Monday, 12 July 2021

கருப்பாயி சாபம்...!


 கற்பனையில் ஒரு சிறிய சிறுகதை


கிட்டத்தட்ட ஒரு 60 வருஷத்துக்கு முன்னாடி...

கருப்பாய்யிங்கற இளம்பெண்ணின் சாபத்தால்  

இன்றும் வறட்சியின் உட்சத்துல இருக்குற 

ஒரு குக்கிராமம்...!


சரியா நடுச்சாமம் ஒரு மணி இருக்கும்... 

அந்த ஊரே கண் அசந்து... 

நிம்மதியா தூங்கிட்டு இருக்கு...!! 


விடிஞ்சா கல்யாணம்...

மாப்ள யோகராஜாவுக்கு கல்யாணத்துல 

துளி கூட விருப்பம் இல்ல... 


வீட்டுல எவ்வளவோ சொல்லிப்பார்த்தான் 

ஆனா யாரும் கேட்கல..!!! 


காரணம்.... 

இது அவங்க வீட்டுல ஏற்பாடு பண்ணுன 

கல்யாணம் இல்ல..!. 


ஊரே ஒன்னு கூடி முடிவெடுத்து 

ஊரோட நன்மைக்காக நடத்துற 

கட்டாய கல்யாணமாம்...!!! 


இப்பக்கூட, 

மாப்ள..., எங்கயும் ஓடிப்போயிடக்கூடாதுன்னு 

தனியா ஒரு அறையில அடைச்சி வச்சிருக்காங்க...!


யாருமே அவன் பேச்ச கேட்காததுனால 

செத்துப்போன தன்னோட தாத்தாவுக்கு 

ஒரு லெட்டர் எழுதி வச்சிட்டு... 

தானும் சாகலாம்னு முடிவெடுக்குறான்...! 


அன்புள்ள தாத்தா மாடசாமிக்கு.., 

உன் அருமை பேரன் யோகராஜா எழுதிக் கொள்வது. 

அன்னைக்கு நீ மட்டும்... 

காதலிச்ச கருப்பாயி பாட்டிய

கல்யாணம் பண்ணியிருந்திருந்தா...!!

எனக்கு இந்த நிலைமை வந்திருக்குமா..? 


இப்ப ஒன்னும் கெட்டுப்போகல 

விடிஞ்சா கல்யாணம்..!!

மாப்ள நா... 

உயிரோட இருந்தாத்தான அது நடக்கும்னு 

சாகப்போகும் போது  


டக்குன்னு செத்துப்போன தாத்தா... 

இவன் கண்ணு முன்னாடி வந்து....


இப்படி சாகுறது நம்ம வம்சத்துக்கே 

அசிங்கம்டா.....!

இந்தக் கல்யாணம்லா ஒருநாள் கூத்து...!!

பேசாமா ஊர்க்காரங்க பேச்சக்கேட்டு 

கல்யாணம் பண்ணிக்கோ...!!!

என்று கூற 


அதைக்கேட்டு கடுப்பான யோகராஜா... 

தாத்தா மாடசாமியை பார்த்து... 


யோவ் தாத்தா... 

உனக்கு மனசாட்சியே இல்லையா..?

எனக்கு உன்கிட்டப் பேசப் பிடிக்கல...!

முதல்ல... கருப்பாயி பாட்டிய வரச்சொல்லு... 

நா பேசணும்..!! என்று சொல்ல 


அதற்கு மாடசாமி... 

அதுமட்டும் முடியாது... வேற எதுனாலும் கேளு.. 

என்று கூற 


உடனே யோகராஜா... மாடசாமியிடம் 

ஏன் முடியாது..? என்று கேட்க 


அதான்... முடியாதுன்னு சொல்லிட்டேன்ல..!! 

என்று மாடசாமி மறுப்புத் தெரிவிக்க.... 


அதா... ஏன் முடியாதுன்னு கேட்குறேன்ல..? 

என்று கொஞ்சம் கோபமாக யோகராஜா கேட்க 


ஒரு நிமிடம் அமைதியாக இருந்த மாடசாமி 

யோகராஜாவிடம் 


அதுக்கு... அவ புருஷன் சம்மதிக்கனும்டா...

நடுச்சாமத்துல அடுத்தவன் பொண்டாட்டி 

கூட்டிட்டு வர சொல்றியே... 

ஊர் உலகம் எங்கள தப்பா பேசாது..? 

என்று கூற... 


ஏவ் பெருசு... 

உனக்கு செத்ததுக்கு அப்புறமும் குசும்பு அடங்கலைல..?

என்றதும்....  


மாடசாமி சொல்ல ஆரம்பிக்கிறார்...


உயிரோட இருக்கும் போது... 

அதுவும் அந்தக்காலத்துல... 

வேற சாதிக்கார பிள்ளையா இருந்தாலும்... 

கருப்பாயிக்கு இந்த மாடசாமின்னா உசுரு... 


எங்க ரெண்டு பேரோட காதலுக்கு... 

இந்த ஊர் தா முதல் எதிரி...


ஒருவேளை நாங்க ஒன்னு சேர்ந்துட்டா... 

இந்த ஊருக்கே அசிங்கம்னு நினைச்சாங்க.... 


அதுனால நாங்க ரெண்டு பேரும்... 

ஊரவிட்டு ஓடிப்போய்... 

சந்தோஷமா வாழலாம்னு நினைச்சி 

ஓடும்போது... கையும் களவுமா பிடிச்சி 

ரெண்டு பேரையும் பிரிச்சி... 

கொஞ்ச நாளைக்கு ஊரவிட்டே ஒதிக்கியும் வச்சிட்டாங்க.!!!


கொஞ்ச நாள்ல... 

கருப்பாயிக்கு அவ மாமன் பையனையும்

கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க..!


அதுல கடுப்பான கருப்பாயி... 

எங்க காதல பிரிச்ச இந்த கிராமமே... 

மழை தண்ணி இல்லாம... 

வறண்டு போய் சுடுகாடா மாறணும்னு... 

சாபம் விட்டுட்டா...!!


கருப்பாயி ஒரு பச்சப் பத்தினிடா...! 

அதா... சாபம் பளிச்சிடுச்சி...!! 

என்று மாடசாமி யோகராஜாவிடம் 

பொறுமையாக எல்லாத்தையும் கூறி முடிக்க... 


உடனே யோகராஜா... தன் தாத்தாவிடம் 

அதுக்கு நா என்ன பண்ணனும்..? என்று கேட்க


இந்த தாத்தனால ஏற்பட்ட சாபத்த 

பேரன் நீ தா முடிச்சி வைக்கணும்...

என்று சொல்லி முடிப்பதற்குள்  


யோவ்... இது உனக்கே நல்லா இருக்கா.... 

கருப்பாயி ஒரு பத்தினி.... 

அவ விட்ட சாபத்துக்காக... 

ஊர்க்காரன் பேச்சக்கேட்டு... 

ஏதோ ஊர் மேஞ்ச கழுதைய 

கட்டி வைப்பானுங்க... 

அத நா கட்டிக்கனுமா...? 

என்று கோபத்தில் கத்தி முடிக்க... 


இவ்வளவு நேரம் பேசுனதுல 

விடிஞ்சே போச்சி.... 


இப்ப அந்த அறைக்கு வெளிய இருந்து 


ஏம்ப்பா... பொண்ணு ரெடியாகிடுச்சி 

மாப்ளைய கூட்டி வாங்க....

என்று ஊர்க்காரங்க சொல்ல 


யோகராஜா... இனிமே., உன்னால தா... 

இந்த ஊருக்கு யோகமே வரப்போகுது...!

மழை தண்ணி இல்லைனா... 

ஒரு கழுதைக்கு கல்யாணம்பண்ணி வைக்கிறது 

நம்ம ஊரோட நம்பிக்கை தான பேராண்டி 

என்று தாத்தா கூற 


ஏவ்...அது நம்பிக்கை இல்லையா..!

மூட நம்பிக்கை...!! என்று சொல்லி முடிக்க 


வீட்டுக்கு வெளியே 

மணப்பெண் கோலத்தில் 

வெட்கபட்டபடி கனைத்துக் கொண்டிருந்தது  

அந்தப் பெண்கழுதை..!!!


அன்னைக்கு எடுத்த கல்யாண போட்டோ 

இன்னைக்கும் பல ஊர்ல மாட்டி வச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன்...

என்னைப் பார் யோகம் வரும்னு 


Written by MURALI K (க.முரளி)


🙏🙏🙏

Friday, 30 April 2021

என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா..?


தாய் தகப்பன் தெரியாத...,

அனாதைப் பெண் நான்...!


எப்படியோ வளர்ந்து...

இன்னைக்கு வயசுக்கும் வந்துவிட்டேன்...!!


இதுவரை துணையின்றி

தனியாகச் சுற்றித் திரிந்தாலும்...,


இனிவரும் காலங்களில்...,

இணை சேரும் நேரத்தில் மட்டும்...

எவனாவது ஒருவன் 

என்னுடன் வந்து ஒட்டிக்கொள்வான்...!


அதற்கு சாட்சியாய்...

எனக்குள் அவனது குழந்தையை  

உருவாக்குவான்...!


எனைப்போன்ற அனாதைகளின் 

அதிகபட்ச ஆசையே...

“தனக்கென்று ஒரு தனி வீடு”


இந்த உலகத்தில்.,

அது நடக்காத காரியம்..!!


நிச்சயமாக 

என்னைக் கட்டிக்க போறவனுக்கு...

எனக்காக அத கட்டிக்கொடுக்கணும்னு 

எண்ணமும் இருக்காது...! 

கட்டுறதுக்கு துப்புமிருக்காது...!! 


நிச்சயம் ஒரு நாள்... 

யாரென்றே தெரியாத உன் வீட்டில்...,

உன் சம்மதம் இல்லாமல்...!

உனக்கே தெரியாமல்...!!

என் குழந்தை பிறக்கும்...!!! 


அதற்கு நான் தான் முழுப்பொறுப்பு...!


ஆரம்பத்தில்....

உன் குழந்தைகளுடன்..., 

என் குழந்தையையும் 

பாசத்துடன் வளர்ப்பாய்...!


சிறிது நாளில் உண்மை தெரிந்து 

துரத்தி அடிப்பாய்...!!


எதற்கு நமக்குள் வீண் வம்பு...?!?!


என் தாய்... என்னைப் பெற்றதுபோல்...

நான் என் குழந்தையை 

"அநாதையாக்க" விரும்பவில்லை...!


என் குழந்தை... 

உன் சூட்டில் பிறப்பதை விட...,

உனக்கே பிறந்தால் மகிழ்ச்சியடைவேன்...!!! 


இந்த அனாதைக் குயிலின் காதலை...

உன் காக்கை இனம் ஏற்றுக்கொண்டால்...

நான் உன்னையே திருமணம் 

செய்துகொள்ள விரும்புகிறேன்...!!


நான்... உன்னிடம்

"குக்கூ" என்று கேட்கும்பொழுது...

நீ... என்னிடம்

"கா...கா..." என்று சம்மதம் தெரிவிப்பாய் 

என்ற  நம்பிக்கையில் நான்...!


இப்படிக்கு 

பெண் குயில்


இப்படி ஒரு நிகழ்வு நடந்தால்.. இனிவரும் காலங்களில்... எந்தக்குயிலும் கூடு கட்டத்தெரியாததால்... காக்கையின் கூட்டில் திருட்டுத்தனமா முட்டையிடாது என்று நினைக்கிறேன்.

Written by MURALI K

Wednesday, 17 March 2021

என்ன அடிச்சா... அடிச்ச அவனுக்குத்தான் வலிக்கனும்...!!!


 ஒரு மனிதன் இன்னொரு மனிதனுடைய,  

உயிர் பிரியும் போது... 

அவனோட கடைசி ஆசைய 

நிறைவேத்த நினைக்கின்ற மாதிரி...!!


ஆரம்ப காலத்துல.... கடவுள்... 

எல்லா உயிரையும் படைக்கும் போது.... 

அந்த உயிருக்குன்னு... 

ஏதாவது ஆசை இருக்கான்னு தெரிஞ்சி...

அத நிறைவேத்த நினைக்கிறார்... 

 

அப்படி இருக்கும் போது ஒரு நாள் 

ஒரு மூணு உயிர கூப்ட்டு 


உங்க மூணு  பேரையும்...

பூமிங்கற கிரகத்துல... 

உயிரினமா படைக்கப் போறேன்...!


அங்க உங்கள விட..., 

பலம் வாய்ந்த உயிரினமும் இருக்கும்....! 

பலம் குறைந்த உயிரினமும் இருக்கும்...!!

அதேசமையம்.... 

படு மோசமான மனித இனமும் இருக்கு...!!!


எப்படியும்... நீங்க... 

பிறந்ததுல இருந்து... சாகுற வரைக்கும்... 

போராடித்தான் வாழ்க்கைய ஓட்டனும்..! 

வேற வழியே இல்ல...!!


அதுனால... 

உங்களுக்குன்னு ஏதாவது ஆசை இருந்தா...?

அத என்கிட்ட சொல்லுங்க... 

நா... நிச்சயம் நிறைவேத்தி வைக்கிறேன்னு 

சொல்ல....

 

முதல் உயிர் சொல்லுது...

 

நா தேவையில்லாம எந்த உயிரினத்துக்கும் 

தொந்தரவு கொடுக்க மாட்டேன்...!

ஆனா... என்ன யாராவது அடிக்க வரும்போது...

நா... என்னோட உயிரை காப்பாத்துறதுக்காக 

அவங்கள கடிச்சா...  

அவங்க உயிர் பிழைக்கிறதே 

கஷ்டமான காரியமா இருக்கணும் 

என்று சொல்ல... 


உடனே கடவுள்.... 

உன்னோட ஆசை நியாயமானது தான்...!

நீ ரொம்ப நல்லவனா இருக்க...!! 

அதுனால உனக்கு... 

நல்ல பாம்புன்னு பேரு வைக்கிறேன்...!


இனிமே... பூமியில 

உன்னோட விருப்பப்படி நீ பிறக்கலாம் 

என்று கூற


இப்ப  இரண்டாவது உயிர் சொல்லுது...


நா யாரையும் கடிக்கலாம் விரும்பல...!

ஆனா... தப்பு பண்றவங்கள

என்ன வச்சி..., அடிச்சி அடிச்சே திருத்தணும்...!! 

என்று சொல்ல  


உடனே கடவுள்.... 

உன்னோட ஆசையும் நியாயமானது தான் 

உனக்கு பிரம்புக் குச்சின்னு பேர் வச்சி.... 

பிரம்புத் தாவரமா படைச்சிடுறேன்...!

என்று கூற...


இத ரெண்டையும் கேட்ட மூணாவது உயிர்...  


இவனுங்க ரெண்டு பேரும் லூசுப்பயலுக... 

கடவுளே நம்மகிட்ட இறங்கி வந்து கேட்கும் போது... 

இப்படியா கேட்பானுங்க...?

என்று சொல்லியபடி 


நா யாரவேனும்னாலும் கடிப்பேன்...! 

ஆனா... என்ன யாராவது அடிச்சா...,

அடிச்ச அவனுக்குத்தான் வலிக்கணும்... 

என்று... 

தன்னோட ஆசைய மூணாவது உயிர் சொல்ல...


அதைக்கேட்ட கடவுள் கடுப்பாகி... 

உன்னோட ஆசை... 

கொஞ்சம் வில்லங்கமா இருக்கே..?

என்று கேட்க  


உடனே அந்த மூணாவது உயிர் சொல்லுது...


அதுல எந்த வில்லங்கம் வந்தாலும் 

பரவாயில்ல... நா பாத்துக்கிறேன்...!!!

என்றதும்...


அந்த வில்லங்கம் வந்தபிறகு...

உன்னால எதையும் பார்க்கமட்டும் இல்ல... 

தப்பிக்கிறதுக்கு யோசிக்கக் கூட முடியாது...

என்று சொல்லி முடிப்பதற்குள்... 


அத எதையும் காதுல வாங்காம...


இப்ப என்னோட ஆசைய... 

நிறைவேத்த முடியுமா.? முடியாதா..? 

என்று கேட்க 


வேற வழியில்லாமல்... 

கொடுத்த வாக்க காப்பாத்துறதுக்காக

கடவுளும் அந்த ஆசைய நிறைவேத்துறார்..!!


இப்ப அந்த மூணு உயிரும் 

பூமியில உயிரினமாக படைக்கப்படுது.. 


மத்த ரெண்டு உயிரும்...

தன்னோட ஆசை எப்படியும்.., 

இந்த பூமியில நிறைவேறிடும்...! 

என்ற நம்பிக்கையில வாழ ஆரம்பிக்குது...!!


ஆனா மூணாவது உயிர் மட்டும் 

அத எப்படியாவது சோதிச்சி பார்க்கனும்னு 

நினைச்சி... சுத்தி முத்தி பார்க்குது.... 


அங்கு ஒரு மனிதன் 

அமைதியா உக்காந்திருக்க 


பார்க்க அம்மாஞ்சியா இருக்கான்..? 

இவன போய்... கடவுள் 

படு மோசமானவன்னு சொல்றாரு...?

என்று தனக்குத்தானே சிரித்தபடி 


இவன்தான்டா நம்மளோட வேட்டைன்னு 

யாருக்கு தெரியாம மெதுவா...

பதிங்கி பதிங்கி கிட்ட போய்... 

அவன நறுக்குன்னு ஒரு கடி கடிக்க...


கடிச்ச அடுத்த நொடியே... 

அந்த இடத்துல 

ஓங்கி சொத்து ஒரு அடி விழுது...


அடிச்ச அடியில... 

சுத்தி இருக்குற எதையும் பார்க்க முடியாம...

அந்த மூணாவது உயிர் செத்து விழ...


இந்த கொசு கடிச்சத விட... 

அத ஓங்கி அடிச்சதுல தான்டா 

நமக்கு பயங்கரமா வலிக்குது 


எம்மா... அந்த கொசு பேட்ட எடு... 

என்று கூறியபடி 


இன்னும் பல உயிர்களை அழிக்கச் சென்றது...!

கடவுள் கூறிய...,

அந்த படு மோசமான உயிரினம்...!!


written by MURALI K


நன்றி 🙏வாசித்தமைக்கு

Wednesday, 3 February 2021

வெள்ளிக்கிழமை ராமசாமி

 


சில நூறு வருஷத்துக்கு முன்னாடி 

பண்ணையார்புரம் என்ற 

பசுமையான கிராமத்துல

ஒரு ஜமீன் குடும்பம் வாழ்ந்து வந்தது.


அந்த ஊர்ல...

அந்தக் குடும்பத்துக்கு சொந்தமான 

ஒரு அம்மன் கோவில்....


கிட்டத்தட்ட இருபது வருஷத்துக்கு மேல  

பாழடைஞ்ச நிலையில....

திருவிழா எதுவும் நடக்காம...  

பூட்டியே கிடக்குது...  


காரணம்... 

யார் விட்ட சாபம்னு தெரியல...

திருவிழா நடத்தனும்னு முடிவு பண்ணிட்டா...


அத நடத்துற குடும்பத்துல  

நிச்சயம் ஒரு உயிர்பழி 

நடக்கும்... 

 

இப்படி இருக்கும் போது... 

ஒரு நாள் இரவு... 

அந்த ஊர் எல்லையில

வந்து நின்ன சாமக்கோடாங்கி... 

உடுக்கைய அடிச்சிக்கிட்டே... 


கெட்ட காலம் பிறக்கப் போகுது...

கெட்ட காலம் பிறக்கப் போகுது...

திருவிழா நடத்தாம... 

உயிர் பழிக்குப் பயந்து... 

ஆத்தாவ பட்டினி போட்ட 

காரணத்துக்காக ஊர் மக்களுக்கு 

கெட்ட காலம் பிறக்கப் போகுது... 

கெட்ட காலம் பிறக்கப் போகுதுன்னு 

சொல்லிட்டுப் போக.... 


அதை.... அரை தூக்கத்துல கேட்ட 

ஊர்க்காரனுங்க எல்லோரும்...

பீதியில... விடியக்காத்தால....  

ஜமீன் வீட்டு முன்னாடி போய் 

நிற்க.... 


ஜமீன்தார் ராமசாமி 

ஊர் மக்களை பார்க்க வெளிய வாரார்... 


ஊர்மக்கள் அனைவரும் 

ராமசாமியிடம் விவரத்தைக் கூற.... 


அதுவரை.... ஊர் மக்களிடம் 

சந்தோஷத்தை மட்டும் பார்த்த

ராமசாமிக்கு.... 


அவர்களது பீதிகலந்த 

பாவமான முகத்தை பார்க்கப் பிடிக்கல...


இளகுன மனசுக்காரரான ராமசாமிக்கு... 

உயிர்மேல பயம் இருந்தாலும்...!!!

தன்னோட உயிர்க்கு 

ஆபத்தே வந்தாலும் பரவாயில்லைன்னு  

ஊர்மக்களுக்காக

திருவிழா நடத்த முடிவு பண்றார்... 


வர்ற ஆடி வெள்ளி... 

தேர் இழுத்து திருவிழா நடக்கும்னு 

மக்கள் மத்தியில உறுதியா சொல்றார்...!


நாட்கள் மெல்ல நகருது... 

ஆடி வெள்ளியும் நெருங்கி வருது... 

மக்கள் எல்லோரும் 

சந்தோஷமா திருவிழாவ கொண்டாடுறாங்க... 


ஆனா ராமசாமிக்கு மட்டும்... 

தன்னோட உயிர்க்கு ஏதாவது ஆகிடுமோன்னு 

பயத்துலயே... பாதி உசுரு போய் 

படுத்த படுக்கையா ஆயிடுறார்...!


அப்ப தன்னோட மகன கூப்ட்டு... 


மகனே... ஒருவேளை நா செத்தாக்கூட்ட 

இந்த திருவிழா நிக்க கூடாது...!


ஏன்னா... 

மக்கள் முகத்துல... பலவருஷம் கழிச்சி 

திருவிழா கொண்டாட்டத்த பார்க்குறேன்... 

எல்லோரும் சந்தோஷமா இருக்காங்க...


நமக்கு... 

நம்மள நம்பி இருக்குறவங்களோட 

சந்தோசம் தான் முக்கியம்...!!


எனக்காக ஒரு சத்தியம் பண்ணிக்கொடுன்னு சொல்லி.. 

தன்னோட மகன் கிட்ட ராமசாமி  

கடைசி ஆசையா, ஒரு சாத்தியத்த வாங்கிட்டு 

செத்துப் போயிட்டார்...


அப்பா இறந்ததுக்கு அப்புறமா... 

மகன்... வாரிசின் அடிப்படையில 

ஜமின்தார ஆகுறான்... 


ஆனாவுடனே...

அப்பாக்கு பண்ண சத்தியத்த.... 

காப்பாத்தனும்னு  சொல்லிச்சொல்லி 

அந்த ஊர் மக்கள..... 

கொடுமை படுத்த ஆரம்பிக்கிறான்.!


மக்களும் ஒன்னுமே புரியல...!

ராமசாமி நல்லவராச்சே..!!

அவர் மகன் ஏன் இப்படி பண்றான்னு..!!!


யாராவது சின்னதா தப்பு பண்ணாக்கூட்ட 

பெருசா தண்டனை கொடுக்க ஆரம்பிக்கிறான்.. 


ஏன் இப்படி பண்ணுறேன்னு கேட்டா...

சாகுறதுக்கு முன்னாடி... 

எங்கப்பாவுக்கு பண்ணிகொடுத்த சத்தியத்த 

காப்பாத்த... 

எனக்கு வேற வழி தெரியலைன்னு சொல்லுவான்.


அதே நேரத்துல.... 


ஜாமீன்தார் ராமசாமி சாவுக்கு...

ஊர்மக்கள் திருவிழா நடத்த சொன்னதுதான் 

காரணம்... அதுக்கு பழிவாங்கத் தான் 

அவரோட பையன் இப்படி பண்றான்னு... 

ஊருக்குள்ள வதந்தியும் பரவ ஆரம்பிக்குது...


அதனாலயே...

ராமசாமியின் மகன் செத்தாத்தான்... 

ஊருக்கு விடிவுக்கலாமே பிறக்கும்னு.. 

ஊர்க்காரங்க எல்லோரும் பேச ஆரம்பிக்கிறாங்க...


யார் எப்படி சொன்னாலும் சரி... 

ராமசாமி மகன்.... 

சத்தியத்த காப்பாத்துறதுக்காக.... 

ஊர்காரங்கள கொடுமைப்படுத்துறத 

குறைக்கறதா இல்ல...!!.

நாளுக்கு நாள் அதிகரிச்சிட்டே போக.... 


நாட்கள் மெல்ல நகர்ந்து... 

வருடங்களா மாறி... 

ராமசாமியின் மகனுக்கு வயசாகி... 

இப்ப படுத்த படுகையா கிடக்கான்.. 

 

வைத்தியரும் நாள் குறிச்சிட்டார்... 

வர்ற வெள்ளி தாண்டாதுன்னு... 


அதைக்கேட்ட ஊர்க்காரங்க எல்லோருக்கும் 

ஒரே சந்தோசம்.... 


ஏன்னா.. சனிப்பொணம் தனியா போகாது... 

வெள்ளிதானா... அவன் மட்டும் போவான்னு

நினைக்கும் போது... 


ஊர்க்காரங்கள பார்த்து...

ராமசாமியின் மகன் கேட்க்குறான்.


எல்லோரும் சந்தோஷமா இருக்கீங்களா..? 


அதுக்கு ஊருக்காரங்க எல்லோரும்... 


ஆமா... 

இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கோம்... 

நீ செத்ததுக்கு அப்புறமா... 

இன்னும் சந்தோஷமா இருப்போம்னு சொல்ல... 


ராமசாமியின் மகன்... 


எப்படியோ.... நல்லபடியா 

எங்கப்பாக்கு பண்ண சத்தியத்த 

நா காப்பாத்திட்டேன்... 

என்று கூற... 


ஊருக்காரங்களுக்கு ஒன்னும் புரியல... 


அப்படி என்னதாண்டா

உங்காப்பாக்கு நீ சத்தியம் 

பண்ணிக்கொடுத்தேன்னு.? கேட்க 


நாம சாகும் போதும் சரி... 

செத்ததுக்கு அப்புறமாவும் சரி... 

நம்மள நம்பி இருக்குற எல்லோரும் 

சந்தோஷமா இருக்கணும்னு 

எங்கப்பாக்கு பண்ண சத்தியத்த 

காப்பாத்திட்டேன்... 


நா சாகப்போறேன்னு தெரிஞ்சதும் 

எல்லோரும் சந்தோஷமாயிட்டீங்க..!

கண்டிப்பா செத்ததுக்கு அப்புறமா

சந்தோஷமா இருப்பீங்க..!!

எனக்கு அது போதும்னு சொல்லிட்டு செத்துட்டான்... 


“இவனுக்கு வேற வழி தெரியல ஆத்தா...

சத்தியத்த காப்பாத்த” 


Written by Murali K  (க.முரளி)


நன்றி (வாசித்தமைக்கு)

Monday, 9 November 2020

முட்டாள்த்தனமான புத்திசாலியும் புத்திசாலித்தனமான முட்டாளும்

ஒரு ஊரே ஒன்னு சேர்ந்து 

புத்திசாலித்தனமான ஒரு முட்டாள 

அந்த கிராமத்த விட்டே விரட்டி விடிக்குது... 


அவன் பேரு பார்த்தா...


இப்ப வேற வழியில்லாம 

பார்த்தா பக்கத்து ஊருக்கு போறான்


அந்த ஊருக்கு அடிக்கடி 

போய் வந்திருந்தாலும்.... 

அவனுக்குன்னு அங்க... 

யாரையும் தெரியாது... 


பசிக்க ஆரம்பிக்குது... 


கையில காசும் இல்ல... 

திருடி திங்க மனசும் இல்ல...


பசியோட... அந்த ஊருக்குள்ள 

மெல்ல நாடந்து போறான்... 


அந்த ஊருக்குள்ள 

முட்டாள்த்தனமான ஒரு புத்திசாலி 

ஒரு பெரியவர்... 


எப்ப வேணும்னாலும்... 

இந்த ஊர விட்டு இல்ல... உலகத்தை விட்டே 

போகுற நிலமையில

படுத்த படுக்கையா கிடக்கிறார்... 

அவர் பேரு சாரதி  


அந்த பெரியவர பொருத்தவரைக்கும்....

இந்த உலகத்துல... 

தான் மட்டுந்தான் புத்திசாலி.... 

மத்தவன் எல்லாம் முட்டாள்ன்னு 

ஒரு நினைப்பு...


ஆனா... அந்த பெரியவருக்கு... 

ஒரு நல்ல பழக்கம் இருக்கு..!!


என்னதான் உடம்பு சரியில்லைனாலும்... 

இரவு எத்தனை மணிக்கு தூங்கினாலும்... 

முந்தின நாள்... 

அதிகப்படியான வேலை செஞ்சிருந்தாலும்...  

தினந்தோறும் காலைல.... 

நாலு மணிக்குலாம் எந்திரிச்சி 

தன்னோட வழக்கமான வேலைய 

பார்க்க ஆரம்பிச்சிடுவார்.... 


இப்போ...

பசியோட நடந்து வந்த பார்த்தா.... 

சாரதியோட வீட்ட பார்குறான்... 


உள்ள இருந்து ஒரே இருமல் சத்தம்...

லொக்கு லொக்குன்னு  

வீட்டுக்கு வெளிய வரைக்கும் கேட்குது...


பார்த்தா... மெல்ல கதவ திறந்து 

எட்டிப்பார்க்க..... உள்ள சாரதி.... 


புத்திசாலித்தனமான முட்டாளும்... 

முட்டாள்த்தனமான புத்திசாலியும்... 

சந்திச்சிக்கிறாங்க...


பார்த்தாவை பார்த்த சாரதி... 

இருமிக்கிட்டே... யாருப்பா நீ...? 

பூட்டி இருக்குற வீட்ட 

திருடன் மாதிரி திறந்து பார்க்குற...!!

உனக்கு என்ன வேணும்..? 

என்று விசாரிக்க...


பார்த்தாவும்... நடந்த எல்லா விஷய்த்தையும் 

விலாவரியா சொல்றான்...


பார்த்தாவின் கதையை கேட்ட 

சாரதியின் மனசுக்குள் ஒரு எண்ணம் ஓடுது... 


இவன பார்த்தா.... 

புத்திசாலித்தனமான ஒரு முட்டாள மாதிரி தெரியல...

கடஞ்சி எடுத்த முட்டாள் மாதிரி தோணுது... 

மூணு வேளை சோறு போட்டா...

ஆயிசுக்கும் நமக்கு அடிமையா 

இருப்பான்னு நினைச்சி...


பசியோட வந்த பார்த்தாவுக்கு 

சாரதி, சோறு போட்டு... 

இனிமே நீ எங்கயும் போகவேண்டாம்... 

என்கூடவே இருந்திடு என்று கூற... 


பார்த்தாவும்... போக்கிடம் இல்லாம 

அங்கேயே தங்க முடிவு பண்றான்...


உடனே பார்த்தாவும் சாரதியை பார்த்து... 

சோறு போட்ட நன்றி விசுவாசத்துக்காக 


ஐயா... 

உங்களால முடியாத எல்லா வேலையையும் 

இனிமே நா பார்த்துக்கிறேன்...

உங்களுக்கு நிச்சயமா ஒத்தாசையா இருப்பேன் 

என்று கூற....


அதைக்கேட்ட சாரதி.... 

மகிழ்ச்சியோட பார்த்தவை வேலைக்கு 

வச்சிக்கிறார்.....  


அடுத்த நாள் காலை... 

சரியா மணி நாலு... 


இருமிக்கிட்டே சாரதி எந்திரிக்க... 

அந்த இருமல் சத்தம் கேட்டு 

பார்த்தாவும் எந்திரிக்க...


உடனே சாரதி.... 

பார்த்தாவை பார்த்து 


என்னடா அப்படி பாக்குற...  

தினந்தினம் நான் தான்... 

வீட்ட கூட்டி பெருக்குவேன்... 


இப்பலாம் என்னால அத செய்ய முடியல... 

இனிமே நீதா அத பண்ணனும் 

என்று கூற... 


அதற்கு பார்த்தா.... 


சரிங்க முதலாளி... 

என்று கூறிக்கொண்டே... 

எல்லா வேலையையும் செய்ய ஆரம்பிக்கிறான்... 


நாட்கள் மெல்ல நகர நகர... 

வேலையும் கூடிக்கிட்டே போகுது... 


சாரதி... 

தன்னால முடியாத எல்லா வேலையையும் 

பார்த்தாவ வச்சி செய்ய ஆரம்பிக்கிறார்...


ஏதாவது எதுத்து பேசினா... 


டேய் முட்டாப்பயலே... 

என்கிட்ட வேலைக்கு சேரும் போது... 

என்ன சொன்ன...?


ஐயா... 

உங்களால முடியாத எல்லா வேலையையும் 

இனிமே நா பார்த்துக்கிறேன்...

உங்களுக்கு நிச்சயமா 

ஒத்தாசையா இருப்பேன்னு சொன்னீல...?


மனுஷனுக்கு வாக்கு முக்கியம்டான்னு 

சொல்லிச் சொல்லி வேலை வாங்க... 


வாக்கு கொடுத்துட்டோமேன்னு 

அந்தப் பெரியவரால முடியாத 

எல்லா வேலையையும்  

பார்த்தா செய்ய ஆரம்பிக்கிறான்..   


ஒரு நாள் அந்த பெரியவருக்கு 

தீவிர உடம்பு சரியில்லாம போக...

வைத்தியர் வந்து பார்க்கிறார்... 


வைத்தியம் பார்த்த கையோட 

அந்த பெரியவர பார்த்து 

 

ஐயா... 

நா கொடுக்குற மருந்த சாப்ட்டு, 

நல்லா தூங்கி எந்திரிச்சாலே... 

பாதி சரியாகிடும்... என்று கூற 


அதற்கு சாரதி வைத்தியரை பார்த்து 


அதுதான இங்க பிரச்சனையே... 

அதிகாலை நாலு மணிக்கே 

எந்திரிச்சி பழகுன உடம்பு... 

திடீர்ன்னு வைத்தியர் சொன்னா கேட்குமா 

என்று கிண்டலாக சொல்ல... 


வைத்தியர்... வைத்தியம் பார்த்ததற்கு 

காச வாங்கிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்... 


அடுத்த நாள் காலை... 

வழக்கம் போல சாரதி எந்திரிச்சி பார்க்க... 

பக்கத்துல படுத்திருந்த பார்த்தாவ காணும்...!!


சுத்தி முத்தி தேடி பார்க்குறார்...

எங்க தேடியும் பார்த்தாவை காணும்... 


உடனே சாரதி... தனக்குத்தானே.... 

பார்த்தாவை பற்றி...


பயத்துல சொல்லாம கொள்ளாம 

ஓடிப்போய்ட்டானே... சோம்பேறிப்பயன்னு 

சொல்லி திட்டியபடி....


வேற வழியில்லாம தன்னோட வேலைய 

தானே பார்க்க ஆரம்பிக்கிறார்... 


நேரம் ஆகிக்கிட்டே போக... 

பகல் பொழுது விடிய ஆரம்பிக்குது.... 


இப்ப பார்த்தா.... சாரதியோட வீட்டுக்கு வாரான்... 


பார்த்தாவை பார்த்த சாரதி... 

கோபத்தில்... 

எங்கடா போன..? என்று கேட்க


அதற்கு பார்த்தா அமைதியாக... 


எல்லாம் உங்க உடம்பு சரியாகனும்னு  

வைத்தியர் சொன்ன ஒரு வேலைய 

பார்க்க போனேன்... என்று கூற 


ஓ.. பையன் ஓடிப்போக நினைக்கல...

நமக்காக ஒரு வேலை பார்க்கத்தான் 

போயிருக்கான்னு சாரதி சமாதானம்

ஆகிறார்...


அன்றைய நாள் மெல்ல நகர....

அடுத்த நாள் காலையும் 

பார்த்தாவை காணும்.... 


இப்படியே தினம் தினம் 

காலைல பார்த்தா காணாமல் போக... 


ஒரு நாள் கடுப்பான சாரதி... 

பார்த்தாவை பார்த்து.... 


டேய் தினமும் காலைல காணாம போயிடுற...

கேட்டா வைத்தியர் சொன்ன வேலையத்தான் 

பார்க்குறேன்னு பதில் சொல்ற...


இத்தன நாள் நீ எனக்காக 

வைத்தியர் சொன்ன வேலைய 

ஒழுங்க பார்த்திருந்தா.... 

என்னோட உடம்பு சரியாகிருக்கனும்... 


உண்மைய சொல்லு... 

தினமும் காலைல எங்க போற...? 

என்று அதட்டிக் கேட்க 


அதற்கு பார்த்தா சொன்ன பதில் 


முட்டாள்த்தனமாக இருந்தாலும்... 

சாரதிக்கு அப்ப தா புரிஞ்சது...

நாம இத்தன நாள் போட்ட கணக்கு 

தப்பு.... 


உண்மையிலேயே பார்த்தா 

வெறும் முட்டாள் இல்ல  

புத்திசாலித்தனமான ஒரு முட்டாள் தான்...


காரணம்... வைத்தியர் 

அந்தப் பெரியவர... நல்ல தூங்குனா 

உடம்பு பாதி சரியாகிடும்னு சொல்ல... 


பெரியவர் தூங்காததுனால... 

பாவம் அவருக்கு பதிலா... 

இவன் தூங்க போயிருக்கான்... 


சரி.... தூங்குறது தான் தூங்குற... 

நம்ம வீட்டுலேயே 

தூங்க வேண்டியது தானான்னு

கேட்டதுக்கு....


உங்க இருமல் சத்தத்துல... 

என்னோட தூக்கம் கலைஞ்சா...

உங்க உடம்பு... 

எப்படி சரியாகும்னு சொல்றான்... 


Story by  Murali K





Saturday, 19 September 2020

பிச்சைக்காரர்கள் தேவை...!!!



சில நுறு வருஷத்துக்கு முன்னாடி.... 


ஏழை என்ற சொல்லுக்கு 

சிறிதளவு கூட இடம் கொடுக்காத...! 

ஒரு பணக்கார தேசத்தை...!! 

வைரவேந்தன் என்ற அரசன் 

ஆட்சி செய்து வந்தான்...


ஒருநாள் இரவு... 

கண் அயர்ந்து தூக்கும்பொழுது, 

அந்த அரசனுக்கு ஒரு கனவு வருகிறது...


திடீர்னு... 

எதிரி நாட்டு அரசன் 

தன்னுடைய நாட்டை கைப்பற்றி

அரசனை சிறையில் தள்ளியது மட்டுமல்லாமல்... 


வாரம் ஒரு முறை.... 

அந்நாட்டு மக்களிடமே பிச்சை எடுத்து 

அரசன் உணவு உண்ண வேண்டும் என்று 

தண்டனையும் அளிக்கிறான்...! 


இப்படி ஒரு படு பயங்கரமான 

கனவு வந்ததிலிருந்து... 

அரசனுக்கு தன்னுடைய எதிர்காலம் குறித்து 

அதிக பயம் வந்துவிடுகிறது...! 


போர் செய்து... எதிரி நாட்டு அரசன் 

தன்னை பிச்சை எடுக்கவைத்து விடுவானோ..? 


ஒருவேளை இது உண்மையாக நடந்தால்...!!

தனக்கு இதைவிடப் மிகப்பெரிய அவமானம் 

வேறெதுவுமில்லை என்று 


உடனடியாக தனது படைகளை பலப்படுத்துகிறான்....! 

போர் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கிறான்...!! 

எப்பொழுது வேண்டுமானாலும் போர் வரலாம்...  

தயாராக இருக்கும்படி உத்தரவிடுகிறான்...!!!


இருந்தும் பயம் போகவில்லை...!


இதற்கு பரிகாரம் ஏதாவது இருக்குமா..? 

என்று தெரிந்துகொள்ள... 

அரசவை ஜோதிடரை அழைத்து  

இரசியமாகக் கேட்க


அதற்கு அந்த ஜோதிடரும் 

இராப்பகலா ஓலைச்சுவடிகளை ஆராய்சி பண்ணி 

ஒரு பரிகாரத்தையும் சொல்றார்...! 


ஒரு பிச்சைக்காரன கண்டுபிடிச்சி

சரியா ஒரு வருஷத்துக்கு 

வாரத்துக்கு ஒரு நாள் மட்டுமாவது.

அவனுக்கு உங்க கையாள சமைச்சி 

ஒருவேளை வயிறு நிரம்பசோறு போட்டா 

இந்தக்கனவு பழிக்காதுன்னு சொல்லிவிட்டு... 


இறுதியாக.... 


அரசே... பகல் கனவு கூட 

பழிக்காமல் போகலாம்..!

தாங்கள் கண்டதோ நடுச்சாமத்தில்... 


மேலும் இந்த விஷயம் 

எதிரி நாட்டு அரசனுக்கு 

தெரியாமல் பார்த்துக்கொள்ளவும்... 


தெரிந்தால்...!?!? 


அனைத்து பிச்சைக்காரர்களையும் கண்டுபிடித்து, 

சோற்றில் விஷம் வைத்துக் கொன்றுவிடுவான்..!.  

ஜாக்கிரதை..!!    


பிறகு... பரிகாரம் செய்ய பிச்சைக்காரர்கள் 

கிடைக்காமல்....!

தாங்கள் பிச்சை எடுக்கும் நிலை வந்துவிடும்...!! 

என்று கூற....


அதைக்கேட்ட அரசனுக்கு ஒருநிமிடம் 

தூக்கிவாரி போட்டுவிடுகிறது..!! 


காரணம்... தன்னுடைய நாட்டில்  

ஏழை என்ற சொல்லுக்கே இடம் கிடையாது... !

அனைவரும் பணக்காரர்கள்...!!

அப்படி இருக்கும்போது... 

பிச்சைக்காரனுக்கு முதல்ல எங்க போவது...?!?!?!  


யோசிக்கிறான்... 

தூங்காமல் விடிய விடிய யோசிக்கிறான்... 


எந்த யோசனையும் வராமல் போக... 

இறுதியாக பக்கத்தில் இருக்கும் 

நட்பு நாட்டிற்கு புறாவின் மூலம் 

ஒரு தூது அனுப்புகிறான்... 


அதில்... 

நண்பா... எனக்கு உடனடியாக 

உன் நாட்டில் இருக்கும் 

ஒரு பிச்சைக்காரன் தேவை...

நீ அனுப்பி வைப்பாய் என்ற 

நம்பிக்கையில் நான் காத்திருக்கிறேன்..

ஏன்...? எதற்கு...? என்று காரணம் கேட்காதே 

என்று எழுதியிருக்க 


அதைப்படித்த நட்பு நாட்டு அரசனுக்கு 

ஒரே குழப்பம்...


என்ன இது...?

ஒரு பணக்கார நாட்டின் அரசன்... 

பிச்சைகாரர்களை கேட்கிறாரே...?

என்று நினைத்தபடி 

அந்நாட்டில் பிச்சை எடுக்கும் ஒருவரை 

வேறுவழியின்றி அனுப்பியும் வைக்ககிறார்... 


முதல் நாள்... 

அரசன் தன்னுடைய கையால் சமைத்து... 

அந்த பிச்சைக்காரனுக்கு, 

தடபுடலாக விருந்து வைக்கிறார்...!! 


பிச்சைக்காரும் சந்தோஷமாக சாப்பிட...


நாட்கள் மெல்ல நகர்கிறது...  

ஒரு மாதம் முடியும் பொழுது... 

அந்த பிச்சைக்காரன் இறந்துவிடுகிறார்... 


பின்பு மீண்டும் ஒரு கடிதம்... 


நட்பு நாட்டு அரசன்... 

மீண்டும் ஒரு பிச்சைக்காரனை அனுப்புகிறான்..


அவனும் ஒரு மாதத்தில் இறந்து போக... 


இப்படி மறுபடியும் மறுபடியும் கடிதம் அனுப்ப.... 


நட்பு நாட்டு அரசன் 

அனுப்பி வைக்கும் பிச்சைக்காரர்கள்

அனைவரும்... வந்த ஒரு மாதத்திற்குள் இறந்துபோக....


ஒரு கட்டத்தில் வெறுப்பான நட்பு நாட்டு அரசன்...  


இப்படியே போனால்... 

மாதம் ஒருவர் என்று... 

கொஞ்சம் கொஞ்சமாக என் நாட்டு மக்களை 

கொன்றுவிடுவான்...! என்று 

பிச்சைக்காரர்களை அனுப்புவதை நிறுத்துகிறான்.!!


அதில் கடுப்பான வைரவேந்தன்... 

நட்பு நாட்டு அரசனிடம் கோபமாக... 


சாதாரண பிச்சைக்காரர்கள்....! 

அவர்களை அனுப்பிவைக்க 

உனக்கு துப்பில்ல...!!

உனக்கு எதுக்கு இந்த அரசன் என்ற பதிவி..!!! 

என்று கூற...


அதற்கு நட்பு நாட்டு அரசன்...


ஏதோ பழகிய தோஷத்திற்கு... 

பிச்சைக்காரர்களை உனக்கு பிச்சையாக 

அனுப்பி வைத்தால்... 

என்னிடமே கோபத்தில் கத்துகிறாயா..?

என்று பதிலுக்கு கேட்க... 


இருவக்கும் இடையே சண்டை முத்திப்போய்... 

நட்பு அரசன்.. எதிரியாக மாறி 

இரு நாட்டுக்கும் இடையே போராக வெடிக்கிறது.!!


இறுதியில் நட்புநாட்டு அரசன் வெற்றி பெற்று 

நாட்டை கைப்பற்றி... அரசனை சிறையும் வைத்து... 


பிச்சைக்காரர்கள் என்றால் உனக்கு 

சாதாரணமாப் போய்விட்டது..! 

பிச்சை எடுத்தால் தான்...

அவர்களுடை வலி தெரியும்...!! என்று 

வாரம் ஒருமுறை பிச்சை எடுத்து சாப்பிடு... 

அதுதான் உனக்குத் தண்டனை என்று கூற


வேறு வழியின்றி... வைரவேந்தன் 

வீடு வீடாக சென்று பிச்சை எடுக்கும் பொழுது...

ஒரு நாள் அந்த ஜோதிடர் வீடு வருகிறது... 


ஜோதிடர் அரசரை பார்த்து... 


பரிகாரத்தை சரியாக செய்திருந்தால்

இந்த நிலைமை வந்திருக்காது அரசே என்று கூற... 


அதற்கு வைரவேந்தன்... 

நீர் கூறியதைத்தான் அப்படியே செய்தேன் 

என்று சொல்ல...  


அப்படி என்ன செய்தீர்கள்...? 


வாரம் ஒருமுறை 

என் கையால் சமைத்து உணவளித்தேன்....!

என்று கூற 


பிறகு ஏன் அவர்கள் இறக்கிறார்கள்..? 

என்று ஜோதிடர் கேட்க...


அதுதான் கூறினேனே....

வாரம் ஒருமுறை என் கையால் உணவு அளித்தேன் 

என்று அழுத்தமாக கூற 


சற்று யோசித்த ஜோதிடர் 

வைரவேந்தனைப் பார்த்து 

 

அப்படியென்றால் மற்ற ஆறு நாட்கள்...?

என்று கேட்க


அதைப்பற்றி...  

நீ பரிகாரத்தில் சொல்லவே இல்லையே...?

என்றதும்.... 


ஜோதிடர்........


நீ பிச்சை எடுக்குறதுல தப்பே இல்லை...!!!!


Written by Murali K

வாசித்தமைக்கு நன்றி 🙏 

Friday, 17 April 2020

செத்து சொர்க்கத்திலாவது சந்தோஷமா இரு...!


சில நூறு வருசத்துக்கு முன்னாடி
சந்திரபுரம் என்ற தேசத்தை...
சூரியவரதன்ங்கற சூழ்ச்சிக்கார அரசன்
ஆண்டு வந்தான்...

அவனோட பொழுது போக்கே...

மக்கள் மனசுல ஆசையை தூண்டிவிடும்படி
பெரிய பரிசுத்தொகையோட
ஒரு போட்டியை அறிவிச்சி....
அதுல தோல்வியடையும் போட்டியாளர...
தூக்குல போட்டு சந்தோஷப்படுவது தான்...!

அப்படி தோற்றவர்களை...
தூக்கில் போடுவதற்கென்றே
முரட்டுத்தனமான ஒரு அடிமுட்டாளை...
வேலைக்கு வச்சிருந்தான் அந்த அரசன்.!

அந்த அடிமுட்டாள் சில சமையம்
மனம் இறங்கி... தோற்றவர்களை
கொல்லாமல் விட்டு விடுவதால்....

நீ அவர்களை சொர்க்கத்துக்கு அனுப்பும்
புனிதமான வேலை செய்கிறாய்
என்று சொல்லி... அந்த அரசன்
அடிமுட்டாளை நம்ப வைத்திருந்தான்....

அடிமுட்டாளும்....
அரசனின் கட்டளைக்கு கட்டுப்பட்டு
தோற்றவர்களை பார்த்து....

நீ இங்கிருந்து கஷ்டப்படுவதற்கு பதில்
செத்து சொர்கத்திலாவது
சந்தோஷமாக இரு... என்று கூறியபடி
தூக்கில் போட்டுவிடுவான்....

இப்படி இருக்கும் போது ஒருநாள்...
அரசனோட மனசுல...
வித்யாசமான ஆசை ஒன்னு தோணுது...

அதாவது...
நாம ஆசைப்படுற ஒரு விஷத்தை
நமக்காக... ஆசை ஆசையாய்...
நிறைவேத்த நினைக்கும் போது...
அத நம்ம மனசு....
வேண்டாம்னு சொல்லுற ஒன்னு இருக்கா...?

அப்படி ஒரு விஷயம் இருந்தா...,
அதை கண்டுபிடிச்சி கொடுக்குறவனுக்கு
இந்த ராஜியத்தையே பரிசாக கொடுத்து...
அரசனாக்குகிறேன்.... என்று
பொதுமக்கள் மத்தியில அறிவிக்கிறான்.

காரணம்... எப்படியும்
அத யாரும் கண்டுபிடிக்க போறது இல்ல...!
அப்படியே கண்டுபிடிச்சாலும்...,
அந்த விசயத்த...
நா வேண்டாம்னு சொல்லப்போறது இல்ல...!
அதுனால...
எவனும் ஜெயிக்க போறதும் இல்லைன்னு
ஒரு நினைப்பு...!!!

இந்த போட்டியை அறிந்த
நாட்டு மக்கள் எல்லோரும்....

யாராவது இதுல ஜெயித்து
இந்த அரசனை...
தோற்கடிக்க மாட்டாங்களான்னு
நினைக்க...
ஒருத்தன் மட்டும் போட்டியில
கலந்துக்க தயாராகுறான்....!!

போட்டி நடக்கும் நாளும் வருது...
போட்டியாளர் அரசபைக்கு வருகிறார்...

அரசனைப் பார்த்து...
உங்களுக்கு பிடித்த உணவின்
பெயர்களை சொல்லுங்கள் என்று கேட்க...

உடனே அரசனும்...
தனக்குப் பிடித்த உணவின் பெயரை
பட்டியலிட்டு வரிசையாகக்கூற...
அந்த உணவு அனைத்தும்
அரசன் முன் கொண்டுவரப்படுகிறது...

இப்ப... அந்த போட்டியாளர்
ராஜாவை பார்த்து....

அரசே... உங்க ஆசை தீரும் வரை
இத சாப்பிடுங்க என்று கேட்க...

அரசனும் சாப்பிட ஆரம்பிக்க...
ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல
சாப்பிட முடியாமல்... போதும்னு சொல்றார்....

ஆனாலும் போட்டியாளர் விடல....

அரசே... இவை அனைத்தும் தங்களுத்தான்
சாப்பிடுங்கள் என்று ஆசை ஆசையாய் கூற...

உடனே அரசன்....
வயிறு நிரம்பிவிட்டது..
போதும்னு சொல்லிட்டேனே என்று கூற....

போட்டியாளர்... அரசனிடம்

உணவில் மட்டும் தான் அரசே....
ஆசைப்படும் பண்டம் கண்முன் இருந்தும்...
போதும் என்று சொல்லும் மனம் வரும்
என்று கூற....

அரசன்...
போட்டியாளரை பார்த்து...
புத்திசாலித்தனமாக

நான் போதும் என்று கூறினேனே தவிர...
வேண்டாம் என்று கூறவில்லையே...?!?
இவை அனைத்தும் எனக்குத்தான்...!
பசி எடுக்கும் போது... நானே சாப்பிடுகிறேன்...
இப்ப நீ தோற்றுவிட்டாய்....
என்று கூறி...

யார் அங்கே... இவனை...
அந்த அடிமுட்டாளிடம் அனுப்பி
பொதுமக்கள் மத்தியில்
தூக்கிலிட சொல்லுங்கள்...

இந்த நாட்டிற்கு அரசனாக துடிக்கும்
அனைவருக்கும் இதுதான் கதி என்று
எல்லோருக்கும் புரியட்டும்...
என்று கூற

அந்த அடிமுட்டாளும்...
"செத்தாவது சொர்க்கத்தில்
சந்தோஷமாக இரு"... என்று சொல்லி
தூக்கில் போட்டுவிட்டான்.!

அதை கண்ணால் பார்த்த
மக்கள் அனைவரும் அதிருப்தியில்

இவன்லாம் ஒரு அரசனா....
இவ்வளவு அநியாயம் பண்றானே...
இவனுக்குலாம் நல்ல சாவே வராது...
செத்தா சொர்க்கத்துக்கு போகமாட்டான்..!
நரகத்துக்கு தான் போவான்...
என்று புலம்ப ஆரம்பிக்க....

அரசன் மக்களை பார்த்து
அடுத்து போட்டியில் கலந்துகொள்ள
துடிக்கும் அடிமுட்டாள் யாராவது இருக்கீங்களா..?
என்று கர்வமாக கேட்க...

கேட்ட அடுத்த நொடியே....
அரசனிடம் வேலை செய்யும்
அடிமுட்டாள்....
அரசனின் முன் வந்து நிற்க...

அரசன் அடிமுட்டாளைப் பார்த்து...

நான் அடிமுட்டாள் இருக்கீங்களான்னு
உன்ன கூப்பிடல மடையா...!
போட்டியில் கலந்துக்க போறாங்களானு
கேட்டேன்..!!.

அப்படியே நீ போட்டியில கலந்துக்கிட்டா...
அப்புறம் உன்ன யாரு தூக்குல போடுவா..?
என்று நக்கலாக கேட்க...

அரசபையில் உள்ள அனைவரும்...
சிரிகிறார்கள்...

அவமானத்தில் தலைகுனிந்த
அந்த அடிமுட்டாள்... அரசனிடம்

அரசே...
அரசனாகும் ஆசை எல்லாம் எனக்கு இல்லை...
ஒரு சின்ன சந்தேகம்...
அத கேட்டுட்டு போக வந்தேன்...
என்று கூற....

என்ன சந்தேகம்..?

மக்கள் அனைவரும்...
நீங்க செத்தா... நரகத்துக்கு தான்
போவீங்கன்னு சொல்றாங்க...!!

உங்களுக்கு...
சொர்க்கத்துக்கு போக ஆசையா..?
இல்ல... நரகத்துக்கு போக ஆசையா..?
என்று வெகுளியாக அடிமுட்டாள் கேட்க...!

உடனே அரசன்... சிரித்தவாறே...

இதிலென்ன சந்தேகம் முட்டாளே...
யாராக இருந்தாலும்..,
சொர்க்கத்துக்கு செல்லத்தான்...
ஆசைப்படுவார்கள்.. என்று கூற...

அடுத்த வினாடியே..
அந்த அடிமுட்டாள்...
அரசனைப் பார்த்து...

அப்படினா... உடனே என் கூட வாங்க...
இப்பவே உங்கள தூக்குல போட்டு...
சொர்க்கத்துக்கு அனுப்பி வச்சிடுறேன்...
என்று கூற...

அதைக்கேட்ட அரசன் கோபத்தில்...

யார் அங்கே...
இந்த அடிமுட்டாளை அடித்து துரத்துங்கள்
என்று கத்த....

என்ன அரசே....
சொர்க்கத்துக்கு போக ஆசைப்படுறீங்க...
அந்த ஆசையா நிறைவேத்த
சாக சொன்னா...
வேண்டாம்னு நினைக்கிறீங்க...
செத்தாத்தான சொர்க்கத்துக்கு போக முடியும்...
என்று அழுத்திக் கூற...

அரசன் கேட்ட கேள்விக்கு...
இப்ப பதில் கிடைத்து விட்டது.
வேறு வழியின்றி
அடிமுட்டாள் அரசனாகிறான்.....

இருந்தும்....
தான் அரசன் ஆன பின்பு கூட...
தன்னுடைய பழைய அரசனின்
ஆசையை நிறைவேற்ற...
அவனை தூக்கில் தொங்க விட்டான்
அந்த அடிமுட்டாள்.

செத்தாவது சொர்க்கத்தில்
சந்தோஷமாக இரு... என்று....

*********
எதை விதைத்தாயோ...
அதன் வழியே அறுபடுவாய்...
*********

Written_by
Spark Mrl K (க.முரளி)