"கருப்பாயியக்கா
காலையிலேயே
பைய எடுத்துட்டு
எங்க போற..."
"ரேசன்ல
சீனி போடுரானுவடி...
சீக்கிரம் போனாத்தான கெடைக்கும்..."
"அதான் உம்மவன்
வீட்டுல சும்மாத்தான இருக்கான்
அவன போச்சொல்லலாம்ல...?"
"படிக்கிற பிள்ளைய
கடைக்கு அனுப்ப முடியுமா..."
"போக்கா...
உம்மவன நீதான் மெச்சிக்கணும்"னு
சலிச்சிக்கிட்டு போறா
பக்கத்து வீட்டுக்காரி...
சுத்தியிருக்குற
மூணு ஊருக்கும்
ஒரே ஒரு கடைதான்...
கடையில இருந்து
ரோடு வரைக்கும்
மக்கள் கூட்டம் வரிசையில நிக்கும்...
எப்ப போனாலும்
எதாவது இல்லைனு சொல்லுவான்
கடைக்காரன்...
இன்று
சீனி காலியானதால் வெறுங்கையுடன்
வீடு திரும்பினாள் கருப்பாயி...
எப்பதான்
விடிவுகாலம் வருமோ...
"அரிசிக்கும் பருப்புக்கும்
வேகாத வெயிலில
நிக்க வேண்டியிருக்கு..."
என்ற புலம்பலுடன்...
"நீயாவது படிச்சி
நம்ம நிலமைய மாத்தனும்யா..."
என்றாள் தன் மகனிடம்...
வருடங்கள் உருண்டோடியது...
கருப்பாயி மகனுக்கு
அவன் படிச்ச படிப்புக்கு..
எதிர்பாராத விதமா
அந்த ஊர் ரேசன் கடையிலேயே
வேலை கிடைக்குது...
இப்ப
குடும்பம் கொஞ்சம் வசதியாயிருச்சி...
பருப்பும், சீனிலாம்
வாங்க கடைக்கு போகத்தேவையில்ல...
இப்பலாம் பக்கத்து வீட்டுக்காரிட்ட
அவ ரேசன் கடைக்கு
போகும் போதெல்லாம்
அவள பாத்து
கருப்பாயி சொல்லுவா...
"பாத்தியாடி...
எம்மவன் படிச்சதுனாலதான்
இன்னைக்கு
நான் வேகாத வெயிலுல
நிக்க வேண்டியதில்ல..."
என்று சொல்லிமுடிக்க...
நாலு தெரு தள்ளியிருக்கும்
கடையில மகன் சொல்லுறான்...
"இன்னைக்கு
பருப்பும், சீனியும் இல்ல...
அடுத்த வாரம் தான் வரும்...
அரிசியும் கோதுமையும் மட்டும்தான்.."
வழக்கம் போல்...
பலர் சலித்துக்கொண்டு
செல்கிறார்கள்
அவர் அவர் வீட்டுக்கு....
No comments:
Post a Comment