Sunday, 24 November 2019

எச்சில் சோறு (தன்மானப் பிரச்சனை)


ஒரு காட்டுல
ஒரு பிணம் திங்கிற கழுகும்
கம்பீரமான சிங்கமும் வாழ்ந்து வந்துச்சாம்...

அந்த கழுகு எப்பவுமே...
அந்த சிங்கம் வேட்டையாடி சாப்ட்டு
மிச்சம் வச்சத (இறந்த உடலை) சாப்பிட...
அந்த சிங்கம் இருக்குற இடத்துக்கு
அடிக்கடி வந்து போகும்...

அத பாக்குற சிங்கம்...
எலக்காரம சிரித்தபடி...!

வெக்கமே இல்லாம... இப்படி
என்னோட எச்சி சோத்துக்கு வாரியே...??ன்னு
கேட்கும்...!

அதுக்கு அந்த கழுகு...
சிங்கத்துக்கிட்ட

நா எச்சி சோத்துக்கு வரல...
நீங்க தின்னுட்டு மிச்சம் வச்சத
சுத்தம் பண்ண வந்திருக்கேன்னு...
சொல்லும்...!! 

ஒரு நாள்...
இதே மாதிரி சாப்பிடும் போது...
அந்த கழுக பார்த்து சிங்கம்
ஏளனமாக பேச...

பதிலுக்கு கழுகும் ஏதோ சொல்ல...
அந்த இரண்டுக்கும் இடையே
சின்ன வாக்குவாதம் ஏற்பட்டுச்சி....

ஆரம்பத்துல...
சின்னதா ஆரம்பிச் வாக்குவாதம்...
போகப் போக அதுவே
தன்மானப் பிரச்சினையா மாற ஆரம்பிச்சது...

தான் வேட்டையாடி...
மிச்சம் வைக்கிற எச்சிய...
சாப்புடுற பிணம் தின்னிக்கழுகைப்
பார்த்து... சிங்கம் சொல்லுச்சி...

மவனே... நீ மட்டும்,
என் கையில சிக்குன...!!!!
உன்ன... ஒரே அடியில அடிச்சி...
கொன்னுடுவேன்...!!!

அதுக்கு அந்த பிணம் திங்கிற கழுகு
பறந்துக்கிட்டே சொல்லுது...

நீ என்னடா என்ன கொல்லுறது..!

என்னைக்கு இருந்தாலும் ஒரு நாள்...
இந்த காட்டுல நீ....
அநாதையா செத்துக்கிடப்ப...!!

அன்னைக்கு உன்னோட கறிய தின்னு...
என்னோட வயித்துல ஜீரணமாக்கி...
அடுத்த நாள் உன்ன...
இந்த பூமிக்கு உரமா தூவிட்டுப் போறேன்னு
சாவால் விட்டுச்சி...!!!

இப்படியே... சண்டையில
நாட்கள் போய்க்கிட்டு இருக்க...
அந்த சிங்கத்துக்கும் கழுகுக்கும்
வயசும் கூடிட்டுப் போச்சி...

இப்ப... முன்ன மாதிரி அந்த சிங்கத்தால...
வேட்டையாடவும் முடியல...
உண்ண உணவும் சரியா கிடைக்கல...!!

ஒரு நாள் அந்த காட்டுக்கு
மிருகங்கள பிடிக்க...
ஒரு வேட்டைக்காரன் வாரான்...

அவன் ஒரு கூண்ட ரெடி பண்ணி...
அதுல வெட்டி வச்ச ஆட்டுக்கறிய,
முழுசா கட்டி தொங்க விடுறான்....

அந்த கரியோட வாசனைக்கு...
பசியில இருக்குற சிங்கம்...
ஆசைப்பட்டு உள்ள போய் மாட்டிக்குது

இப்ப அந்த சிங்கத்துக்கு வேற வழியில்ல...!

தப்பிக்க உடம்புல தெம்பு வேணும்னா...
அந்த ஆட்டுக்கறிய தின்னு தா ஆகணும்.!

அத பார்த்த கழுகு...
பழைய பகைய மனசுல வச்சிக்கிட்டு
அந்த சிங்கத்துக்கிட்ட....

உன்ன...
காட்டுக்கே ராஜான்னு சொல்றாங்களே...
வெக்கமே இல்லாம...
எவனோ வெட்டி வச்ச கறிய...
திங்கிறியேன்னு கேட்க

ஏற்கனவே கடுப்புல இருந்த சிங்கம்
அந்த கழுக பார்த்ததும் சூடாகி
கூண்டுக்குள்ள இருக்கறதையும் மறந்து

இப்பவும் சொல்றேன்... ரொம்ப பேசுன...
உன்ன அடிச்சே கொன்னுடுவேன்னு
கோபமா சொல்லுது...!

உடனே அந்த கழுகு
கூண்டுக்கு பக்கத்துல போய்...

எங்க... இப்ப என்ன அடிச்சி
கொல்லு பார்க்கலாம்னு
கேலி பண்ணுது...!!!

நேரம் ஆகிக்கிட்டே போக
கூண்ட வச்சிட்டுட்டு போன
வேட்டைக்காரன் திரும்பி வரும்
நேரமும் நெருங்கி வருது....

சிங்கம் எவ்வளவோ முயற்சி பண்ணியும்
அதோட உடல் பலத்தால... கூண்ட
உள்ள இருந்து திறக்க முடியல்...

அந்த கழுகு நினைச்சா வெளிய இருந்து
திறக்க முடியும்...

ஆனா... இப்ப கழுகு கிட்ட உதவி கேட்ட
பகைய மனசுல வச்சிக்கிட்டு
பண்ணவும் செய்யாது..

அப்படியே அது செய்ய வந்தாலும்...
அது சிங்கத்துக்கு அசிங்கம்னு
நினைச்சி...

தன்னோட கவுரவத்துக்கும்...
பங்கம் வரக்கூடாது..
அதே நேரத்துல தப்பிக்கணும்னு....
தீவிரமா... யோசிக்க ஆரம்பிக்குது...

அத பார்த்த கழுகு... சிங்கத்திடம்
கூண்ட திறக்காம... அப்படி என்னத்த தீவிரமா யோசிக்கிற...?

உடனே...அந்த சிங்கம்...
சிரிச்சிட்டே கழுக பார்த்து சொல்லுச்சி...

இல்ல...அன்னைக்கு என்னமோ சொன்னயே...???

நா செத்ததுக்கு அப்புறம்...
என்ன தின்னு...
உன்னோட வயித்துல ஜீரணமாக்கி...
அடுத்த நாளே...
இந்த பூமிக்கு உரமா தூவிடுவேன்னு...

சவால்லாம் கூட விட்டியே...!!!

இனிமே... நீ நினைச்சாலும்...
நா செத்ததுக்கு அப்புறம்
உன்னால.... என்ன திங்க முடியாது...!!

செத்தாலும் நா சிங்கம் டா...!!
உன்னோட அசிங்கம் இல்ல..!!ன்னு
கூண்டுக்குள்ள இருந்துக்கிட்டே
கர்ஜனையிலை சொல்லுச்சி...!!

அத கேட்ட கழுகு... சிங்கத்த பார்த்து...

கூண்டுக்குள்ள இருக்குற உனக்கே..
இவ்வளவு திமிர் இருந்தா..?
எனக்கு எவ்வளவு இருக்கும்...???

தன்னோட சவால நிறைவேத்த...

நீ செத்தா.. என்னோட வயித்துல தான்
ஜீரணம் ஆகணும்னு....
கூண்ட திறந்து விட்டுச்சி...

உடனே அந்த சிங்கமும்...

அத நா... செத்ததுக்கு அப்புறம் பார்க்கலாம்னு..
அங்கிருந்து வேகமா... கிளம்பி போயிடுச்சி...!!

சில இடங்களில்... உடல் வலுவ விட
மூளையின் வலு அதிகம்...

Written by
Spark Mrl K (க.முரளி)


நன்றி (வாசித்தமைக்கு)

Tuesday, 19 November 2019

காகாவுக்கு சோறு வச்சிட்டியா..?


ஒரு நாட்ட சிங்கராஜா என்ற  
ஒரு அரசன் ஆண்டு வந்தான்... 

தன்னோட பேருக்கு ஏத்த மாதிரி 
கம்பீரமான நடை... 
எதிரியை வேட்டையாடும் குனம்... 
என எல்லாம் அவன்கிட்ட இருந்துச்சி...

சுத்தியிருக்குற சின்னச் சின்ன நாட்ட... 
தன்னோட படை பலத்தைப் 
பயன்படுத்தி.. கட்டுப்பாட்டுல வச்சிருந்தான்... 

அதுனாலயே அந்த ராஜாவுக்கு...
எதிரிங்க அதிகமா இருந்தாங்க...!! 

சிங்கராஜாங்கற அந்த பேருல...
சிங்கம்னு இருக்குறதால... 
என்னவோ தெரியல...

சிங்கம் காட்டுல தன்னோட உணவ.. 
வேட்டையாடி திங்குறமாதிரி....

இவரும் தன்னோட உணவ 
வேட்டையாடித்தான் தின்பார்...

அதுக்காகவே அந்த அரசன்...
தன்னோட அரண்மனையில... 
வேட்டையாடிய உணவை சமைக்க... 
பிரத்யோகமா ஒரு சமையல்காரனை 
வேலைக்கு வச்சிருக்கார்... 

அடிக்கடி அந்த சமையல்காரன் கிட்ட 
சிங்கராஜா ஒரு விஷயத்த 
திரும்பத் திரும்ப சொல்லுவார்... 

அதாவது... என்னென்னா...

நான் இன்னைக்கு 
உயிரோட ஆரோக்கியமா இருக்கான்னா...!!
அது என்னோட முன்னோர்கள் 
செஞ்ச புண்ணியம்...!! 

அதுனால... 
தினமும் சமைக்கிற உணவுல...
கொஞ்சம் எடுத்து... 
என்னோட முன்னோர்களான 
பித்ருக்களுக்கு (காகம்) படைச்சதுக்கு 
அப்புறம் தான்.... 
எனக்கு வைன்னு சொல்லுவார்...!!!

ராஜா சொன்னதுனால... 
அந்த சமையல்காரனும் 
தினமும் தான் சமைக்கிற உணவ... 
காகத்துக்கு வச்சிட்டுத்தான் 
ராஜாவுக்கு வைப்பான்...

அவன் தினமும் சோறு வைப்பதால்... 
அங்க சாப்பிட வரும் காகம் அனைத்தும்... 
அந்த சமையல்காரன் கூட 
நல்லா பழக ஆரம்பிச்சிடுச்சி...!! 

அவன் மூணுவேளையும் 
உணவு கொடுக்குறதால...., 
அந்த காக்கா எல்லாம் அவன 
கடவுளாவே பார்க்க ஆரம்பிச்சிடுச்சி... 

காரணம்... 
அந்த காகத்த பொறுத்த வரைக்கும்.. 
ராஜா சோறு வைக்கல...! 
அவன் தான் சோறு வைக்கிறான்...!! 

அந்த சமையல்காரனுக்கும் 
காக்காவுக்கு சோறு வைக்கிறதுல 
அளவுக்கு அதிகமான சந்தோசம்...

காரணம்...  
பறவைகளுக்கு தன் கையாள 
உணவு அளிக்கிரதுனால....
தனக்கு கண்டிப்பா புண்ணியம் சேரும்... 

அந்த புண்ணியம் 
தன்னோட வருங்கால சந்திகளை 
ராஜா மாதிரியே ஆரோக்கியமா 
வாழ வைக்கும்னு....
அவன் முழுசா நம்புறான்...!!

ஆனா....
இது எல்லாத்துக்கும் மேல...
ஒரு உண்மைய சொல்லனும்னா...!

 அந்த ராஜா... 
தன்னோட சமையல்காரன் உட்பட 
யாரையுமே நம்பாம... 

எதிரிங்க எப்படி வேணும்னாலும் 
உள்ள வரலாம்... 
சோத்துல விசம் வச்சுக்ழ்கூட
தன்ன கொல்ல பார்க்கலாம்னு...

எளிதில் செரிமானம் ஆகக்கூடிய 
காகத்துக்கு சோறு வச்சி... 
அது சாகலேன்னா... 

அதுக்கப்புறம் அந்த சோத்த 
அவன் சாப்ட்டுட்டு... 
ஆரோக்கியமா உயிர் வாழலாம்னு... 
வாழ்ந்துட்டு இருக்கான்...!!!

இது தெரியாத சமையல்காரன்...
தினமும்... 
கா..கா..கான்னு கத்தி கத்தி சோறு வைக்க...

அந்த காக்கா... அத சாப்ட்டுட்டு... 
சோறு வைக்கும் சமையல்காரனுக்கு...
நன்றி சொல்லும் விதமாக...

பதிலுக்கு
கா.. கா.. கான்னு கத்திட்டு போச்சாம்...

நம்மல்ல பலபேர்...

அந்த சமையல்காரன் மாதிரி
உதவி செஞ்சிக்கிட்டு...!

அந்த காக்கா மாதிரி
நன்றி சொல்லிக்கிட்டும் தான்
வாழ்ந்துக்கிட்டு இருக்கோம்...!!

குறிப்பு : என்னையும் சேர்த்து

Written by
Spark Mrl K (க.முரளி)

நன்றி (வாசித்தமைக்கு)


Tuesday, 12 November 2019

பேனாவும் பேப்பரும் காதலிச்சதாம்...!!!!


பத்து வருஷத்துக்கு முன்னாடி
ஒரு பையன்...
ஒரு பொண்ண ரொம்ப நாளா
ஒன் சைடா லவ் பண்றான்...!

எத்தனையோ தடவ...
தன்னோட காதல சொல்லனும்னு,
அவ கிட்ட போய்...

சொல்லத் தைரியம் இல்லாம..,
திரும்பி வந்திருக்கான்...!!

அந்த பொண்ணோட வீட்டுல...
அவளுக்குன்னு ஒரு தனி அறை உண்டு..!

அந்த அறையில இருக்குற...
ஜன்னல் வழியா...
அவ வெளியுலகத்தை பார்த்து
ரசிக்கும் போதெல்லாம்

அங்கிருக்கும் சாலையோரம் நின்று...
அந்த பெண்ணையே பார்த்து
அவன்... தனக்குள்ளேயே சிரிப்பான்...

ஒரு நாள்...
அந்த பொண்ணு வீட்டுல...
அவளுக்கு மாப்பள பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க...

அத தெரிஞ்சிக்கிட்ட அந்த பையன்...

இனிமே காத்திருந்தா...
இன்னொருத்தன் அவள கூட்டிட்டு போயிடுவான்னு...,
தைரியத்த வரவழச்சிக்கிட்டு...
காதல சொல்ல கிளம்பிட்டான்...!!!

அன்னைக்கிருந்த கால கட்டத்துல...
ஒரு பையன் தன்னோட காதல சொல்லனும்னா...???

சரியோ...! தவறோ...!!

அவனுக்கு தெரிந்த வார்த்தையை
கவிதையாக எழுதி...
ஒரு காதல் கடிதமா (LOVE LETTER)
அவகிட்ட கொடுக்கணும்...!!!

அதே மாதிரி... அந்த பையனும்...

தன்னுடைய...
இடது கையில... ஒரு பேப்பரா பிடிச்சி...
வலது கையாள... பேனாவ எடுத்து...

ஜன்னலோரம் இருக்கும் அந்த
பொண்ண பார்த்துக்கிட்டே
கவிதை எடுத்த ஆரம்பிக்கிறான்...!

அந்த பையன்...
அந்த பொண்ண பார்த்துக்கிட்டே
எழுத ஆரம்பிச்சாலும்.....

அவன் எழுதுற பேப்பர் என்னவோ...
கவிதை எழுதுற பேனாவை 
மட்டும் தான் பார்க்குது...!

காரணம்... அந்த பேனா...
பேப்பர் கிட்ட மட்டும் தான்...,
எழுத்து வடிவத்துல பேசுது....!!

அந்த பையன் கவிதைய
எழுத... எழுத...
பேப்பருக்கு பேனா மீது
ஒரு ஈர்ப்பு வர ஆரம்பிக்க...

இறுதியாக...

இந்த கவிதை வேண்டும் என்றால்...
உன்னை வர்ணித்து....
நிலவோடும், சந்திரனோடும் ஒப்பிட்டு....
பொய்யாக எழுதியிக்கலாம்...!
ஆனால் என் காதல் நிஜம்...!!
 
என்று எழுதி முடித்த அடுத்த நொடி...
அந்த பேப்பருக்கு... பேனாவின் மீது
காதலே வந்துவிட்டது...!!!

இருந்தும் வேறு வழியில்லாமல்...
தன்னுடைய காதலை மறைத்து...
தன் காதலனை (பேனாவை) பிரிந்து
அவனுடைய காதலை வெளிப்படுத்த
அந்த காகிதம்... காதல் கடிதமாக
அந்தப் பெண்ணிடம் சென்றது...

Written by 
Spark MRL K (க.முரளி)


Sunday, 10 November 2019

ஆணிவேர்



ஒரு பெரிய நகரம்...
அங்கிருந்து 5 மைல் தூரத்துல,
ஒரு சின்ன கிராமம்...

இந்த ரெண்டு ஊருக்கும் இடையில்... 
ஒரே ஒரு வண்டிப்பாதை மட்டும் இருக்கு...

அந்த கிராமத்துல வாழுற மக்கள்...
ஏதாவது பொருள் வாங்கணும்னா...
அந்த வண்டிப்பாதையா பயன்படுத்திதான்
நகரத்துக்குப் போகமுடியும்...!

அந்த வண்டிப்பாதையில் ஒரு ஆலமரம்...
ரொம்ப வருஷமா... எங்கயும் போகாம...  
அங்கயே வாழ்ந்துட்டு இருக்கு...!

அந்த மரத்துக்குப் பக்கத்துல... 
ஊர் பொதுக் கோவில் ஒன்னு இருக்கு...

அந்த பாதையில... டவுனுக்குப் போகுற...
ஊர்காரங்க எல்லோரும்... 
அந்த கோவில்ல சாமி கும்பிட்டுட்டு...

கொஞ்ச நேரம்.... அந்த மரத்தடியில... வெயிலுக்கு இதமா...
உக்காந்து என்திரிச்சிட்டுத்தான் போவாங்க...!

ஒரு நாள் சரியான மழை... 
அந்த வண்டிப்பாதை முழுக்க 
குண்டும் குழியுமா ஆகி...
அதுல தண்ணி தேங்க ஆரம்பிச்சிடுச்சி...!

அன்னைக்கு அந்த வழியா 
சைக்கில்ல வந்தவங்க... 
பைக்கில வந்தவங்க... 
எல்லோரும்... கொஞ்சம் இல்ல... 
ரொம்பவே கஷ்டப்பட்டாங்க... !!

அதுக்கடுத்த நாள்... 
அந்த ஊர்ல இருக்குற பொதுமக்கள்
ஒன்னு கூடி ஒரு முடிவெடுத்து... 

எங்க ஊருக்கு...
தார் ரோடு போடணும்னு... 
அரசாங்கத்துக்கு மனு போட்டாங்க... 

நாட்கள் நகர ஆரம்பிச்சது... 

ஆனா... தார் ரோடு போடா.. 
எந்த நடவடிக்கையும் நடக்கல..!!

அதைத்தொடர்ந்து... 
ஊர்மக்கள் போராட்டத்துல இறங்கி... 
ஒருவழியா ரோடு போட.. 
அரசாங்கத்த ஒத்துக்க வச்சாங்க...!! 

இப்ப ரோடு போடுற அதிகாரி... 
சாலைய பார்வையிட வந்தார்...!

வந்தவர் ஊர் மக்கள் கிட்ட... 
ரோடு போடுறதுக்கு,
வண்டிப்பாதையில இருக்குற ஆலமரம் 
இடைஞ்சலா இருக்கு...!

ஒன்னும் மரத்த வெட்டனும்...!!
இல்லைனா அந்த கோவில இடிச்சி வேற இடத்துல கட்டனும்...!!!
என்ன பண்ணலான்னு சொல்லுங்க..? ன்னு 
கேட்கார்.....

அதுக்கு அந்த ஊர்க்காங்க,
எல்லோரும் ஒன்னுகூடி... 

கோவில இடிச்சா... 
சாமிக்குத்தம் வந்து... 
எங்க ஊர்... மழை தண்ணி இல்லாம 
கஷ்டப்படும்னு... 

எப்படி பார்த்தாலும் கொஞ்ச நாள்ல..
குண்டு குழியுமா ஆகுற... 
அந்த ஊழல் தார் சாலைய போடுறதுக்கு...!

பூமிக்கு மழைய தரும் அந்த மரத்தை... வெட்டிடுங்கன்னு சொல்லிட்டு போயிட்டாங்க...
அந்த ஊர்க்காரங்க...!!!

"மழை தரும் கடவுள்...!
  மரம் மட்டுமே...!!"

Written by 
Spark Mrl K (க.முரளி)




Saturday, 2 November 2019

காத்திருப்பு


சென்னையில ஒரு முக்கிய சாலை...
பகல் முழுக்க... எத்தனையோ வாகனங்கள்
அதில் சென்றாலும்.....

இரவு 12 மணிக்கு மேல்...
ஒரே ஒரு சைக்கில் மட்டும்
அந்த சாலைய ஆட்சி பண்ணுது...!!

எப்பவுமே அந்த சைகிள சுத்தி
குறைஞ்சது பத்து பேராவது
சுத்தியிருப்பாங்க...

எல்லோரும் வருவாங்க...
பத்து ரூபாய்க்கு வாங்கி குடிச்சிட்டு
போயிருவாங்க....

அந்த இடத்துல எப்பவுமே
அண்ணே ரெண்டு டீ...
அண்ணே ஒரு டீ ன்னு
எப்பவுமே சத்தம் கேட்டுட்டே இருக்கும்...!

அந்த சைக்கிளுக்கு சொந்தக்கார பெரியவர்...
பகல் முழுக்க தூங்கிவிட்டு...
இரவானதும் சைக்கிளில் டீ விற்க
மறக்காம வந்துடுவார்...

அவருக்கு போலீஸ்னா கொஞ்சம் பயம்...

காரணம்...
பல சமயம் இவர் கிட்டயே
டீ வாங்கி குடிச்சாலும்...

சில சமயம்...
கூட்டம் போடாத...
கிளம்பு கிளம்புன்னு சொல்லி...
அந்த இடத்துல இருந்து
துரத்தி விட்டுடுவாங்க...!!

இப்படித்தான் ஒரு நாள் இரவு
அவர் வழக்கம் போல சைக்கிளில்
டீ வித்துட்டு இருக்க..!!!

அந்த பக்கமா பைக்கில் வந்த போலீஸ்காரர்
அவர துரத்தி விட....

அவரும் வேற வழியில்லாம...
அங்கிருந்து கொஞ்ச தூரம் தள்ளி
மறுபடியும்... டீ விற்க ஆரம்பிக்கிறார்...!

போன போலீஸ் திரும்பி வரும்போது...
அவர் டீ விற்கிறத பார்த்துக் கடுப்பாகி...

“ஏவ் பெருசு...
நா அவ்வளவு சொல்லியும்...
ரோட்டுல கூட்டம் சேர்த்துட்டு இருக்க...
கடைய காலி பண்ணுயா...”
என்று கோபமாக சொல்ல

அங்க டீ குடிக்க வந்தவாங்க முன்னாடி
அவருக்கு கொஞ்சம்
அவமானமா போயிடுச்சி...!!

உடனே அந்த பெரியவர்...

“அதான் கடை போடுறதுக்கு தினமும்
உங்களுக்கு வாடகை (மாமுல்) கொடுக்குறேனே...
ஒரு பத்து நிமிஷம் பொறுத்துக்கோங்க...
டீ காலியாகப் போகுது..!
நானே கிளம்பிடுவேன் சார்...
என்று சொல்லி முடிக்கிறதுக்குள்ள...

அந்த போலீஸ்காரர் கோவப்பட்டு
கையிலிருந்த குச்சியால
ஓங்கி ஒரு அடி அடிச்சி...

சைக்கிள பிடுங்கி ஸ்டேஷன்ல நிறுத்திட்டு...
காலைல 10 மணிக்கு வந்து எடுத்துக்கோன்னு
சொல்லிட்டு போயிட்டார்...

அந்த பெரியவருக்கு...
இத்தன நாள் சோறு போட்ட அந்த சைக்கிள..
ஸ்டேஷன்ல தனியா விட்டுட்டுப்போக
மனசு வரல...!!

இப்ப.. வேற வழியில்லாம அந்த பெரியவர்...
அந்த ஸ்டேஷன் வாசல்லையே
விடிய விடிய காத்திருந்து...

காலைல 10 மணிக்கு ஸ்டேஷன்ல
கையெழுத்துப்போட்டு... சைக்கிள வாங்கி...
வீட்டுல போய் நிம்மதியா படுத்தா...
தூக்கம் வர மாட்டேங்குது...
மன உளைச்சல் அதிகமாகுது.

மணி இப்ப 12...
இதுக்கப்புறமும் ஒழுங்கா தூங்கலைனா...
நைட் கண்ணு முழிக்க முடியாதுன்னு...
மன உளைச்சலுக்கு மருந்து வாங்க
டீ வித்த காச எடுத்துக்கட்டு
ஒயின்ஷாப்க்கு போறார்...

அங்க ஒரே கூட்டம்...
இருந்தாலும் பரவாயில்லன்னு
கூடத்தோட கூட்டமா போய் நின்னு
வாங்கலாம்னு நிற்கும் போது...

அங்கயும் அவருக்கு சப்புன்னு ஒரு அடி விழுது....
திரும்பிப்பார்த்தா..

அங்க ஒரு போலீஸ்...
கடைக்கு வந்த குடிமகன்களை
ஒழுங்க வருசையில நின்னு வாங்கிட்டு
போங்க மாட்டீங்களான்னு  திட்ட ஆரம்பிக்கிறார்...!!

காரணம்... கொஞ்ச நேரத்துகு முன்னாடி...
கடையில ஏதோ பிரச்சினைன்னு
கம்ப்ளைன்ட் போயிருக்கு...!

அதுனால... 
இரவு டீக்கடைய காலிபண்ண வந்த
போலீஸ்... இங்க காவலுக்கு வந்திருக்கு...!!

இப்ப வேற வழியில்லாம....
விடிய விடிய காவல்நிலையத்தில்
காத்திருந்த மன உளைச்சலப் போக்க

ஒயின்ஷாப்பின் வரிசையில் காத்திருக்கிறார்
அந்த பெரியவர்...!!

Written by
Spark Mrl K (க.முரளி)


குறிப்பு : மன உளைச்சலுக்கு மருந்து.. குடி கிடையாது.. இக்கதைக்கு தேவைப்பட்டதால் சேர்துள்ளேன். நன்றி

Wednesday, 30 October 2019

காதல் சொல்லும் விதம்...


இந்தக் காலத்துலையும்...
பழைமை மாறாத ஒரு பொண்ணு...!

அம்மா, அப்பா இல்லாம,
ஆசிரமத்துல வளர்ந்ததால...
எதுலையும் கொஞ்சம் முன்னெச்சரிக்கையா இருப்பா..!!

பார்ப்பதற்கு தேவதை போல் இருப்பதால்..,
யாராவது.. இவ அநாதை தான..?
வாழ்கை கொடுக்கிறேன்னு சொன்னா..!!
வேண்டாம்னா சொல்லுவா.? ன்னு
எத்தைனோ பேர் வந்து கேட்டும்...
அவ ஒருத்தனையும் ஏத்துக்கல...!!!

அப்படிப்பட்ட பொண்ண
ஒரு மூணு பேர் காதலிகிறாங்க...

ஒருத்தன்...
மூளைய மட்டும் மூலதானமா
வச்சி செயல்படுறவன்...!

இன்னொருத்தன்...
மனசுக்கு சரின்னு பட்டா...
அத உடனே பண்ணிடுவான்...!!

மூன்றாமவன்
மனசுக்கு சரின்னுபட்டா...
அத சிந்திச்சி... அப்புறமா செயல்ல இறங்குறவன்...!!!

ஒரு நாள் அவ கிட்ட...,
அந்த மூணுபேரும் தன்னோட
காதல சொல்ல கிளம்பிட்டாங்க...!

மனசுக்கு சரின்னு பண்றவன்
முதல போறான்...
அவகிட்ட... நீ இல்லாம என்னால
வாழ்வே முடியாது முடியாதுன்னு சொல்றான்..!

உடனே அவ...
அப்ப, இத்தன நாளா...
நா இல்லாம செத்தா போயிருந்தேன்னு சொல்லிட்டா...!!

அடுத்தது,
மூளைய மட்டும் நம்புறவன் போறான்...
அவன் கொஞ்சம் வித்தியாசமா யோசிக்கிறேன்னு..

என்னுடைய குழந்தைக்கு அம்மாவா
நீ இருப்பியா..? ன்னு கேட்டுட்டான்...!

உடனே அவ,
எங்க ஆசிரமத்துல... அப்பா இல்லாம,
நிறையா குழந்தைங்க இருக்கு...
அதுல ஒரு குழந்தைக்கு
நீ அப்பாவா இருப்பியான்னு கேட்டு...

அந்த ரெண்டு பேர் கிட்டயும்...
எனக்கு.. இன்னைக்கு இருக்குற
நவீன காதல்ல நம்பிக்கை இல்லைன்னு சொல்லி...
அனுப்பி வச்சிட்டா...!!!

இந்த ரெண்டையும் பார்த்துட்டு...
இப்ப கடைசியா
மூன்றாமவன் போறான்...
சிம்ப்ளா ஒன்னு சொல்றான்...
அவளும் அதுக்கு சரின்னு சொல்லிட்டா...!!

அத பார்த்த மத்த ரெண்டு பேருக்கும்
ஒரே குழப்பம்..!!!
அப்படி என்னெத்த சொல்லி
அவள சம்மதிக்க வச்சான்னு..???

ஆனா... அவன் பெருசா ஒன்னும் சொல்லல...!!

முதல்ல போன.. நீங்க ரெண்டு பேரும்...
அவளுக்கு புதுசா ஒரு வாழ்க்கை,
கொடுக்கனும்னு நினைச்சீங்க...!!!

ஆனா, கடைசியா போன நான்..
அவகிட்ட இல்லாத ஒரு விசயத்தை...
கொடுக்குறேன்னு சொன்னேன்..!

"எனக்கு சின்ன வயசுல இருந்து
அம்மா, அப்பா இருக்காங்க...
ஆனா மனசுக்கு பிடிச்ச மனைவி இல்ல...!!

அதுனால, அவங்கள நீ எடுத்துக்கிட்டு...
எம்மன்சுக்கு பிடிச்ச மனைவியா...
நீ வருவியான்னு கேட்டேன்..!!"

அவளும் சரின்னு சொல்லிட்டா..!!!

இதுக்கு பேர்தான் பண்டம் மாற்று முறை...!
பழைமை மாறாதது...!!

Written by
Spark Mrl K (க.முரளி)


Friday, 11 October 2019

திடீர் பஞ்சம்



ஒரு ஊர்ல..
ஒரு பணக்காரன் வாழ்ந்து வந்தான்...
அவன் கிட்ட... காசுன்னு யாராவது கேட்டு வந்தா...,

கையில் இருக்குறது... 
செல்லாத அஞ்சி பைசாவா இருந்தாலும்...
அத பத்திரப்படுத்தி... ஒளிச்சி வச்சிட்டு...
காசே  இல்லைன்னு சொல்லி திருப்பி அனுப்பிடுவான்..!

அவனுக்குன்னு இருக்குறது ஒரே பொண்ணு.
வயது இப்பதான் பத்த எட்டி பார்க்குது...

அவன் சேர்த்து வைக்கிறது,
பதிக்கி வைக்கிறது எல்லாமே...
அவனோட ஒரே பொண்ணுக்கு மட்டும் தான்...

திடீர்ன்னு ஒருநாள்... 
அந்த ஊர்ல பஞ்சம்... தலைவிரிச்சி ஆடுது...

காட்டுல விளைச்சலும் இல்ல...!
மக்களுக்கு வேலையும் இல்ல...!!
உண்ண உணவும் சரியா கிடைக்கல...!!!

அந்த ஊர் மக்கள் பஞ்சத்துல தவிக்கிறாங்க..,
ஆனா.. அவன் வீட்டுக் குடோன்ல மட்டும்
உணவுக்கு பஞ்சமே இல்ல...!

அப்ப ஊர்க்காரங்களாம் ஒன்னு கூடி...
ஒரு முடிவுக்கு வாராங்க... 
அந்த பணக்காரன பார்த்து... 
எப்படியாவது கொஞ்சம் பணத்த கடனா வாங்கி...
இந்த ஊர பஞ்சத்துல இருந்து காப்பாத்திடலாம்னு..!

ஆனா... வெக்கத்த விட்டு கை நீட்டி பணம் கேட்ட மக்கள... அந்த பணக்காரன் கை விட்டுட்டான்...

அப்ப அவனோட பத்து வயசு பொண்ணு... 
அப்பாவ பார்த்து...
அவங்களாம் பாவம் தான... பணம் கொடுத்தா தப்பாப்பா..? என்று கேட்க...

உடனே பணக்காரன் தன்னுடைய மகளிடம்...
பணம் கொடுக்குறது தப்பில்லம்மா.... 
ஆனா... பஞ்சத்துல அடிபட்டவங்க அந்த பணத்த திருப்பி தரமாட்டாங்களே...!
அது தப்புதான...?
என்று புத்திமான் மாதிரி பேசுவான்...

இப்ப... 
நாட்கள் கொஞ்சம் கொஞ்சமா நகருது... 
அந்த ஊர்ல... பஞ்சாயத்து எலக்‌சன் வருது...
ஒரு நல்ல தலைவன் வரனும்னு மக்கள் நினைக்கிறாங்க...
அதுல ஜெயிச்சே ஆகனும்னு பணக்காரன் நினைக்கிறான்.. 

உடனே... தன்னோட குடோன்ல இருக்குற உணவுப்பொருட்களில்... 
ஒரு சில வாரத்தில்  காலாவதியாகக்கூடிய (expiry date முடியக்கூடிய) 
பொருட்கள தனியா பிரிச்சி... 
ஊர் மக்களுக்கு தானமா கொடுக்குறான்...!
வேற வழியில்லாம அவங்களும் வாங்கிட்டு போறாங்க...!!

அதைப்பார்த்த அவனோட பொண்ணு... 

ஏம்ப்பா... நீ பாட்டுக்கு எடுத்து கொடுக்குறியே... 
அவங்க தா எதையுமே திருப்பி தரமாட்டாங்களே... 
அப்படினா நீங்க பண்றது தப்புதான...? 

உடனே அவன் தன்னுடைய மகளிடம்... 

எப்படியும் ரெண்டு மூணு வாரத்துல
இந்த உணவுலாம் கெட்டுப்போயிடும்... 
அதுக்குலாம் Expiry date முடியப்போகுது பாப்பா..!
ஆனா அவங்க மட்டும் நமக்கு ஓட்டுப்போட்டுட்டா....
என்று சொல்லி முடிப்பதற்குள்... 

அந்த பொண்ணு அப்பாவை குறுக்கிட்டு... 

அப்படினா நீங்க பதிக்கி வச்சிருக்குற பணத்துலையும்
Expiry date போட்டு இருந்தா.... 
அன்னைக்கே எடுத்து கொடுத்திருப்பீங்களாப்பா..?
என்று குழந்தைத்தனமாக கேட்க...

அதற்கு அந்த புத்தினாமால்... 
பதில் கூற முடியவில்லை...!!!

Written by
Spark MRL K (க.முரளி)

Tuesday, 8 October 2019

எதிர்காலம்


ஒரு சராசரி அப்பா அம்மாக்கு,
ஒரு அஞ்சி வயசு பையன்...
ஒரு நாள் பள்ளி முடிஞ்சி
ஆசை ஆசையா வீட்டுக்கு வாரான்...

வந்த வேகத்துல...
முதுகுல இருந்த மூட்டைய (பள்ளிக்கூட பை)
தூக்கி வீசிட்டு... சட்டைய கூட கலட்டாம...
வேக வேகமா... வெளிய போறான்....

அவன் போறத பார்த்த அப்பா..
பதரிப்போய் வெளிய வந்து பார்த்தா...
அதிர்ச்சி...!!

காரணம்...
வந்த வேகத்துக்கு... துளிகூட சம்பந்தம் இல்லாம...
பாடம் படிக்கிறத விட்டுட்டு...
ஒரு ஓரமா தெருப்பசங்களோட
விளையண்டுக்கிட்டு இருக்கான்...

இப்ப அப்பாக்கு பயம்...
பையன் ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சிட்டான்...
படிக்கிறது ஆங்கில வழி கல்வி...
அதனால என்னவோ இவனுக்கு தமிழ் சுத்தமா வரமாட்டேங்குது...

மத்த பாடத்துல நூறு மார்க் வாங்கினாலும்...
இந்த ஒத்த பாடத்துல பெயில் ஆனா..
அவன் வாழ்க்கை கெட்டுப்போயிடுமேன்னு நினைக்கிறார்...

அது நியாயமான பயம் தான்...
அதுக்காக அவன டியூசன்ல சேர்க்க நினைக்கிறார்...
அதுனால... சுதந்திரமா விளையாட ஆரம்பிச்ச பையன..
அந்த இடத்துல இருந்து விடாப்பிடியா கூட்டிட்டும் போறார்...

Cut பண்ணா....
அந்த ஏரியா தமிழ் டியூசன் எடுக்குற இடம்...
மாடியில பசங்க படிக்கிற சத்தம்...
கீழ வரைக்கும் கேட்குது...!!

"காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு."

என்ற பாரதியின் பாடல் வரியை
தமிழ் ஆசிரியர் பாட...
பின்னாடியே அங்கு பாடம் படிக்கும்
மாணவர்களும் கத்தி படிக்கிறாங்க...

படிப்புதான் முக்கியம்னு...
உற்சாகமா பசங்க படிச்சாலும்...
அஞ்சி வயசு பயனுக்கு..
அங்க படிக்க துளிகூட விருப்பமே இல்ல...

பாதியில விட்டுட்டுட்டு வந்த,
விளையாட்டோட நினைப்பு...
அவன படாய் படுத்துது...

அதையெல்லாம் பெருட்படுத்தாத..
அவனோட அப்பா...
அவனுடைய எதிர்காலம் கருதி...
டியூசன்ல சேர்த்துவிட்டுட்டு...
ஏதோ சாதிச்ச மாதிரி போக...

பெத்த அப்பாவே
நம்ம சுதந்திரத்துல கை வச்சிட்டர்ன்னு...
வேண்டா விருப்பா...  உம்முன்னு அவன் உக்காந்திருக்க...

பாரதி பாடலின் அடுத்த இரண்டு வரி...
அஞ்சி வயது சிறுவனின் எதிர்காலத்திற்காக ஒலிக்குது...!

மாலை முழுதும் விளையாட்டு – என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா....

Written by
Spark Mrl K (க.முரளி)