அந்தப் பையன்
பள்ளிக்கூடத்துக்கு பத்து நிமிசம்
தாமதமா போனாக்கூட
பீட்டி வாத்தியார்
விசில் அடிச்சி கூப்பிட்டு
பின்னாடி ரெண்டு அடிகொடுத்து..
"இனிமே லேட்டா வருவ..?"
என்று சொல்லி அனுப்புவார்...
இவனும் பின்னாடி தேச்சுக்கிட்டே
அமைதியா வகுப்புக்கு போவான்...
படிச்சி முடிச்சி முதன் முதலா
வேலைக்கு பஸ்சுல போறான்...
அது அவனுக்கு பழக்கமில்லாத ஊர்...
இறங்கவேண்டிய இடம் வந்ததும்
கண்டக்டர் விசில் அடிச்சி
அவனை இறக்கி விட்டதும்...
அமைதியாக இறங்கிப்போனான்...
கொஞ்ச நாள்ல சம்பாதிச்சி
சொந்தமா பைக்கும் வாங்கிட்டான்....
முதன் முதலா அலுவலகத்துக்கு
கம்பீரமா அதுல போறான்...
இருசக்கர நிறுத்தத்தில்
வண்டிய நிறுத்தினான்....
தூரத்தில் வாட்ச்மேன் அவனை
விசிலடிச்சி கூப்பிட்டு..
"வண்டிய செண்டர் ஸ்டாண்ட்
போட்டு போப்பா" என்று சொல்ல...
இவனும் பூம் பூம் மாடு மாதிரி
தலையாட்டிட்டே போட்டுட்டு போய்ட்டான்...
அவன் பயப்படுவது
விசிலுக்கா அல்லது
விசில் வச்சிருக்கும் ஆட்களுக்கா
என்ற சந்தேகம் கூட வரலாம்...
அந்த தைரியத்தில் தான்
நானும் அவன் வீட்டுமுன் சென்று....
காலை நேரம்...
என்னிடம் இருக்கும் விசில ஊதுனேன்...
கையில் ஒரு
சின்ன மூட்டையுடன் வேகமாக
வெளியே வந்து...
அத என் வண்டியில் போட்டு...
"அதான் மாசாம் மாசம்
பத்து ரூவாய் வாங்குறீங்கல்ல...
எத்தனை நாளா சொல்றேன்...
இந்த காவ அடச்சிக்கிட்டு இருக்குன்னு...
எப்ப வருவீங்க"ன்னு
சத்தம் போட்டு போறான்...
என்ன இருந்தாலும்
நாங்க குப்ப அள்ளுறவங்க தான!!!
written by க.முரளி (spark MRL K)
No comments:
Post a Comment