Monday, 12 July 2021

கருப்பாயி சாபம்...!


 கற்பனையில் ஒரு சிறிய சிறுகதை


கிட்டத்தட்ட ஒரு 60 வருஷத்துக்கு முன்னாடி...

கருப்பாய்யிங்கற இளம்பெண்ணின் சாபத்தால்  

இன்றும் வறட்சியின் உட்சத்துல இருக்குற 

ஒரு குக்கிராமம்...!


சரியா நடுச்சாமம் ஒரு மணி இருக்கும்... 

அந்த ஊரே கண் அசந்து... 

நிம்மதியா தூங்கிட்டு இருக்கு...!! 


விடிஞ்சா கல்யாணம்...

மாப்ள யோகராஜாவுக்கு கல்யாணத்துல 

துளி கூட விருப்பம் இல்ல... 


வீட்டுல எவ்வளவோ சொல்லிப்பார்த்தான் 

ஆனா யாரும் கேட்கல..!!! 


காரணம்.... 

இது அவங்க வீட்டுல ஏற்பாடு பண்ணுன 

கல்யாணம் இல்ல..!. 


ஊரே ஒன்னு கூடி முடிவெடுத்து 

ஊரோட நன்மைக்காக நடத்துற 

கட்டாய கல்யாணமாம்...!!! 


இப்பக்கூட, 

மாப்ள..., எங்கயும் ஓடிப்போயிடக்கூடாதுன்னு 

தனியா ஒரு அறையில அடைச்சி வச்சிருக்காங்க...!


யாருமே அவன் பேச்ச கேட்காததுனால 

செத்துப்போன தன்னோட தாத்தாவுக்கு 

ஒரு லெட்டர் எழுதி வச்சிட்டு... 

தானும் சாகலாம்னு முடிவெடுக்குறான்...! 


அன்புள்ள தாத்தா மாடசாமிக்கு.., 

உன் அருமை பேரன் யோகராஜா எழுதிக் கொள்வது. 

அன்னைக்கு நீ மட்டும்... 

காதலிச்ச கருப்பாயி பாட்டிய

கல்யாணம் பண்ணியிருந்திருந்தா...!!

எனக்கு இந்த நிலைமை வந்திருக்குமா..? 


இப்ப ஒன்னும் கெட்டுப்போகல 

விடிஞ்சா கல்யாணம்..!!

மாப்ள நா... 

உயிரோட இருந்தாத்தான அது நடக்கும்னு 

சாகப்போகும் போது  


டக்குன்னு செத்துப்போன தாத்தா... 

இவன் கண்ணு முன்னாடி வந்து....


இப்படி சாகுறது நம்ம வம்சத்துக்கே 

அசிங்கம்டா.....!

இந்தக் கல்யாணம்லா ஒருநாள் கூத்து...!!

பேசாமா ஊர்க்காரங்க பேச்சக்கேட்டு 

கல்யாணம் பண்ணிக்கோ...!!!

என்று கூற 


அதைக்கேட்டு கடுப்பான யோகராஜா... 

தாத்தா மாடசாமியை பார்த்து... 


யோவ் தாத்தா... 

உனக்கு மனசாட்சியே இல்லையா..?

எனக்கு உன்கிட்டப் பேசப் பிடிக்கல...!

முதல்ல... கருப்பாயி பாட்டிய வரச்சொல்லு... 

நா பேசணும்..!! என்று சொல்ல 


அதற்கு மாடசாமி... 

அதுமட்டும் முடியாது... வேற எதுனாலும் கேளு.. 

என்று கூற 


உடனே யோகராஜா... மாடசாமியிடம் 

ஏன் முடியாது..? என்று கேட்க 


அதான்... முடியாதுன்னு சொல்லிட்டேன்ல..!! 

என்று மாடசாமி மறுப்புத் தெரிவிக்க.... 


அதா... ஏன் முடியாதுன்னு கேட்குறேன்ல..? 

என்று கொஞ்சம் கோபமாக யோகராஜா கேட்க 


ஒரு நிமிடம் அமைதியாக இருந்த மாடசாமி 

யோகராஜாவிடம் 


அதுக்கு... அவ புருஷன் சம்மதிக்கனும்டா...

நடுச்சாமத்துல அடுத்தவன் பொண்டாட்டி 

கூட்டிட்டு வர சொல்றியே... 

ஊர் உலகம் எங்கள தப்பா பேசாது..? 

என்று கூற... 


ஏவ் பெருசு... 

உனக்கு செத்ததுக்கு அப்புறமும் குசும்பு அடங்கலைல..?

என்றதும்....  


மாடசாமி சொல்ல ஆரம்பிக்கிறார்...


உயிரோட இருக்கும் போது... 

அதுவும் அந்தக்காலத்துல... 

வேற சாதிக்கார பிள்ளையா இருந்தாலும்... 

கருப்பாயிக்கு இந்த மாடசாமின்னா உசுரு... 


எங்க ரெண்டு பேரோட காதலுக்கு... 

இந்த ஊர் தா முதல் எதிரி...


ஒருவேளை நாங்க ஒன்னு சேர்ந்துட்டா... 

இந்த ஊருக்கே அசிங்கம்னு நினைச்சாங்க.... 


அதுனால நாங்க ரெண்டு பேரும்... 

ஊரவிட்டு ஓடிப்போய்... 

சந்தோஷமா வாழலாம்னு நினைச்சி 

ஓடும்போது... கையும் களவுமா பிடிச்சி 

ரெண்டு பேரையும் பிரிச்சி... 

கொஞ்ச நாளைக்கு ஊரவிட்டே ஒதிக்கியும் வச்சிட்டாங்க.!!!


கொஞ்ச நாள்ல... 

கருப்பாயிக்கு அவ மாமன் பையனையும்

கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க..!


அதுல கடுப்பான கருப்பாயி... 

எங்க காதல பிரிச்ச இந்த கிராமமே... 

மழை தண்ணி இல்லாம... 

வறண்டு போய் சுடுகாடா மாறணும்னு... 

சாபம் விட்டுட்டா...!!


கருப்பாயி ஒரு பச்சப் பத்தினிடா...! 

அதா... சாபம் பளிச்சிடுச்சி...!! 

என்று மாடசாமி யோகராஜாவிடம் 

பொறுமையாக எல்லாத்தையும் கூறி முடிக்க... 


உடனே யோகராஜா... தன் தாத்தாவிடம் 

அதுக்கு நா என்ன பண்ணனும்..? என்று கேட்க


இந்த தாத்தனால ஏற்பட்ட சாபத்த 

பேரன் நீ தா முடிச்சி வைக்கணும்...

என்று சொல்லி முடிப்பதற்குள்  


யோவ்... இது உனக்கே நல்லா இருக்கா.... 

கருப்பாயி ஒரு பத்தினி.... 

அவ விட்ட சாபத்துக்காக... 

ஊர்க்காரன் பேச்சக்கேட்டு... 

ஏதோ ஊர் மேஞ்ச கழுதைய 

கட்டி வைப்பானுங்க... 

அத நா கட்டிக்கனுமா...? 

என்று கோபத்தில் கத்தி முடிக்க... 


இவ்வளவு நேரம் பேசுனதுல 

விடிஞ்சே போச்சி.... 


இப்ப அந்த அறைக்கு வெளிய இருந்து 


ஏம்ப்பா... பொண்ணு ரெடியாகிடுச்சி 

மாப்ளைய கூட்டி வாங்க....

என்று ஊர்க்காரங்க சொல்ல 


யோகராஜா... இனிமே., உன்னால தா... 

இந்த ஊருக்கு யோகமே வரப்போகுது...!

மழை தண்ணி இல்லைனா... 

ஒரு கழுதைக்கு கல்யாணம்பண்ணி வைக்கிறது 

நம்ம ஊரோட நம்பிக்கை தான பேராண்டி 

என்று தாத்தா கூற 


ஏவ்...அது நம்பிக்கை இல்லையா..!

மூட நம்பிக்கை...!! என்று சொல்லி முடிக்க 


வீட்டுக்கு வெளியே 

மணப்பெண் கோலத்தில் 

வெட்கபட்டபடி கனைத்துக் கொண்டிருந்தது  

அந்தப் பெண்கழுதை..!!!


அன்னைக்கு எடுத்த கல்யாண போட்டோ 

இன்னைக்கும் பல ஊர்ல மாட்டி வச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன்...

என்னைப் பார் யோகம் வரும்னு 


Written by MURALI K (க.முரளி)


🙏🙏🙏

Friday, 30 April 2021

என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா..?


தாய் தகப்பன் தெரியாத...,

அனாதைப் பெண் நான்...!


எப்படியோ வளர்ந்து...

இன்னைக்கு வயசுக்கும் வந்துவிட்டேன்...!!


இதுவரை துணையின்றி

தனியாகச் சுற்றித் திரிந்தாலும்...,


இனிவரும் காலங்களில்...,

இணை சேரும் நேரத்தில் மட்டும்...

எவனாவது ஒருவன் 

என்னுடன் வந்து ஒட்டிக்கொள்வான்...!


அதற்கு சாட்சியாய்...

எனக்குள் அவனது குழந்தையை  

உருவாக்குவான்...!


எனைப்போன்ற அனாதைகளின் 

அதிகபட்ச ஆசையே...

“தனக்கென்று ஒரு தனி வீடு”


இந்த உலகத்தில்.,

அது நடக்காத காரியம்..!!


நிச்சயமாக 

என்னைக் கட்டிக்க போறவனுக்கு...

எனக்காக அத கட்டிக்கொடுக்கணும்னு 

எண்ணமும் இருக்காது...! 

கட்டுறதுக்கு துப்புமிருக்காது...!! 


நிச்சயம் ஒரு நாள்... 

யாரென்றே தெரியாத உன் வீட்டில்...,

உன் சம்மதம் இல்லாமல்...!

உனக்கே தெரியாமல்...!!

என் குழந்தை பிறக்கும்...!!! 


அதற்கு நான் தான் முழுப்பொறுப்பு...!


ஆரம்பத்தில்....

உன் குழந்தைகளுடன்..., 

என் குழந்தையையும் 

பாசத்துடன் வளர்ப்பாய்...!


சிறிது நாளில் உண்மை தெரிந்து 

துரத்தி அடிப்பாய்...!!


எதற்கு நமக்குள் வீண் வம்பு...?!?!


என் தாய்... என்னைப் பெற்றதுபோல்...

நான் என் குழந்தையை 

"அநாதையாக்க" விரும்பவில்லை...!


என் குழந்தை... 

உன் சூட்டில் பிறப்பதை விட...,

உனக்கே பிறந்தால் மகிழ்ச்சியடைவேன்...!!! 


இந்த அனாதைக் குயிலின் காதலை...

உன் காக்கை இனம் ஏற்றுக்கொண்டால்...

நான் உன்னையே திருமணம் 

செய்துகொள்ள விரும்புகிறேன்...!!


நான்... உன்னிடம்

"குக்கூ" என்று கேட்கும்பொழுது...

நீ... என்னிடம்

"கா...கா..." என்று சம்மதம் தெரிவிப்பாய் 

என்ற  நம்பிக்கையில் நான்...!


இப்படிக்கு 

பெண் குயில்


இப்படி ஒரு நிகழ்வு நடந்தால்.. இனிவரும் காலங்களில்... எந்தக்குயிலும் கூடு கட்டத்தெரியாததால்... காக்கையின் கூட்டில் திருட்டுத்தனமா முட்டையிடாது என்று நினைக்கிறேன்.

Written by MURALI K

Wednesday, 17 March 2021

என்ன அடிச்சா... அடிச்ச அவனுக்குத்தான் வலிக்கனும்...!!!


 ஒரு மனிதன் இன்னொரு மனிதனுடைய,  

உயிர் பிரியும் போது... 

அவனோட கடைசி ஆசைய 

நிறைவேத்த நினைக்கின்ற மாதிரி...!!


ஆரம்ப காலத்துல.... கடவுள்... 

எல்லா உயிரையும் படைக்கும் போது.... 

அந்த உயிருக்குன்னு... 

ஏதாவது ஆசை இருக்கான்னு தெரிஞ்சி...

அத நிறைவேத்த நினைக்கிறார்... 

 

அப்படி இருக்கும் போது ஒரு நாள் 

ஒரு மூணு உயிர கூப்ட்டு 


உங்க மூணு  பேரையும்...

பூமிங்கற கிரகத்துல... 

உயிரினமா படைக்கப் போறேன்...!


அங்க உங்கள விட..., 

பலம் வாய்ந்த உயிரினமும் இருக்கும்....! 

பலம் குறைந்த உயிரினமும் இருக்கும்...!!

அதேசமையம்.... 

படு மோசமான மனித இனமும் இருக்கு...!!!


எப்படியும்... நீங்க... 

பிறந்ததுல இருந்து... சாகுற வரைக்கும்... 

போராடித்தான் வாழ்க்கைய ஓட்டனும்..! 

வேற வழியே இல்ல...!!


அதுனால... 

உங்களுக்குன்னு ஏதாவது ஆசை இருந்தா...?

அத என்கிட்ட சொல்லுங்க... 

நா... நிச்சயம் நிறைவேத்தி வைக்கிறேன்னு 

சொல்ல....

 

முதல் உயிர் சொல்லுது...

 

நா தேவையில்லாம எந்த உயிரினத்துக்கும் 

தொந்தரவு கொடுக்க மாட்டேன்...!

ஆனா... என்ன யாராவது அடிக்க வரும்போது...

நா... என்னோட உயிரை காப்பாத்துறதுக்காக 

அவங்கள கடிச்சா...  

அவங்க உயிர் பிழைக்கிறதே 

கஷ்டமான காரியமா இருக்கணும் 

என்று சொல்ல... 


உடனே கடவுள்.... 

உன்னோட ஆசை நியாயமானது தான்...!

நீ ரொம்ப நல்லவனா இருக்க...!! 

அதுனால உனக்கு... 

நல்ல பாம்புன்னு பேரு வைக்கிறேன்...!


இனிமே... பூமியில 

உன்னோட விருப்பப்படி நீ பிறக்கலாம் 

என்று கூற


இப்ப  இரண்டாவது உயிர் சொல்லுது...


நா யாரையும் கடிக்கலாம் விரும்பல...!

ஆனா... தப்பு பண்றவங்கள

என்ன வச்சி..., அடிச்சி அடிச்சே திருத்தணும்...!! 

என்று சொல்ல  


உடனே கடவுள்.... 

உன்னோட ஆசையும் நியாயமானது தான் 

உனக்கு பிரம்புக் குச்சின்னு பேர் வச்சி.... 

பிரம்புத் தாவரமா படைச்சிடுறேன்...!

என்று கூற...


இத ரெண்டையும் கேட்ட மூணாவது உயிர்...  


இவனுங்க ரெண்டு பேரும் லூசுப்பயலுக... 

கடவுளே நம்மகிட்ட இறங்கி வந்து கேட்கும் போது... 

இப்படியா கேட்பானுங்க...?

என்று சொல்லியபடி 


நா யாரவேனும்னாலும் கடிப்பேன்...! 

ஆனா... என்ன யாராவது அடிச்சா...,

அடிச்ச அவனுக்குத்தான் வலிக்கணும்... 

என்று... 

தன்னோட ஆசைய மூணாவது உயிர் சொல்ல...


அதைக்கேட்ட கடவுள் கடுப்பாகி... 

உன்னோட ஆசை... 

கொஞ்சம் வில்லங்கமா இருக்கே..?

என்று கேட்க  


உடனே அந்த மூணாவது உயிர் சொல்லுது...


அதுல எந்த வில்லங்கம் வந்தாலும் 

பரவாயில்ல... நா பாத்துக்கிறேன்...!!!

என்றதும்...


அந்த வில்லங்கம் வந்தபிறகு...

உன்னால எதையும் பார்க்கமட்டும் இல்ல... 

தப்பிக்கிறதுக்கு யோசிக்கக் கூட முடியாது...

என்று சொல்லி முடிப்பதற்குள்... 


அத எதையும் காதுல வாங்காம...


இப்ப என்னோட ஆசைய... 

நிறைவேத்த முடியுமா.? முடியாதா..? 

என்று கேட்க 


வேற வழியில்லாமல்... 

கொடுத்த வாக்க காப்பாத்துறதுக்காக

கடவுளும் அந்த ஆசைய நிறைவேத்துறார்..!!


இப்ப அந்த மூணு உயிரும் 

பூமியில உயிரினமாக படைக்கப்படுது.. 


மத்த ரெண்டு உயிரும்...

தன்னோட ஆசை எப்படியும்.., 

இந்த பூமியில நிறைவேறிடும்...! 

என்ற நம்பிக்கையில வாழ ஆரம்பிக்குது...!!


ஆனா மூணாவது உயிர் மட்டும் 

அத எப்படியாவது சோதிச்சி பார்க்கனும்னு 

நினைச்சி... சுத்தி முத்தி பார்க்குது.... 


அங்கு ஒரு மனிதன் 

அமைதியா உக்காந்திருக்க 


பார்க்க அம்மாஞ்சியா இருக்கான்..? 

இவன போய்... கடவுள் 

படு மோசமானவன்னு சொல்றாரு...?

என்று தனக்குத்தானே சிரித்தபடி 


இவன்தான்டா நம்மளோட வேட்டைன்னு 

யாருக்கு தெரியாம மெதுவா...

பதிங்கி பதிங்கி கிட்ட போய்... 

அவன நறுக்குன்னு ஒரு கடி கடிக்க...


கடிச்ச அடுத்த நொடியே... 

அந்த இடத்துல 

ஓங்கி சொத்து ஒரு அடி விழுது...


அடிச்ச அடியில... 

சுத்தி இருக்குற எதையும் பார்க்க முடியாம...

அந்த மூணாவது உயிர் செத்து விழ...


இந்த கொசு கடிச்சத விட... 

அத ஓங்கி அடிச்சதுல தான்டா 

நமக்கு பயங்கரமா வலிக்குது 


எம்மா... அந்த கொசு பேட்ட எடு... 

என்று கூறியபடி 


இன்னும் பல உயிர்களை அழிக்கச் சென்றது...!

கடவுள் கூறிய...,

அந்த படு மோசமான உயிரினம்...!!


written by MURALI K


நன்றி 🙏வாசித்தமைக்கு

Wednesday, 3 February 2021

வெள்ளிக்கிழமை ராமசாமி

 


சில நூறு வருஷத்துக்கு முன்னாடி 

பண்ணையார்புரம் என்ற 

பசுமையான கிராமத்துல

ஒரு ஜமீன் குடும்பம் வாழ்ந்து வந்தது.


அந்த ஊர்ல...

அந்தக் குடும்பத்துக்கு சொந்தமான 

ஒரு அம்மன் கோவில்....


கிட்டத்தட்ட இருபது வருஷத்துக்கு மேல  

பாழடைஞ்ச நிலையில....

திருவிழா எதுவும் நடக்காம...  

பூட்டியே கிடக்குது...  


காரணம்... 

யார் விட்ட சாபம்னு தெரியல...

திருவிழா நடத்தனும்னு முடிவு பண்ணிட்டா...


அத நடத்துற குடும்பத்துல  

நிச்சயம் ஒரு உயிர்பழி 

நடக்கும்... 

 

இப்படி இருக்கும் போது... 

ஒரு நாள் இரவு... 

அந்த ஊர் எல்லையில

வந்து நின்ன சாமக்கோடாங்கி... 

உடுக்கைய அடிச்சிக்கிட்டே... 


கெட்ட காலம் பிறக்கப் போகுது...

கெட்ட காலம் பிறக்கப் போகுது...

திருவிழா நடத்தாம... 

உயிர் பழிக்குப் பயந்து... 

ஆத்தாவ பட்டினி போட்ட 

காரணத்துக்காக ஊர் மக்களுக்கு 

கெட்ட காலம் பிறக்கப் போகுது... 

கெட்ட காலம் பிறக்கப் போகுதுன்னு 

சொல்லிட்டுப் போக.... 


அதை.... அரை தூக்கத்துல கேட்ட 

ஊர்க்காரனுங்க எல்லோரும்...

பீதியில... விடியக்காத்தால....  

ஜமீன் வீட்டு முன்னாடி போய் 

நிற்க.... 


ஜமீன்தார் ராமசாமி 

ஊர் மக்களை பார்க்க வெளிய வாரார்... 


ஊர்மக்கள் அனைவரும் 

ராமசாமியிடம் விவரத்தைக் கூற.... 


அதுவரை.... ஊர் மக்களிடம் 

சந்தோஷத்தை மட்டும் பார்த்த

ராமசாமிக்கு.... 


அவர்களது பீதிகலந்த 

பாவமான முகத்தை பார்க்கப் பிடிக்கல...


இளகுன மனசுக்காரரான ராமசாமிக்கு... 

உயிர்மேல பயம் இருந்தாலும்...!!!

தன்னோட உயிர்க்கு 

ஆபத்தே வந்தாலும் பரவாயில்லைன்னு  

ஊர்மக்களுக்காக

திருவிழா நடத்த முடிவு பண்றார்... 


வர்ற ஆடி வெள்ளி... 

தேர் இழுத்து திருவிழா நடக்கும்னு 

மக்கள் மத்தியில உறுதியா சொல்றார்...!


நாட்கள் மெல்ல நகருது... 

ஆடி வெள்ளியும் நெருங்கி வருது... 

மக்கள் எல்லோரும் 

சந்தோஷமா திருவிழாவ கொண்டாடுறாங்க... 


ஆனா ராமசாமிக்கு மட்டும்... 

தன்னோட உயிர்க்கு ஏதாவது ஆகிடுமோன்னு 

பயத்துலயே... பாதி உசுரு போய் 

படுத்த படுக்கையா ஆயிடுறார்...!


அப்ப தன்னோட மகன கூப்ட்டு... 


மகனே... ஒருவேளை நா செத்தாக்கூட்ட 

இந்த திருவிழா நிக்க கூடாது...!


ஏன்னா... 

மக்கள் முகத்துல... பலவருஷம் கழிச்சி 

திருவிழா கொண்டாட்டத்த பார்க்குறேன்... 

எல்லோரும் சந்தோஷமா இருக்காங்க...


நமக்கு... 

நம்மள நம்பி இருக்குறவங்களோட 

சந்தோசம் தான் முக்கியம்...!!


எனக்காக ஒரு சத்தியம் பண்ணிக்கொடுன்னு சொல்லி.. 

தன்னோட மகன் கிட்ட ராமசாமி  

கடைசி ஆசையா, ஒரு சாத்தியத்த வாங்கிட்டு 

செத்துப் போயிட்டார்...


அப்பா இறந்ததுக்கு அப்புறமா... 

மகன்... வாரிசின் அடிப்படையில 

ஜமின்தார ஆகுறான்... 


ஆனாவுடனே...

அப்பாக்கு பண்ண சத்தியத்த.... 

காப்பாத்தனும்னு  சொல்லிச்சொல்லி 

அந்த ஊர் மக்கள..... 

கொடுமை படுத்த ஆரம்பிக்கிறான்.!


மக்களும் ஒன்னுமே புரியல...!

ராமசாமி நல்லவராச்சே..!!

அவர் மகன் ஏன் இப்படி பண்றான்னு..!!!


யாராவது சின்னதா தப்பு பண்ணாக்கூட்ட 

பெருசா தண்டனை கொடுக்க ஆரம்பிக்கிறான்.. 


ஏன் இப்படி பண்ணுறேன்னு கேட்டா...

சாகுறதுக்கு முன்னாடி... 

எங்கப்பாவுக்கு பண்ணிகொடுத்த சத்தியத்த 

காப்பாத்த... 

எனக்கு வேற வழி தெரியலைன்னு சொல்லுவான்.


அதே நேரத்துல.... 


ஜாமீன்தார் ராமசாமி சாவுக்கு...

ஊர்மக்கள் திருவிழா நடத்த சொன்னதுதான் 

காரணம்... அதுக்கு பழிவாங்கத் தான் 

அவரோட பையன் இப்படி பண்றான்னு... 

ஊருக்குள்ள வதந்தியும் பரவ ஆரம்பிக்குது...


அதனாலயே...

ராமசாமியின் மகன் செத்தாத்தான்... 

ஊருக்கு விடிவுக்கலாமே பிறக்கும்னு.. 

ஊர்க்காரங்க எல்லோரும் பேச ஆரம்பிக்கிறாங்க...


யார் எப்படி சொன்னாலும் சரி... 

ராமசாமி மகன்.... 

சத்தியத்த காப்பாத்துறதுக்காக.... 

ஊர்காரங்கள கொடுமைப்படுத்துறத 

குறைக்கறதா இல்ல...!!.

நாளுக்கு நாள் அதிகரிச்சிட்டே போக.... 


நாட்கள் மெல்ல நகர்ந்து... 

வருடங்களா மாறி... 

ராமசாமியின் மகனுக்கு வயசாகி... 

இப்ப படுத்த படுகையா கிடக்கான்.. 

 

வைத்தியரும் நாள் குறிச்சிட்டார்... 

வர்ற வெள்ளி தாண்டாதுன்னு... 


அதைக்கேட்ட ஊர்க்காரங்க எல்லோருக்கும் 

ஒரே சந்தோசம்.... 


ஏன்னா.. சனிப்பொணம் தனியா போகாது... 

வெள்ளிதானா... அவன் மட்டும் போவான்னு

நினைக்கும் போது... 


ஊர்க்காரங்கள பார்த்து...

ராமசாமியின் மகன் கேட்க்குறான்.


எல்லோரும் சந்தோஷமா இருக்கீங்களா..? 


அதுக்கு ஊருக்காரங்க எல்லோரும்... 


ஆமா... 

இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கோம்... 

நீ செத்ததுக்கு அப்புறமா... 

இன்னும் சந்தோஷமா இருப்போம்னு சொல்ல... 


ராமசாமியின் மகன்... 


எப்படியோ.... நல்லபடியா 

எங்கப்பாக்கு பண்ண சத்தியத்த 

நா காப்பாத்திட்டேன்... 

என்று கூற... 


ஊருக்காரங்களுக்கு ஒன்னும் புரியல... 


அப்படி என்னதாண்டா

உங்காப்பாக்கு நீ சத்தியம் 

பண்ணிக்கொடுத்தேன்னு.? கேட்க 


நாம சாகும் போதும் சரி... 

செத்ததுக்கு அப்புறமாவும் சரி... 

நம்மள நம்பி இருக்குற எல்லோரும் 

சந்தோஷமா இருக்கணும்னு 

எங்கப்பாக்கு பண்ண சத்தியத்த 

காப்பாத்திட்டேன்... 


நா சாகப்போறேன்னு தெரிஞ்சதும் 

எல்லோரும் சந்தோஷமாயிட்டீங்க..!

கண்டிப்பா செத்ததுக்கு அப்புறமா

சந்தோஷமா இருப்பீங்க..!!

எனக்கு அது போதும்னு சொல்லிட்டு செத்துட்டான்... 


“இவனுக்கு வேற வழி தெரியல ஆத்தா...

சத்தியத்த காப்பாத்த” 


Written by Murali K  (க.முரளி)


நன்றி (வாசித்தமைக்கு)