Sunday, 8 October 2017

அதே இடம்

ரெண்டு பேர் டூர் போகணும்னு
பிளான் பண்ணுறாங்க...

அவங்க இருக்கிற இடத்துல
ஒரே வெயில் அடிக்குதாம்...
அதுனால ஒரு மலைப்பகுதியில்
ஒரு நாலு நாள் இருந்துட்டு வரலாம்னு...

பிளான் பண்ணுன மாதிரியே
சொன்ன நேரத்துக்கு ரெண்டு பேரும் 
ஒன்னுகூடி...
தேவையான பொருட்களை எடுத்துக்கிட்டு கிளம்பிட்டாங்க...

அதுல ஒருத்தன்
வளவளன்னு பேசிக்கிட்டே இருப்பான்...!
இன்னொருத்தன்
தேவைப்பட்டா மட்டும் பேசுவான்..!!

அவங்க இருக்குற இடத்துல இருந்து
அஞ்சு மணிநேரம் பயணம் பண்ணுனா
மலையடிவாரத்தை அடைஞ்சிடலாம்...

நேரம் ஆகிக்கிட்டே போகுது
மலையடிவாரமும் வந்துடிச்சி...
வண்டி மெல்ல மெல்ல
மலைமேல ஏற ஆரம்பிக்குது...

குறிப்பிட்ட ஒரு இடம் வந்ததும்
அதுல வளவளன்னு பேசுறவன் சொல்றான்..

“அடடா குளிர் காற்று
சும்மா சில்லுன்னு அடிக்குதுல”
என்று...

மலைப்பகுதின்னா அப்படித்தான் டா இருக்கும்...
இயற்கை தந்த வரம்னு

இன்னும் சிறுது நேர பயணத்தில்
மலை உச்சியை அடைந்த அவர்கள்
சொன்ன மாதிரியே அங்க தங்குராங்க...

இரண்டாவது நாள் முடியிற நேரத்துல
அவன் சொல்றான்

“மச்சான் இதுக்கு மேல இங்க இருந்தா ஜன்னி வந்து செத்துடுவேன்..
நாம நம்ம ஊருக்கு கிளம்புறது தான் நல்லதுன்னு...

சரி... உன் இஷ்டம்னு
ரெண்டு பேரும் கிளம்புறாங்க...

வண்டியும் இப்ப
மலையில் இருந்து மெல்ல இறங்கி வருது...
ரெண்டு நாளைக்கு முன்னாடி வந்த அதே இடம்...
இப்ப அதே வாய் சொல்லுது..

“மலைய விட்டு இறங்க இறங்க
வெக்க காத்து அடிக்க ஆரம்பிச்சிடுச்சில...”
என்று

ஏன் டா.. ரெண்டு நாளைக்கு முன்னாடி
இதே இடம்,
இதே நேரம்,
இதே அளவு காற்றுதான் அடிச்சது...

அன்னைக்கு குளிர நோக்கி போகும் போது
இங்க குளிர் அடிக்க ஆரம்பிச்சது..
இன்னைக்கு வெயிலை நோக்கி போகும் போது
வெக்க அடிக்குதா..?

***********
உண்மையில் நாம் எதை நோக்கி போகின்றோமோ...

அதைப்பொருத்து தான் நம் மனதும் செயல்படும்..!!

written by க.முரளி (spark MRL K)
--------------------------------------------------------

Sunday, 1 October 2017

எமலோகம்



ஒருத்தன் தன்னோட கார்ல வேகமா போறான்..

அடுத்த அரைமணி நேரத்துல,
ஒரு குறிப்பிட்ட இடத்துல
அவன் இருந்தே ஆகணும்...!

இரவு நேரம்... போகும் போது..
எதிர்பார்க்காத விதமா...
ஒருத்தன் குறுக்க வர... இவனும்...
தெரியாத்தனமா வந்தவன் மேல ஏத்திடுறான்...!

ஏத்துன வேகத்துல
பயந்து போய் நிக்காம போறான்...

அடிபட்டவன காப்பாத்தனும்னு தோணுச்சோ இல்லையே...
வண்டிய நிறுத்தினா சிக்கிருவோம்னு தோணுச்சி..!!

அவனுக்குள்ள ஒரே பயம்...!

யாராவது இத பாத்திருந்தா...?
வண்டி நம்பர நோட் பண்ணியிருந்தா...?
ஒருவேளை அவன் செத்துப்போயிட்டா...?
நம்ம நிலைமை என்ன ஆகுறது..?
இல்லை இல்லை லேசா தான இடிச்சிருக்கோம்னு

குழப்பத்துலேயே வண்டி ஓட்டி
எதுக்க இருந்த மரத்துல தெரியாம மோதி
ஸ்பார்ட்டுலேயே செத்துப்போய்டுறான்.

மறுநாள், ரெண்டு பேரும் செத்துப்போய்
எமலோகத்துல மீட் பண்றாங்க...

அவனுக்கு இவன் தான்
கார் ஏத்திக்கொன்னதுன்னு தெரியாது...!
இவனும் இருட்டுல அவன் முகத்த பார்க்கல..!!
ரெண்டுபேரும் சகஜமா பேசிக்கிறாங்க

அப்ப கார்ல வந்தவன் கேட்குறான்...
ஆமா நீங்க எப்படி செத்தீங்க சார்..?

அதுவா... நாம்பாட்டுக்கு போய்ட்டு இருந்தேன்
எங்கிருந்தோ வந்த ஒருத்தன்
என் வாழ்க்கையில விளையாண்டுட்டான்...!
ஒருமணி நேரம் துடிதுடிச்சி செத்தேன்...!!
பத்தடி தள்ளி தான் ஆஸ்பத்திரி,
எல்லாம் என் நேரம்...!

என்றவாறே
ஆமா நீங்க எப்படி செத்தீங்க சார்...?
என்று கேட்க

அது பெரிய கதை சார்....
நானும்... நாம்பாட்டுக்கு போய்க்கிட்டு தான் இருந்தேன்...
எவன்னே தெரியல
திடீர்னு ஒருத்தன் என்வாழ்க்கையில
குறுக்க வந்துட்டான்..
நான் ஸ்பார்ட்லேயே காலி...
என்று சொல்ல

உடனே, கார்ல அடிபட்டவன் சொல்றான்
மனித வாழ்க்கையில...
எது எப்ப நடக்குன்னே சொல்லமுடியாது சார்..!
எல்லாம் விதி...!! என்றதும்

என்ன சார் பண்றது...
விதி இப்படியா விளையாடனும்...!

என்று பேசிக்கொண்டே சித்திரகுப்தன் முன்னாடி
ரெண்டு பேரும் வரிசைல நிற்க...
வரிசை மெல்ல நகருது...

இவனுங்க பேசுறத பார்த்த எமனுக்கு
ஒரே ஆச்சர்யம்...!!
முன்ன பின்ன பழக்கம் இல்லைனாலும்
செத்ததுக்கு அப்புறம்
இவ்வளவு ஒற்றுமையா இருக்காங்களேன்னு..

அதுனால...
இவங்களுக்குன்னு ஏதாவது ஆசையிருந்தா
அத நாம எப்படியாவது...
நிறைவேத்தியாகனும்னு நினைக்கார்...

இப்ப இவனுங்க ரெண்டு பேரும்
வரிசையில் வந்து நிற்கிறாங்க...

அப்ப எமதர்மராஜா சொல்றார்...

நீங்க ரெண்டு பேரும்
எதிர்பார்க்காத விதமா செத்து
இங்க வந்துட்டீங்க...
உங்களுக்குன்னு கடைசி ஆசை
எதாவது இருந்தா சொல்லுங்கன்னு
கேட்கர்

அதுக்கு அவனுங்க ரெண்டு பேரும்
சொன்ன பதில்...

என் சாவுக்கு மட்டும் காரணமானவன்
என் கையில கிடைச்சா
அவன அடிச்சே கொல்லனும் சொல்ல...

அப்பத்தான்
எமதர்மராஜாவுக்கே ஒரு விஷயம் புரிஞ்சது

மனிதர்களின்
லட்சியங்களை கூட நிறைவேற்றிடலாம்..!
ஆசைகளை நிறைவேற்றுவது கடினம்னு..!!

********************

இப்படித்தான் ஊருக்குள்ள பாதிப்பேர்
நிறைவேறாத ஆசையோட,
நடைபிணமாக சுத்திக்கிட்டு இருக்கானுங்க...!

written by க.முரளி (sprak MRL K)

Monday, 28 August 2017

நா சாகப்போறேன்

ஒருத்தனுக்கு வாழ்க்கையே வெறுத்துப்போய் 
சோகமா இருக்கான்...!
சொல்லப்போனா அவனுக்கு வாழ்வே பிடிக்கல...!!

எப்பப்பார்த்தாலும்
அவனோட உள்மனசு
அவன்கிட்ட சொல்லிக்கிட்டே இருக்கும்

“பேசாம செத்துட்டா... நமக்கு 
எந்த பிரச்சினையும் இருக்காதுலேன்னு...!”

இப்படித்தான் ஒருநாள்
அவனோட உள்மனசு சொல்லுச்சின்னு
தற்கொலை பண்ணிக்க கிளம்பிட்டான்...!!

உச்சு மலை...!
அங்க இருந்து கீழ விழுந்தா,
ஒரு எலும்பும் மிஞ்சாது..!!

இப்ப அந்த இடத்துல நின்னு
குதிக்கிறதுக்காக நிக்கிறான்..!!

அப்ப...
அந்த வழியா வந்த ஒரு பெரியவர் 
அவன்கிட்ட கேட்கார்...

இங்க என்னப்பா பண்ணிக்கிட்டு இருக்க..?

ம்ம்ம்... சாகப்போறேன்...!!

எதுக்கு..?

வாழப்பிடிக்கால..!!

ஏன்..?

என்னைய  யாருக்குமே பிடிக்கல...!!
என்றதும்

ஓ... இதுதான் உன் பிரச்சசினையா...?

ஆமா...!!

அப்ப தாராளமா குதிச்சி செத்துடு..! 
என்று அவர் சொல்ல

இவனுக்கு ஒன்னும் புரியல..!
அப்படியே ஒரு நிமிஷம்
அந்த பெரியவர பார்த்தபடி இருக்கான்...!!

சரி... உனக்கு யாரெல்லாம் பிடிக்கும்..?
என்று கேட்க
அவன் வாயில் இருந்து பதில் வரல...

சரி.. உனக்கு என்னலாம் பிடிக்கும்..?
அதுக்கும் பதில் வரல...
யோசிக்கிறான்..!!

பிடிக்காத விசயத்த
டக்கு... டக்கு... சொல்லிட்டு
பிடிச்ச விஷயத்தை கேட்டா இப்படி யோசிக்கிற...!!
இது தான் உன் பிரச்சினையே...

முதல்ல இத போய் சரிபண்ணிட்டு..
அப்புறமா வந்து சாகு...!!!

என்று சொல்லிட்டு மெல்ல நடந்து போக ஆரம்பிச்சிட்டார்...
அந்த பெரியவர்...!!

Written by க.முரளி (spark MRL K)

Sunday, 6 August 2017

மரணப்படுக்கை

இன்று அந்த  வீட்டுல ஒரே கூட்டம்...
சாஸ்திர சம்பிரதாயமெல்லாம் முடிஞ்சி
எல்லோரும் காத்திருக்காங்க...!

ஒரு இரண்டு வாரத்துக்கு முன்னாடி...

இதுவரைக்கும் எட்டிக்கூட பார்க்காத
சில சொந்தங்கள்... அந்த வீட்ட
வந்து ஒரு எட்டு பார்த்துட்டு போகுது...

வந்து போகுற சொந்தங்கள் அனைத்தும்
போகும் போது...
சொல்லிட்டு போகும் ஒரு வார்த்தை

“இப்படியே எத்தன நாளைக்குத்தான் 
வச்சிருக்க போறீங்க..
இதுக்கப்புறம் வாழ்ந்து என்ன பண்ண போகுதுன்னு...

அடிக்கடி அந்த வீட்டு பெண்களிடமிருந்து
ஒரு வார்த்தை வரும்...

“எப்ப பாரு ஒரே இருமல் சத்தம்...
நிம்மதியா ஒரு டிவி பார்க்க முடியிதான்னு...”

இந்த பேச்சையெல்லாம் கேட்டுக்கிட்டு
அந்த வீட்டின் ஒரு தனி அறையில 
ஒரு பழைய பாய்விருச்சி படுத்திருக்கு
அந்த உசுரு
இப்பவோ அப்பவோன்னு

எந்திருச்சி நடக்க அதுக்கு துப்பில்ல...!
பெத்து வளர்த்தவன்னு அத பார்க்க வக்கில்ல...!!

தவிச்ச வாயிக்கு...
தண்ணீன்னு உள்ள இருந்து சத்தம் கேட்ட...

ஏய் கிழவி பேசாம இருக்க மாட்ட...
சும்மா சும்மா தண்ணி குடிச்சி
பாயெல்லாம் மோண்டு வச்சிருக்க...
உனக்கு பீ.. மூத்திரம் அள்ளியே
எங்களால ஒரு வாய்
சோறு திங்க முடியலன்னு
வெளியில இருந்து சத்தம் உள்ள போகும்...

பெத்த பிள்ளைங்களே இப்படி பேசுதுன்னு
ஒவ்வொரு நாளும்
யோசிச்சி யோசிச்சி ஒருநாள்
அந்த கிழவி செத்துப்போச்சி...

அது செத்து இன்னைய்யோட
ரெண்டு வாரம் ஆச்சி...
இன்று பதினாறாம் நாள் காரியம்...

உயிரோட இருக்கும் போது
தண்ணி தர யோசிச்ச குடும்பம்
செத்ததுக்கு அப்புறம்
அதுக்குபிடிச்சதெல்லாம் வாங்கிவச்சி
சாமி கும்பிட்டு காத்திருக்கு...

காக்கா வந்து அத சாப்படனுமாம்...!
அப்பத்தான் கிழவியே வந்து சாப்பிட்ட மாதிரியாம்..!!

சாகுறதுக்கு முன்னாடி...
ஓட்டு மேல காயவச்ச வத்தல திங்கவந்த
காக்காவ விரட்டுற மாதிரி விரட்டிட்டு...
செத்ததுக்கு அப்புறம்...
அதே காக்காவுக்கு சோறு போட்டா...
அந்த ஆத்மா சாந்தி அடைஞ்சிடுமா...?

Written by க.முரளி (spark MRL K)

Sunday, 16 July 2017

தியான மலை




என்ன சார்...
ஒரு வாரமா ஆளையே காணும்..? 

இல்லப்பா...
நானும் பொறுத்து பொறுத்து பார்த்தேன்...
குடும்பத்துக்குள்ள ஒரே பிரச்சினை...!
மனசு சுத்தமா சரியில்ல...!!

சரி...
வீட்டுக்குள்ளேயே இருக்க முடியலேன்னு
அப்படியே...
கொஞ்சம் வெளிய நடந்து போகலாம்னு பார்த்தா...

சுத்தி எங்க பார்த்தாலும்...
ஒரே வெயில்.... தூசி... குப்பை...
இதெல்லாம் பார்க்கும் போது
கோபம் கோபமா வருது...

அப்பத்தான் என் பிரண்ட் சொன்னான்
வாழ்க்கையில ஒரு தடவையாவது...
ஒரு பவுர்ணமி அன்னைக்கு
தியானமலைக்கு போய்ட்டு வா
எல்லாம் சரியாகிடும்னு...!!

ஆள் நடமாட்டமே இல்லாத
அந்த இடத்துல என்ன அமைதி தெரியுமா..?
காற்று, மலை, மரம் அருவி...
எங்க பார்த்தாலும் ஒரே பசுமை...

உச்சியில ஒரே ஒரு சிவன்லிங்கம்...
அங்க ஒரு பத்து நிமிஷம்..
எதையும்மே நினைக்காம கண்ணா மூடி
தியானம் பண்ண...
என்ன நிம்மதி...

பேசாம...
அங்கையே இருந்திடலாம்னு தோணுது..!!

அடுத்த தடவ போகும் போது
குடும்பத்தோட போகலாம்னு இருக்கேன்..!

அப்படியாவது எங்க குடும்பத்துக்கு
நிம்மதி வரட்டும்...!

நீங்களும் வேணும்னா வாங்களேன்
எல்லோரும் ஒருதடவ,
அந்த சிவன...
தரிசனம் பண்ணிட்டு வருவோம்
என்று சொல்லி முடிக்க...

ஏன் சார்....
இப்படி எல்லோரு நிம்மதியா தேடி...
காடு மலைன்னு போனா...
அந்த மலையோட நிம்மதி யோய்டாதா..?

அங்கயும்
தூசி, குப்பை, பிளாஸ்டிக்ன்னு...!!



written by க.முரளி (spark MRL K)

எதுக்கு பழகனும்..?




கல்யாணம் முடிச்ச கைய்யோட
ஒரு புதுமணத்தம்பதி
குளிர்ச்சியான மழைப்பகுதிக்கு
ஹனிமூன் போறாங்க....

அந்த பொண்ணு அதிகம் படிச்சதும் இல்ல..
கட்டிக்கொடுக்குற வரைக்கும் இவ்வளவு தூரம்
வெளியூர் பயணம் போனதும் இல்ல..
கிராமத்துலேயே வளர்ந்தது

பையன் கொஞ்சம் படிச்சிருக்கான்...
அந்த பொண்ண...
வீட்டுல சொன்ன ஒரே காரணத்துக்காக
வேண்டா விருப்பாக கல்யாணம் பண்ணிக்கிட்டான்...

முதல்நாள் ரெண்டுபேரும் சுத்திப்பார்க்க போறாங்க...

அந்த பொண்ணு சொல்லுது...
மாமா இந்த இடம் எவ்வளவு அழகா இருக்குல...

என்றதும்
முதல்ல என்ன மாமான்னு கூப்புடாத..!.
ஏதோ... வயசான மாதிரி...!!
இரிட்டேட்டிங்கா இருக்கு...!!!

ம்ம்ம் இனிமே கூப்பட மாட்டேங்க...
என்று
அந்த பொண்ணு கொஞ்ச நேரம் அமைதியா இருக்க

இப்ப எதுக்கு உம்முன்னு இருக்க...
ஏதாவது சாப்புடுரியா...?
என்று கேட்க...

காபி...

இங்க டீ தான் ஃபேமஸ்
என்றவரே அண்ணே ரெண்டு டீ
என்று கடைக்காரனிடம் சொல்ல...

எனக்கு டீ பிடிக்காது...!

எனக்கு உன்னையும் தான் பிடிக்காது...
நா கட்டிக்கலா...
என்று முனங்கியவாறு...

குடி நல்லா இருக்கும்...
என்று டீயை குடித்தபடி
ஆமா...எதோ சொல்ல வந்தியே என்னது...?
என்றதும்...

இல்ல... இந்த இடம் இவ்வளவு அழகா இருக்கே...
இங்கையே கொஞ்ச இடம் வாங்கி...
சின்னதா ஒரு தோட்டம் போட்டு...
நீங்க... நான்னு... அப்புறம் நம்ம குழந்தைன்னு
மூணு பேரு மட்டும் இருந்தா எப்படி இருக்கும்...
என்று சொல்ல

ம்ம்ம்... கேவலமா இருக்கும்...
என்ன என்ன நினைப்பாங்க...
இதுக்காடி எங்கப்பா என்ன படிக்க வச்சாரு..
இங்க ஒரு வீடு, ஆடு, மாடு தோட்டமா...
சரியானா நாட்டுப்புறத்தான இருக்கியே...!

என்று அவன் சொல்ல...
அவளால் பதிலுக்கு வாய் திறந்து
சொல்ல முடியல.. ஆனா அவ மனசு சொல்லும்...

இந்த பேச்சல்லாம் கேட்கவாடா
எங்க அப்பா
வீடு, ஆடு, மாடு, தோட்டம் எல்லாத்தையும்
வித்து உனக்கு என்ன கட்டி வச்சாரு...

எனக்காக எங்கப்பா வித்தத
நமக்காக உன்னால வாங்க துப்பில்லைன்னு சொல்லுடான்னு...!!

டீ எப்படி இருக்கு...?

ம்ம்.. நல்லா இருக்குங்க...!!

இனிமே குடிச்சி பழகு...!!!


written by க.முரளி (spark MRL K)

உங்களுக்கு என்ன தோணும்.?



ஒருத்தன் நைட்சோ படம் பார்த்துட்டு...
வீட்டுக்கு தனியா நடந்து வந்துக்கிட்டு இருக்கான்...

வீடு பக்கத்துல தான்...
நடந்து போன அரை மணிநேரத்துல போயிடலாம்... 

அவன் நினைச்சிருந்தா
பஸ்சுல போகலாம்...
கையில பஸ்சுக்கு காசும் இருக்கு...!

ஒவ்வொரு கால்மணி நேரத்துக்கும்
அவனுக்கு ஒரு பஸ் இருக்கு...
டிக்கெட் என்னோமோ பத்துரூபாய் தான்...

நடந்து போய்கிட்டே இருக்கான்...
இரவு நேரம் என்பதால்...
தனியா போன இவன
திடீர்னு ஒரு பத்து நாய்
சுத்தி வளைத்து குலைக்க ஆரம்பிச்சிடுச்சி...!

இவனுக்கு என்ன பண்ணனும்னு தெரியல...!!

அவனால அந்த இடத்த விட்டு
நகர முடியல...
நகர்ந்தா நாயோட சத்தம் அதிகமாகுது...!!!

இந்த நேரம் பார்த்து
ரோட்டுல யாரையுமே காணும்...
ஒரு இரண்டு நிமிஷம் கழிச்சி
அவன் போகவேண்டிய பேருந்து
அவன கடந்து மெல்ல போகுது...!

இப்ப
அந்த இடத்துல... நீங்க இருந்தா...!
உங்களுக்கு என்ன தோணும்...?

written by க.முரளி (spark MRL K)

Thursday, 15 June 2017

எனக்கு ஒரு சந்தேகம்



ரெண்டு வெட்டி பசங்க...
ஊர் ஒதுக்குப்புறமா இருக்குற 
வாய்க்கால் பாலத்துல உக்காந்து...
வெட்டியா...
உலகத்துல நடக்குற
ஆச்சர்யமான விஷயத்தை பத்தி
ரொம்ப நேரமா பேசிக்கிட்டு இருக்காங்க...!

ஒருத்தன் சொல்றான்...
நேத்து ஒரு வீடியோ பார்த்தேன்...
ஒருத்தனுக்கு
ரெண்டு காலும் கையும் இல்ல...
ஆனா அவன் நம்மள மாதிரியே
எல்லா வேலையையும் பண்ணுறார்...

அதுக்கு அவன் சொல்றான்...
செம... கிரேட்ல...
எனக்குலாம் ஒரு கை உடைஞ்சாலும்
சரியாகுற வரைக்கும் வீட்டுல
பேசாம படுத்துக்குவேன்....

உடனே அவன்
இன்னொருத்தர்...
பத்து பதினைஞ்சி விசப்பாம்பை
கூண்டுல அடைச்சி வச்சி...
அதுக்குள்ளே தைரியமா இருக்காருடா...
பயப்படாம..!!

என்றதும் இவன் சொல்றான்...
உண்மையிலேயே அவரலாம் பாராட்டனும்...!
ஏன்னா...
பாம்ப கண்ட படையே நடுங்க்கும்னு சொல்லுவாங்க...!!
நம்மாலலாம் இத செய்ய முடியாதுப்பா..!!!

உடனே அவன்...
இது பரவாயில்ல...
ஒருத்தன் ஹெலிக்காப்டர்ல இருந்து
அப்படியே ஜாலியா குதிக்கிறான்...
கீழ தண்ணி பளபளன்னு இருக்கு...
அவன் குதிச்சி
தரையில போய் முட்டுற வரைக்கும்
தெளிவா தெரியுது...

என்றதும்... அது வெளிநாடுடா...
அப்படித்தான் தண்ணி இருக்கும்...
நா கோடி ரூபாய் கொடுத்தாலும்
நம்ம ஊர் தண்ணீல குதிக்க மாட்டேம்பா...
தண்ணியா இது சாக்கடை...
இத சுத்தம்பண்ண சொன்ன
நல்ல சரக்க போட்டு ஓப்பி அடிக்காங்க...
இந்தியாவே நாறிப்போய் கிடக்குது...!

என்று இவர்கள் பேசிக்கொண்டிருக்க...
இவர்கள் வீட்டு சாக்கடைத்தண்ணி
பாலத்துக்கு கீழ ஓடிக்கிட்டு இருக்கு...!!

எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்...!

நம்மால் முடியாத ஒரு காரியத்தை
ஒருத்தன் துணிந்து பண்ணுனா...
அவன கிரேட்டுன்னு சொல்றோம்...!!

ஆனா சாக்கடையில இறங்கி
சுத்தம் பண்றவரை ச்சீன்னு சொல்றோம்...!!

ஏன்...
நம்மால்...
சாக்கடையில் இறங்க முடியுமா...?

written by க.முரளி (spark MRL K)

Thursday, 8 June 2017

தலை தனியா... முண்டம் தனியா...



தெருவோரம் சின்னதா ஒரு வீடு...
அந்த வீடுல சின்னதா ஒரு குடும்பம்...

அப்பாவுக்கு வயசாகி போனதுனால
சொன்னதையே திரும்ப திரும்ப
சொல்லிக்கிட்டே இருப்பார்...

பெத்த பிள்ளை தன்பேச்ச கேட்காததால்
தனக்குன்னு பேச்சித் துணைக்கு ஒரு பிள்ளைய
வளர்க்க ஆரம்பிச்சிட்டார்...

தனியா இருக்கும் போது
தன் சோகத்தைச் சொல்லி பேசிக்கிட்டே இருப்பார்..!

திடீர்னு ஒரு நாள் அந்த வீட்டுல
அப்பாவோட அலறல் சத்தம்
தெருவையே திரும்பி பார்க்க வச்சிடுச்சி...

இனிமே என் பேச்ச கேட்க யார் இருக்கா...
எனக்காக இருந்த ஒரு பிள்ளையையும்
எம்மகன் கொன்னுட்டானே...

அவனுக்கு குடிக்க உப்புத்தண்ணி கொடுத்தாலும்...!
எனக்கு நல்ல தண்ணி கொடுப்பான்டா...!!
அப்படிப்பட்ட பிள்ளைய....
என்று சொல்லி முடிப்பதற்குள்,

இப்ப என்ன நடந்து போச்சின்னு கத்துறீங்க...

இதுக்கு மேல என்ன நடக்கணும்...?
அவம்பாட்டுக்கு இந்த வீட்டுல ஒரு ஓரமா
இருந்துட்டு போறான்...
உங்களுக்கு என்னடா வந்துச்சி...?

எங்களுக்கு என்ன வந்துச்சா...?
இப்ப எம்பையன் தோளுக்கு மேல வளந்துட்டான்..
அவனுக்கு நாளைக்கு ஒரு
கல்யாணம் காச்சின்னு வந்தா...
குடியிருக்க ஒரு வீடு வேண்டாம்...?
என்று கத்த

உம்பையன் குடியிருக்க வீடு வேணும்னா
ஊருக்கு ஒதுக்குப்புறமா
இடம்வாங்கி கட்டுடா...
நா கட்டுன வீட்டுக்கு மாடியில எடுக்கு கட்டுன...
என்று பதிலுக்கு கத்த

தெருவே ஒன்னு கூடியிருச்சி
அந்த வீடுப்பக்கம்...

கத்தி கத்தி பேசிய பெரியவரால்
ஒருகட்டத்துக்கு மேல்
எதுவும் பேச முடியாமல் ஒருமூலையில்
போய் அமர...

எந்த சத்தமும் இல்லாமல்
தலை தனியா... முண்டம் தனியா...
வெட்டி சாய்ந்து அமரராய் கிடக்குது
அவர் ஆசை ஆசையாய் வளர்த்த தென்னம்பிள்ளை..!

வேடிக்கை பார்க்க வந்தவர்களும்
மாடி வீடு கட்ட இடைஞ்சலா இருந்தா
மரத்த வெட்டத்தான செய்வாங்க..
சொல்லிட்டு போய்ட்டாங்க...

உண்மையில்

ஆசை ஆசையாய் வளர்த்த மரத்தை வெட்டும் போது...

அந்த மரத்துக்கு வலிக்குதோ இல்லையோ...

அத வளர்த்தவனுக்கு கண்டிப்பா வலிக்கும்...!!

🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴

written by க.முரளி (spark MRL K)




Tuesday, 6 June 2017

மெல்லத் திறந்தது



எழுவதாம் கல்யாணம் முடிஞ்ச கைய்யோட
அன்று இரவு.. 
அந்த கிழவனும் கிழவியும்
தனியா தங்களுடைய அறையில
இதுவரை வாழ்ந்த வாழ்க்கையை
மெல்ல அசைபோட்டுப் பேசுறாங்க...

இருவரும் பேச பேச
நேரம் ஆகிக்கிட்டே போகுது...

இரவு நேரம்
ஊரே சத்தமில்லாம தூங்கிக்கிட்டு இருக்கு...

இவங்க ரெண்டு பேர் மட்டும்
சத்தம் போட்டு பேசிக்கிட்டு இருக்காங்க...

அந்த கிழவி தம்புருஷன்ட்ட சொல்ற..
ஏய்யா...
அதுக்குள்ளே இத்தன வருஷம் ஓடிப் போச்சில்ல..
என்றதும் கிழவன் ம்ம்ம் என்று சொல்ல...

ஆமா... என்ன மொதமொதல்ல பார்த்தது
எப்பன்னு நியாபகம் இருக்கா...!

என்றதும்... அது கிழவனுக்கு நியாபகம் இருந்தும்,
நினைவில்லாதது போல் மெல்ல யோசிக்க...!
உடனே கிழவி

எங்க ஆயா கடைக்கு
உங்க அய்யாவுக்கு மூக்குப்பொடி வாங்க
வருவீங்களே...
என்று சொல்லி முடிப்பதற்குள்..
கிழவனுக்கு எல்லாம் நினைவில் வந்துவிட்டதுபோல்

ஆமா... ஆமா...
அப்பக்கூட உன் ரெண்டு மூக்கையும்
ஒழுக விட்டுக்கிட்டே ஓரமா நின்னுட்டு இருப்பியே...

நீங்க மட்டும் என்னவாம்
ஓட்ட டவுசர் போட்டுக்கிட்டு
அங்கிட்டு இங்கிட்டும் சுத்திக்கிட்டு
இருக்கல..!!

அதலாம் இன்னமுமா நியாபகம் வச்சிருக்க...?

பின்ன எங்க அக்காவ
பொண்ணு பாக்க வந்துட்டு...
என்னத்தான் கட்டுவேன்னு அடம் பிடிச்சவராச்சே...
எப்படி மறக்க முடியும்...!!

உனக்கு ஒன்னு தெரியுமா...?

என்ன...?

அன்னைக்கு
நா உன்னத்தான் பொண்ணு பார்க்க வந்தேன்...!
எங்க வீட்டுலதான்
உங்க அக்காவ பார்க்க வந்தாங்க..!!

என்றதும் ஆச்சர்யத்தில்...
அந்த பாட்டி தாத்தாவின் கண்ணை பார்த்து
மெல்லிய குரலில்

உண்மையாவா....?

என்றதும் தாத்தா மெல்லியதாக சிரிக்க...

பாட்டி...
அப்புறம் என்னாச்சி..! என்று கேட்க...

ம்ம்ம்...அப்புறம் என்னென்னமோ ஆச்சி..
ஆனா உன்ன கட்டிக்கிட்ட
நாள்லருந்து இப்ப வரைக்கு
ஒன்னு சொல்லனும்னு தோணுது...
சொல்லவா...?

என்றதும்
பாட்டி தாத்தாவின் அருகில் வந்து
சரி.. சொல்லுங்க...
என்று சொல்ல

அந்த தாத்தா
மெல்ல வாய திறந்து மெதுவா சொல்றார்...

உனக்கு பதிலா உங்கக்காவைய்யே
கட்டிருக்கலாம்னு தோணுது...!!

அப்புறம் என்ன...
மெல்ல திறந்த தாத்தா வாய்...
இப்ப அய்யயோன்னு வேகமா திறக்க ஆரம்பிச்சிடுச்சி...!!!


written by க.முரளி (spark MRL K)

Thursday, 1 June 2017

நானும் புத்திசாலி



ஒரு முட்டாளும் புத்திசாலியும் 
தொலைதூர பயணத்துக்கு தயாராகுராங்க... 

திரும்பி வர எத்தன நாள் ஆகும்னு
அவங்களுக்கே தெரியாது

வழிச்செலவுக்கு தேவையான
பணத்தையும் பொருளையும்
ஒரு மூட்டையில கட்டி
தயார் பண்ணிக்கிட்டாங்க...

புத்திசாலிய பொருத்தவரைக்கும்
இந்த முட்டாள் எப்பவும் தன்கூடவே
இருக்கணும்னு நினைப்பான்...!

காரணம் அவன் பண்ணுற முட்டாள்தனத்தால
மத்தவங்ககிட்ட எளிதில் புத்திசாளிங்கிற பெற எடுத்திடலாம்னு...!!

அந்த முட்டாள் எது செஞ்சாலும்
செய்யுறதுக்கு முன்னாடி
அந்த புத்திசாளிட்ட கேட்டுட்டுதான் பண்ணுவான்...!
காரணம்
நாமளும் ஒரு புத்திசாலியா மாறணும்னு...!!

பயணம் ஆரம்பம் ஆகுது..
புத்திசாலி புத்திசாலித்தனமா செய்யுறதா நினைச்சி...
அந்த முட்டாள்கிட்ட சொல்றான்...

இந்த பணமும் பொருளுள் இருக்குற மூட்டைய
என்ன விட உன்னாலதான் பத்திரமா பாத்துக்க முடியும்
அதுனால நீயே வச்சிக்கொன்னு...

அந்த முட்டாளும் சரின்னு தலையாட்டிட்டு
மூட்டைய தூக்கிட்டு நடக்க ஆரம்பிச்சிட்டான்...

போகுற வழியில
ஒரு சின்ன ஆற்றை கடக்க வேண்டிய
சூழ்நிலை வருது...

எப்படியும் இந்த ஆத்த கடக்குறதுக்குள்ள
இந்த மூட்டைய ஆத்துல விட்டாலும் விட்டுடுவானு

அந்த புத்திசாலி முட்டாள் கிட்ட சொல்றான்...
“இவ்வளவு நேரம் நீ தூக்கிட்ட...
உனக்கு உடம்பு வலிக்கும்ல
கொஞ்ச நேரம் நா சுமக்குறேன்...”

இவனும் சரின்னு கொடுத்துடுறான்...
அவனும் வாங்கிக்கிறான்...
ஆற்றை கடக்குற வரைக்கும்...

இன்னும் கொஞ்ச தூரம்
நடந்து போறாங்க...
அங்க ஒரு பெரிய ஆறு வருது...
தண்ணி அதுல வேகமா போகுது...

அத பார்த்த உடனே புத்திசாலிக்கு
கொஞ்சம் பயம் வந்துடுச்சி...
இதுல மூட்டைய தூக்கிட்டுப் போனா
ஆத்துல நாமளும் அடிச்சிட்டு போனாலும் போய்டுவோம்னு
முட்டாள் கிட்ட சொல்றான்..

இதுக்கு முன்னாடி நா எப்படி
ஆத்த கடந்து போனேனோ...
அதே மாதிரி இப்ப நீ போ...
இது உனக்கு ஒரு பயிற்சின்னு...

இதுல அந்த முட்டாள் ஆத்துல
இறங்குனானா இல்ல இறங்கலையான்னு தெரியல...!

ஆனா பலநேரம் நாம
அந்த ஆத்துல இறங்கிக்கிட்டுத் தான் இருக்கோம்...!!

ஒருத்தன் சொல்றான்றதுக்காக அத நாம செய்யக்கூடது...
நமக்கு என்ன தோணுதோ... அத செய்யணும்..
அப்பத்தான் வெற்றியும், தோல்வியும்
நம்மளையே சேரும்....!!


written by க.முரளி (spark MRL K)

Friday, 26 May 2017

பத்திரமா பாத்துக்கணும்




ஒரு முரட்டுத்தனமான ஒரு ஆள்...
அவன பார்த்தா அந்த ஊருல
எல்லோரும் பயப்படுவாங்க...

அதே ஊர்ல ஒல்லியா ஒரு ஆள்
அவன பார்த்தா எல்லோரும்
கேலியா பார்ப்பாங்க...

இந்த முரட்டுத்தனமான ஆள்
தெருவுல நடந்துபோன...
எல்லோரும் ஒதுங்கிப்போவாங்க,
பயந்த படி...!!!

அத காரணமா வச்சி
சின்ன சின்ன பஞ்சாயத்து பண்ணி
பிழைக்க ஆரம்பிச்சான்...

அவனுக்கு ஒருத்தன் மேல
கோபம் வந்தா... அவன் கண்ணா பார்த்து
“தொலைச்சிப்புடுவேன் தொலைச்சின்னு..”
சொல்லுவான்
அதுலேயே பாதிபேர் பயந்து ஓடிருவாங்க..!!

ஒருநாள்...
அந்த ஒல்லியா நோஞ்சான் மாதிரி இருக்குறவன்
எதையோ ரொம்ப நேரம்
குனிஞ்சி தேடிக்கிட்டே இருக்கான்....

இத அந்த முரடன்
ஆரம்பத்துல இருந்து பாத்துட்டே இருக்கான்..

முரடனுக்கு ஆர்வம் தாங்கமுடியல...
அப்படி அவன் எதைத்தான்
ரொம்ப நேரமா தேடிக்கிட்டு இருக்கான்னு...

நேரடியா அவன்கிட்டயே போய் கேட்டுட்டான்
“அப்படி எதைத்தான் ரொம்ப நேரமா தேடுறேன்னு..”

அதுக்கு அவன் சொல்றான்...
இல்ல.. கையில இருந்த மோதிரம்
ரொம்ப நாளா லூசா இருந்துச்சி...
இன்னைக்கு அது காணாம போச்சி...
அதான் தேடிக்கிட்டு இருக்கேன்னு....

உடனே முரடன் சொல்றான்...
அதுவே தம்மாத்துண்டு மோதிரம்
அத உன்னால பத்திரமா பார்த்துக்க முடியலையா..?

நா அத பத்திரமாத்தான் பார்த்துட்டு இருந்தேன்...
இன்னைக்கும் வழக்கம் போல
பத்திரமா பார்க்கலாம்னு கைய பார்க்கும் போதுதான்...
அது காணாம போயிருந்துச்சின்னான்
அந்த நோஞ்சான்....

இந்த பதிலா கேட்ட முரடனுக்கு
லைட்டா கோபம் வந்தது...
இருந்தாலும்...

அதான் லூசா இருக்குன்னு தெரியுதுல...
அப்ப அத பத்திரமா கலட்டி
வீட்டுல வைக்க வேண்டியதுதானா...?

இனிமே அத பத்திரமா பாத்துக்கனும்னுதான்
கலட்டி வீட்டுல வச்சிடலாம்னு
நினைச்சேன்... அத கலட்டுரதுக்காகத்தான்
கைய பார்த்தேன்...
அப்பத்தான் அது காணாம போச்சின்னே
எனக்கு தெரிய வந்துச்சின்னான்...

இந்த பதில கேட்ட முரடனுக்கு கோபம்
உச்சத்துக்கு போனாலும்... விடுறதா இல்ல...
திரும்ப திரும்ப கேள்வி கேட்டுட்டே இருக்கான்...
நோஞ்சான் அதுக்கு பதில் சொல்லிட்டே இருக்கான்...

ஒரு கட்டத்துல கடுப்பான முரடன்...
ஏன்டா சின்ன மோதிரத்தைய்யே உன்னால
பத்திரமா பாத்துக்க முடியல...
இறக்கப்பட்டு உன்கிட்ட பேசுனா...
நீ எடக்கு மடக்கா பதில் சொல்லுற...
முட்டாப்பயலாடா நீ...
இதுக்கப்புறம் எதுனா பேசுனா...
தொலைச்சிடுவேன் தொலைச்சின்னு...
சொல்லிட்டு முரடன் கோபமா கிளம்ப ஆரம்பிச்சிட்டான்...

உடனே அந்த நோஞ்சான் போறவனா கூப்டு சொல்றான்...
என்னையறியாம சின்ன மோதிரத்த தொலைச்சிட்டு...
அத தேடுற நா முட்டாள்னா....
உனக்கு முன்னாடி குத்துக்கல்லாட்டம்
நிக்கிற என்ன தொலைச்சிடுவேன்னு சொல்லுற
நீ என்ன அவ்வளவு பெரிய அறிவாளியா...????

இதுக்கப்புறம் முரடனால கேள்வி கேட்க முடியல...!!

மத்தவங்க பிரச்சினைல
தேவையில்லாம மூக்க நுழைக்கிறது கூட
தப்பில்ல...!
ஆனா முழுசா நுழைச்சா
இதுதான் கதி...!!


written by  க.முரளி (spark MRL K)

Saturday, 20 May 2017

சுயநலம்




நாம்பாட்டுக்கு சிவனேன்னு நடந்துபோனவன 
ஒரு கிழவி... 
ரொம்ப நேரமா உத்துப்பார்க்க வச்சிடுச்சி...

காரணம் அந்த கிழவி ஒரு கடைய
வெறிக்க வெறிக்க பாத்துக்கிட்டே இருந்தது..!.

அப்ப நேரம் இரவு பத்து மணிக்கு மேல இருக்கும்...
சாலையோர வாகனத்தின் எண்ணிக்கை கூட
குறைஞ்சிடுச்சி...

அந்த கிழவிய பார்த்தா
அப்படி ஒன்னும் பெருசா தெரியல...

அழுக்கு சட்டையும்.. பாவாடையுமா
கையில ஒரு துணிப்பையுடன் நிக்குது...
எப்படியும் பிச்சையெடுத்துதான்
தன்னோட வாழ்க்கைய ஓட்டுதுன்னு நல்லா புரியுது...

சரி... ,மணி இப்ப பத்துக்கு மேல ஆச்சி..
அந்த கிழவிக்கு இப்ப கண்டிப்பா பசிக்கும்...
அதுனால தான்...
சாப்பாட்டுக்கு ஏதாவது தருவாங்கன்னு
அந்த கடைய பாக்குதுன்னு நினைச்சா
அது ஒரு மெடிக்கல் சாப்...

கொஞ்ச நேரத்துல அந்த கடையையும் பூட்டி..
கடைக்காரர் வாசல்ல சூடம் ஏத்த
ஆரம்பிச்சிட்டார்...

அந்த கிழவி இப்ப கடைய பாக்குறத விட்டுட்டு
அந்த சூடத்த பார்க்க ஆரம்பிச்சிடுச்சி...
அது எப்ப அனையும்னு...

எனக்கு பொறுமை தாங்கல..
என்னதா பண்ண போறேன்னு...
அந்த கிழவிட்டேயே போய் கேட்டுடலாம்னு
இருந்துச்சி...

அதுக்குள்ளே அந்த சூடம் அணைஞ்சிடுச்சி..!

அணைந்த வேகத்துல அந்த கிழவி
கடைக்கிட்ட போய் வாசல்ல உக்காந்து...
தன்னோட பையில்... எதையோ தேடி
கடைசில மூடியில்லாத ஒரு பேனாவ எடுத்துச்சி...

எனக்கு இப்ப ஆர்வம்... இன்னும் அதிகமாச்சி...
என்ன செய்யப்போறாலோ அந்த கிழவின்னு..!

கொஞ்ச நேரம் அமைதியா எதியோ யோசிச்சவ
மறுபடியும் பையில எதையோ தேட ஆரம்பிச்சிட்டா...!!

எனக்கு அங்க நின்னு நின்னு
கால் வலியே வர ஆரம்பிச்சிடுச்சி...

கடைசீல கையில் சின்னதா ஒரு
விக்ஸ் டப்பாவ எடுத்து..
அந்த டப்பாவின் இடுக்குல இருக்குற
கொஞ்ச விக்ஸ்சையும் பேனாவின் முனையால்
நோண்டி எடுத்து...
தன்னோட காலுல தேச்சிட்டு...
நிம்மதியா படுத்து... ரெண்டு நிமிசத்துல குறட்டை விட்டு தூங்கிடுச்சி...

சரி... இனிமே இங்க நின்னு
என்ன புரோஜனம்...  கிளம்பலாம்னு 

நினைக்கும் போது... என்னோட கால் வலிக்கு
மருந்து வாங்கலாம்னு தோணுச்சி...

திரும்பி பார்த்தா
இருந்த ஒரு கடையும் பூட்டியாச்சி....!

வேற வழியில்லாமல்
எப்பொழுதும்போல் ஒரு சுயநலவாதியாக
நடந்துபோய் படுத்து தூங்கிட்டேன்
என்னோட அறையில..!!!


written by க.முரளி (spark MRL K)

நிம்மதியா ஒருவாய் சோறு....



இரண்டு சின்ன ஊர்...
அதுக்கு இரண்டு தலைவர்கள்...

அந்த
இரண்டுபேருக்கும் இடையே...
போட்டியை விட பொறாமை அதிகமாக இருக்கும்...!!

ஆனா இந்த ரெண்டு பேரின்
நோக்கமும் ஒன்னுதான்...

சின்னதா இருக்குற இந்த ஊர...
எப்படியாவது பெரியதா ஆக்கனும்னு

அனா அதுக்குன்னு
சொந்தமா யோசிக்க தெரியாது...
ஏற்கனவே வளர்ந்த நகரத்த பார்த்து
காப்பி அடிப்பானுங்க...

பக்கத்து ஊர்ல
புதுசா பஸ்டாப் கட்டுனா...
இவனுங்க ஒரு பஸ்டாண்டைய்யே கட்டுவாங்க...

இந்த ரெண்டு தலைவர்ல ஒருவர்
தன்னோட ஊருக்கு
ரயில்வே ஸ்டேசன் கொண்டுவந்தா...!!

இன்னொருவர் தலைவர்
ரயில்வே ஸ்டேசனோட சேர்த்து ஏர்போர்ட்டையும்
கொண்டுவர முயற்சி பண்ணுவார்...

இப்படியே
ஒருத்தர் மேல ஒருத்தர் பொறாமைப்பட்டு
அந்த ஊர்ல
தியேட்டர், காலேஜ், சாப்பிங்மால்ன்னு
எக்கச்சக்கம் வந்துடுச்சி....!!

முந்தி சின்னதா இருந்த ஊர்...
இப்ப
இரண்டும் இரண்டு மடங்கு பெரியதா
வளர்ந்துடுச்சி...
அதனுடைய சுற்றளவும் பெரிசாகிடுச்சி...

ஊர் வளர்ந்ததுனால
எல்லோருக்கும் நல்ல தொழில் கிடைச்சது...!
அந்த ஊர் மக்களும் நிம்மதியா
மூணு வேலையும் நல்லா சாப்பிடுறாங்க...!!

இப்ப ஊருக்குள்ள ஒரே பேச்சி...

"ச்சே நம்ம தலைவர் மாதிரி...
ஊருக்கு ஒருத்தர் இருந்தா போதும்...
அந்த ஊர் சீக்கிரம் வளர்ந்திடும்..
என்னதான் போட்டி பொறமைன்னு இருந்தாலும்
கடைசில சாதிச்சிட்டாங்கன்னு..."

"முந்திலாம் ஒரு நல்ல நாளுக்கு
நல்ல துணிமணி எடுக்கனும்னா கூட
வேற ஊருக்குத் தான் போகனும்...
ஆனா இப்ப
எல்லாம் நம்ம ஊர்லைய்யே கிடைக்குன்னு..."

இப்படி ஊர் பெருமைய பத்தி
சந்தோஷமா பேசும் மக்கள் ஒரு விசயத்தை
மட்டும் மறந்து போய்ட்டாங்க...!

என்னதான்...
மூணு வேலையும் நிம்மதியா சோறு தின்னாலும்...!
அதுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும்
நம்ம ஊர்லைய்யே கிடைச்சாலும்...!!

அத வெளியூர்லருந்துதான் வாங்கிட்டு வந்து,
இங்க விக்கிறோம் என்பதை...!!!

நமக்கு தேவையான பொருளை
என்று நாமே விளைவிக்கிறோமோ
அன்றுதான் அது வளர்ச்சி...!

ஆனா நாம்
வளர்ச்சிக்காக போராடி போராடி
வளங்களை அழித்துக்கொண்டிருக்கிறோம்...!!


written by க.முரளி ( spark MRL K)

Thursday, 20 April 2017

ஐம்பது ரூபாய் டிக்கெட்





    சென்னை, மதுரை போன்ற
    நகரங்களில் ஒரு வழக்கம் உள்ளது......

    அதாவது... ஐம்பது ரூபாய் கொடுதது
    ஒரு டிக்கெட் வாங்குனா (ஒன் டே பாஸ்)
    அன்னைக்கு முழுவதும் பஸ்சுல
    டிக்கெட்டே வாங்காம நல்லா சுத்திக்கலாம்...

    அப்படி ஒரு நகரத்துல ஒருத்தன்...
    ஒருநாள் பொழுதை கழிக்க
    அந்த டிக்கெட்ட எடுத்துக்கிட்டு
    ஒரு பஸ்சுல ஏறிட்டான்...

    அவனுக்கு
    இந்தயிடத்துக்குத்தான் போகனும்னு
    அவசியம் இல்ல... அன்னைக்கு முழுவதும்
    உக்கார சீட் கிடைக்கிற பஸ்ல ஏறி
    நினைக்கிற இடத்துல இறங்கி...
    திரும்பவும் ஒரு பஸ்ல ஏறி...
    சாயங்காலம் வரை பொழுத கழிக்கனும்
    அவ்வளவு தான்....!!

    அப்படி அவன் ஏறும் போது
    காலியா இருந்த பேருந்து...
    அடுத்த இரண்டு ஸ்டாப்புல
    புல்லாகிடுச்சி....!!!

    பஸ்ல பாதிபேர் உக்கார இடமில்லாம
    நின்னுட்டு இருக்காங்க....
    சிலபேர் படிக்கட்டுல தொங்கிக்கிட்டு வாராங்க...

    அவங்க எல்லாம்....
    இவனமாதிரி பயணம் பண்ணல...!!

    தினமும்
    இந்த இடத்துக்கு இத்தனை மணிக்கு போயே ஆகனும்...!
    அதுக்கு இந்த பஸ்சுல ஏறுனாத்தான் போக முடியும்னு
    பயணம் பண்றவங்க...!!
    அது வேலைக்கோ அல்லது பள்ளிக்கோ...!!!

    அந்த பஸ்ல ஒருத்தருடைய
    சத்தம் மட்டும் சத்தமா கேட்டுக்கிட்டே இருக்கு...

    "டிக்கெட் வாங்குறவங்க மறக்காம வாங்கிக்கோங்க...
    எங்கமா போகனும்...
    சில்லறை இருந்தா கொடுமான்னு..."

    ஆனா இந்த சத்ததை பத்தி இவனுக்கு
    கவலை இல்லை...
    இவன் கிட்டதான் பாஸ் இருக்கே...

    இவன் உக்காந்திருக்கிற சீட்டுக்கு
    பக்கத்துல ஒருத்தன் கூட்டத்துல
    கஷ்ட்டப்பட்டு நிக்கிறான்...

    யாராவது அடுத்த ஸ்டாப்புல எந்திரிச்சா...
    உடனே உக்காந்திடலாம்னு...!!!

    இவனுக்கு அடுத்த ஸ்டாப்புல இறங்கனும்னு தோனுது...
    ஆனா இவ்வளவு கூட்டத்துல கஷ்ட்டப்பட்டு
    நெரிசல்ல போய் இறங்கவா...
    பஸ் கொஞ்சம் காலியானவுடனே இறங்கிக்கலாம்னு
    நினைக்கிறான்...

    இதில் ஒரு விசயம் என்னன்னா...?

    இலக்கு இல்லாம பயணம் பண்றவன்
    ஒருநிமிஷம் கஷ்ட்டப்பட்டு இறங்கிட்டா...!

    இலக்கோடு பயணம் பண்ணுறவன்
    ஒரு பத்து பதினைஞ்சி நிமிசம்
    நிம்மதியா உக்காந்திட்டு போவான்...!!

    உண்மையில் இங்கு பாதிக்கு மேற்பட்டோர்
    இலக்கு இல்லாமல் பயணம் செய்வதால் தான்...
    இலக்கோடு பயணம் செய்பவர்களுக்கு,
    அதில் இடம் கிடைப்பதில்லை....


    written by க.முரளி (spark MRL K)

Tuesday, 11 April 2017

ஆஃப்ட்ரால் ஒரு ரூபாய்




ஞாயிற்றுக்கிழமை ஒருத்தன்
தனியா ஊர் சுத்த முடிவு பண்றான்...

அவன் கிட்ட ஒரு பழக்கம் இருக்கு..
அவனோட பர்ஸ்ல
எவ்வளவு பணம் இருந்தாலும்
அதுல தனியா ஒரு நூறு ரூபாய
ஒளிச்சி வச்சிருப்பான்...

ஒரு ஸ்சேப்டிக்கு...!
என்றாது ஒருநாள் அது பயன்படும்னு..

அவன பொருத்தவரை,
நல்லா சம்பாதிக்கனும...
நல்லா செலவு பண்ணும்...
அவ்வளவுதான்

முதல்ல ஒரு கடைக்குப் போறான்...
தேவையானத வாங்குறான்...
அதுக்கு காசும் கொடுக்குறான்...

கடைக்காரர் சொல்றார்...
"தம்பி மீதி ஒரு ரூபாய் சில்லறை இல்ல
அதுக்கு சாக்லேட் தரட்டுமா...?"

அதுக்கு அவன்...
"அந்த ஒரு ரூபாய வச்சி
நான் என்ன மச்சி விட கட்டப்போறேன்...!
நீங்களே அத வச்சிக்கோங்கன்னு சொல்லி
பந்தாவா கிளம்பி போறான்...

அடுத்து ஒரு ஓட்டலுக்கு போறான்
அங்கு சப்பிட்டு முடித்தப்பின்
அதுக்கு காசு கொடுத்து
மீதி சில்லறைய வெயிட்டருக்கு
டிப்ஸ்சா கொடுத்துட்டான்...

உடனே வெயிட்டர் இவனுக்கு
வணக்கம் வைக்க...
இவன் கெத்தா கிளம்பி போறான்...

காரணம் சில்லாரையெல்லாம்
அவனோட பர்ஸ்ல வச்சா
அவன் பர்ஸ் வெயிட்டாயிடுமாம்...

இப்படியே செலவு பண்ணுனதுல
நேரம் போனது தெரியாம இரவு ஆகிடுச்சி...
கையுலையும் எல்லா பணமும் செலவாகிடுச்சி...

கடைசியா ஒளிச்சி வச்ச நூறு மட்டும் தான் இருக்கு...

இப்ப அவன் வீட்டுல இருந்து வெறும்
ஒரு பத்து கிலோமீட்டர் தூரத்துல தான் இருக்கான்...

சரி ஆட்டோவுல போயிடலாம்னு
அட்டோ காரன்கிட்ட கேட்கான்...
அவன் நூத்தியம்பது ஆகும்னு சொல்றான்...

நடந்தும் போக முடியாது...
வேற வழியில்லாம
பக்கத்துல இருக்குற பஸ்டாப்புல நிக்கிறான்...

இரவு என்பதால்
அரை மணி நேரம் கழிச்சி
ஒரு பஸ் வருது...

கையில் நூறு ரூபாய் இருக்குற
தைரியத்துல பஸ்சுல ஏறி
கண்டக்டர் கிட்ட கொடுத்து
டிக்கெட் கேட்டா...

பதினோரு ரூபாய் டிக்கெட்டுக்கு
நூறு ரூபாய நீட்டுற...
ஒரு ரூபாய் கொடுத்துட்டு
மீதி தொண்ணூறு ரூபாய வாங்கிக்கோன்னு
சொல்லிட்டார்...

மத்தவங்க முன்னாடி சொன்னதுனால இவனுக்கு
கொஞ்சம் அவமானமா போச்சி...!!

வெறும் ஒரு ரூபாய் தான...
பரவாயில்ல நீயே வச்சிக்கோன்னு
நாம சொல்லும்போது
நமக்கு பெருமிதமாத்தான் இருக்கும்...!

அதே ஒரு ரூபாய
நாம கொடுக்க முடியாம போகும்போதுதான்
நமக்கு அசிங்கமா இருக்கும்...!!

ஆனா அது எப்பவும்
ஆஃப்ட்ரால் ஒரு ரூபாய்...!!!



written by க.முரளி (spark MRL K)

Thursday, 6 April 2017

பழைய புத்தக்கடை


படிக்க விருப்பம் இல்லாத
ஒரு பணக்கார வீட்டுப்பையன்
ஒரு கல்லூரில படிக்கிறான்...

அவன் படிக்கானோ இல்லையோ...
அந்தந்த பாடத்துக்கு தேவையான
எல்லா புத்தகத்தையும் வாங்கிடுவான்.

காரணம்...
புத்தகம் வாங்குவதாக சொல்லி வீட்டுல
கொஞ்சம் காச ஆட்டைய போட்டுடுவான்...’

அந்த செமஸ்டர் முடிஞ்சா உடனே...
அதே புத்தகத்தை வித்து காசாக்கிடுவான்...
ஆனா கடைசிவரைக்கும் அந்த புத்தகத்தின்
முதல் பக்கத்தை கூட படிக்கமாட்டன்...

இப்படித்தான் ஒருதடவ ஐநூறு ரூபாய
வீட்டுல வாங்கிட்டு போய்...
நானுறு ரூபாய்க்கு ஒரு புத்தகம் வாங்கி
மீதி நூற அப்புறமா செலவு பண்ணலாம்னு
அதே புத்தகத்துக்குள்ள வச்சிட்டான்...

வீட்டுலயும் யாரும் படிக்காத்துனால
அந்த புத்தகத்த தொட்டுக்கூட பார்க்கல...!!

என்னமோ தெரியல
அவநேரம்... அந்த நூறு ரூபாய
உள்ள வச்சதைய்யே அவன் மறந்துட்டான்...

செமஸ்டர் முடிஞ்சாது...
முடிஞ்சா கைய்யோட அந்த புத்தகத்தை
பழைய புத்தக கடையில நூத்தியம்பதுக்கு விக்கிறான்..

அத அந்த கடைக்காரர்...
இரநூறு ரூபாய்க்கு ஒரு பையன்ட வித்துடுறார்.

அந்த பையன் படிக்கிற பையன்
ஆனா கல்லூரில என்ன நடத்துறாங்களோ
அத மட்டும் தான் படிப்பான்...
அப்பத்தான் நல்ல மார்க் வாங்க முடியுமாம்...!!

இந்த புத்தகத்துல பாதிக்கு மேல்
அவுட்டாஃப் செலபசாம்
அதனால பாதிக்கு மேல் அவன் புரட்டிக்கூட பார்க்கல...!
புத்தகம் பெரிய புத்தகம் என்பதால்...
உள்ள இருந்த நூறு இவன் கண்ணுக்குத் தெரியல...!!

நல்ல படிச்சான்... பாசாகி நல்ல மார்க்கும் வாங்குனான்...
வாங்குன கைய்யோட அந்த புத்தகத்தை
அதே பழைய கடையில வித்துட்டு...
வேற ஒரு புத்தகத்த வாங்கி
மறுபடியும் கல்லூரில நடத்துறதா மட்டும்
படிக்க ஆரம்பிச்சிட்டன்

ஆனா கண்டிப்பா
அந்த புத்தகத்தை எழுதியவர்...
முதல் பக்கத்துல இருந்து கடைசி பக்கம் வரை...
எல்லோரும் படிச்சி தெரிஞ்ச்சிக்கிடனும்னு தான்
எழுதியிருப்பார்...!!

இங்க எல்லா கல்லூரி புத்தகத்துலயும்
பாதி புக்குதான் செலபஸ்ல இருக்குன்னு சொல்லி
மீதி புக்க அந்த நூறு ரூபாய் மாதிரி,
யாருக்கும் பயன்படாம ஆக்கிட்டாங்க...!!

ஒருவேளை அவன் அத புரட்டிப் படிச்சிருந்தா...
கல்வியோட சேர்த்து செல்வமும் அவனுக்கு கிடைச்சிருக்கும்...

அவன் வாழ்க்கையில...!
கல்விச்செல்வமாய்...!!

written by க.முரளி (spark MRL K)

Tuesday, 28 March 2017

தெய்வக்குத்தம் ஆகிடுச்சி


ஒரு ஊருல
ரெண்டு வண்டிமட்டும் போய்ட்டு வரக்கூடிய...
சின்ன சாலை ஒன்னு இருக்கு..

திடீர்னு ஒரு பெரிய வண்டி,
திரும்பனும்னாக் கூட
ரோட்டுக்கு இரண்டு பக்கம் இருக்குற
மரம் அதுக்கு இடையூரா இருக்கும்...!!

அத நாலுவழி சாலையா மாத்த
அரசாங்கம் முடிவு பண்ணியது...

ரோட்டுக்கு ரெண்டு பக்கமும் விவசாய நிலம்...
அத அகலப்படுத்தி ரோட்ட போடனும்...
அதுக்கு கிராம மக்கள் ஒன்னும் சொல்லல...

காரணம்... நிலத்துக்கு சொந்தக்காரங்க,
வெறும் நாலஞ்சு பேர்தான் என்பதால்...

கடைசில அந்த சாலைக்கு நடுவுல
ஊர் பொதுக் கோவில் ஒன்னு இருந்தது...
அத இடிச்சி தான்
ரோடு போடா வேண்டிய நிலை...

இல்லைனா கோவில்ல இருந்து
ஒரு கிலோமீட்டர் சுத்திதான் போடா முடியும்னு...
அதுக்கு செலவும் அதிகமாகும்...

ஆனா அதுவரைக்கும் அமைதிகாத்த மக்கள்...
கோவில் என்றதும் ஒன்று கூட ஆரம்பிச்சிட்டாங்க...

கலெக்டர் அலுவலகத்துக்கு
முன்னாடி நின்னு போராடம் பண்றாங்க...

அப்ப ஒரு பெருசு சொல்லுது...

“நாங்கல்லாம் விவசாயிங்க...
வருஷ வருஷம் அந்த கோவில்ல
திருவிழா நடக்குரதுனால தான்...

எங்க ஊருல மழை தண்ணி பேயுது..”
நீங்கவாட்டுக்கு இடிச்சி
அத தெய்வக்குத்தமாக்கி...
எங்க பொழப்புல..."

ஊரெல்லாம் கூடி வந்ததுல்னால
சாலை ஒரு கிலோமீட்டர் சுத்தி போடப்பட்டது...

ஆனா இன்னைக்கு
இந்த ரோட்ட போட்டடு நாலு வருசமாச்சி....

யாரு கண்ணு பட்டுச்சோ தெரியல...

மழை தண்ணி இல்ல...
விவசாயம் செத்துப்போச்சி...

இப்ப அதே பெருசு
கோவில் வாசல்ல நின்னு புலம்புது

அன்னைக்கு எங்க இடத்தைஎல்லாம் கொடுத்து...
உன் கோவில இடிக்காம பார்த்துக்கிட்டோமே...
வருஷ வருஷம் உனக்கு திருவிழா நடத்துரோமே...
உனக்கு இரக்கமே இல்லையா...
இன்னைக்கு நாங்க மழை தண்ணி இல்லாம சாகுரோம்னு...

இவர் எவ்வளவு புலம்பியும்
இவர் கேள்விக்கு... சாமி பதில் சொல்லல...!

எப்படி சொல்லும்...?

வெறும் கட்டிடத்தை காப்பாத்த போராடின இவங்க..

சாலைக்கு ரெண்டு பக்கம் வளர்ந்து நின்ன
கடவுள வெட்ட விட்டுட்டாங்களே...

அப்ப தெய்வக்குத்தம் ஆகத்தான் செய்யும்...!!!

written by க.முரளி (spark MRL K)

Friday, 3 March 2017

தத்துவம் - 2017




இரண்டு பெரிய ஞானிகளின் 
புத்திசாளி சீடர்கள்...
ஒருத்தர ஒருத்தர் 
ஒரு சாலையில் சந்திச்சுக்கிறாங்க...

அப்ப ஒரு பெரியவர் 
அவங்க கிட்ட பிச்சைகேட்க வாரார்...

"
ஐயா தர்மம் எதாவது போடுங்க சாமின்னு"

ஒருத்தன் சொல்றான்....

எங்க குரு அடிக்கடி சொல்லுவார்...
நாம எப்பவும் 
நெருப்பு மாதிரி இருக்கனும்...
ஏன்னா...?

"
அதுதான் எப்பவும் 
நிமிர்ந்து நிற்கும்...!"

இல்லைனா நாமளும் ஒருகாலத்துல 
இந்தமாதிரி பிச்சை எடுக்க வேண்டிய நிலமை 
வந்தாலும் வந்திடும்னு...


உடனே 
இன்னொருத்தன் சொல்றான்

"
இல்ல எங்க குரு சொல்லுவார்...
நாம தண்ணீர் மாதிரி
எப்பவும் மேலிருந்து கீழே 
இறங்கி போக கத்துக்கனும்...

ஏன்னா..?
அதுதான் கொதிச்சி எரியிற 
நெருப்பக்கூட ஈசியா அனைச்சிடும்னு...

அதனால 
இவருக்கு பிச்சை போடுறதுல்ல தப்பில்லா...!

உடனே அவன் சொல்றான்...

நெருப்பு நினைச்சா 
தண்ணீர கூட ஆவியாக்கி மேலே அனுப்பிடுமனு...

உடனே இவன்
ஆனா அந்த ஆவியும் குளிந்தவுடனே
மீண்டும் தண்ணீரா மாறிடும்னு

இப்படி மாறி மாறி பேசினதுல்ல 
ரெண்டு பேருக்கும் சண்டை முத்திப்போச்சி....

இவங்க ரெண்டு பேரும் 
பிச்சை போடுவாங்களா மாட்டாங்களான்னு
ரெம்ப நேரமா பார்த்துட்டு இருந்த 
அந்தப் பெரியவர்....

டேய்... முட்டாப்பயலுகளா...
அடுத்தவன் உபதேசம்
அவன் அவன் இஷ்ட்டத்துக்குத்தான் இருக்கும்...!

முதல்ல
"
நீ... நீயா இரு..."ன்னு
ஒரு பெரிய்ய தத்துவத்த சொல்லிட்டு 
திரும்பி பார்க்காம போய்ட்டார்...

written by க.முரளி (spark MRL K)