ல ஆரம்பிக்கிறார்...
உயிரோட இருக்கும் போது...
அதுவும் அந்தக்காலத்துல...
வேற சாதிக்கார பிள்ளையா இருந்தாலும்...
கருப்பாயிக்கு இந்த மாடசாமின்னா உசுரு...
எங்க ரெண்டு பேரோட காதலுக்கு...
இந்த ஊர் தா முதல் எதிரி...
ஒருவேளை நாங்க ஒன்னு சேர்ந்துட்டா...
இந்த ஊருக்கே அசிங்கம்னு நினைச்சாங்க....
அதுனால நாங்க ரெண்டு பேரும்...
ஊரவிட்டு ஓடிப்போய்...
சந்தோஷமா வாழலாம்னு நினைச்சி
ஓடும்போது... கையும் களவுமா பிடிச்சி
ரெண்டு பேரையும் பிரிச்சி...
கொஞ்ச நாளைக்கு ஊரவிட்டே ஒதிக்கியும் வச்சிட்டாங்க.!!!
கொஞ்ச நாள்ல...
கருப்பாயிக்கு அவ மாமன் பையனையும்
கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க..!
அதுல கடுப்பான கருப்பாயி...
எங்க காதல பிரிச்ச இந்த கிராமமே...
மழை தண்ணி இல்லாம...
வறண்டு போய் சுடுகாடா மாறணும்னு...
சாபம் விட்டுட்டா...!!
கருப்பாயி ஒரு பச்சப் பத்தினிடா...!
அதா... சாபம் பளிச்சிடுச்சி...!!
என்று மாடசாமி யோகராஜாவிடம்
பொறுமையாக எல்லாத்தையும் கூறி முடிக்க...
உடனே யோகராஜா... தன் தாத்தாவிடம்
அதுக்கு நா என்ன பண்ணனும்..? என்று கேட்க
இந்த தாத்தனால ஏற்பட்ட சாபத்த
பேரன் நீ தா முடிச்சி வைக்கணும்...
என்று சொல்லி முடிப்பதற்குள்
யோவ்... இது உனக்கே நல்லா இருக்கா....
கருப்பாயி ஒரு பத்தினி....
அவ விட்ட சாபத்துக்காக...
ஊர்க்காரன் பேச்சக்கேட்டு...
ஏதோ ஊர் மேஞ்ச கழுதைய
கட்டி வைப்பானுங்க...
அத நா கட்டிக்கனுமா...?
என்று கோபத்தில் கத்தி முடிக்க...
இவ்வளவு நேரம் பேசுனதுல
விடிஞ்சே போச்சி....
இப்ப அந்த அறைக்கு வெளிய இருந்து
ஏம்ப்பா... பொண்ணு ரெடியாகிடுச்சி
மாப்ளைய கூட்டி வாங்க....
என்று ஊர்க்காரங்க சொல்ல
யோகராஜா... இனிமே., உன்னால தா...
இந்த ஊருக்கு யோகமே வரப்போகுது...!
மழை தண்ணி இல்லைனா...
ஒரு கழுதைக்கு கல்யாணம்பண்ணி வைக்கிறது
நம்ம ஊரோட நம்பிக்கை தான பேராண்டி
என்று தாத்தா கூற
ஏவ்...அது நம்பிக்கை இல்லையா..!
மூட நம்பிக்கை...!! என்று சொல்லி முடிக்க
வீட்டுக்கு வெளியே
மணப்பெண் கோலத்தில்
வெட்கபட்டபடி கனைத்துக் கொண்டிருந்தது
அந்தப் பெண்கழுதை..!!!
அன்னைக்கு எடுத்த கல்யாண போட்டோ
இன்னைக்கும் பல ஊர்ல மாட்டி வச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன்...
என்னைப் பார் யோகம் வரும்னு
Written by MURALI K (க.முரளி)
🙏🙏🙏
No comments:
Post a Comment